அமுதமொழி – குரோதி – ஆடி – 30 (2024)


பாடல் 6.

மூலம்

உள்ளிருந்தே யென்று முணர்ந்துகினும் கண்டிலரென்(று)
உள்ளும் புறம்புமா வோமென்று – மெள்ள
நரருருவாய் ஆரூரில் வந்தான் நமையாண்
டருள்புரிஞா னப்பிரகா சன்

பதப்பிரிப்பு

உள்ளிருந்தே என்றும் உணர்ந்துகினும் கண்டிலர் என்று
உள்ளும் புறம்பும் ஆவோம் என்று – மெள்ள
நரர் உருவாய் ஆரூரில் வந்தான் நமை ஆண்டு
அருள்புரி ஞானப்பிரகாசன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – உள்நின்று உணர்த்தும் தன்மையும், அவனே ஆசிரியனாகி வந்த தன்மையும் உணர்த்தும் பாடல்.

பதவுரை

எல்லாவற்றையும் நிகழ்த்திக்காட்ட சாட்சிபாவமாக புறத்தில் நின்று உள்ளத்தில் இருந்து உணர்த்தி இயக்குபவனாக இருந்தாலும் தன்னை உணர்வில்லை என்று எண்ணம் கொண்டு அகத்திலும் புறத்திலும் வெளிநின்று உணர்த்தும் எண்ணம்கொண்டு அதைநிச்சயம் செய்துகொண்டு ஞானப்பிரகாசன் எனும் முனிவனாகி மானிடவடிவம் கொண்டு ஆருரில் வந்துநம்மை ஆண்டு அருள்புரிந்தான்.

விளக்கஉரை

  • நரன் – மாந்தன், அருச்சுனன், ஒருமுனிவன், ஓர்இயக்கன்
  • கண்டிலர்என்று – அநாதிகாலம் தொட்டு உயிர்களைக்காத்த போதும், மாயை பற்றி நிற்பதால் உயிர்கள் அதை உணரவில்லை என்பதை உணர்ந்து என்பது பற்றியது.
  • ஈசன் உயிர்களுக்கு விஞ்ஞானாகலர், பிரளயாகலர், சகலர் ஆகிய நிலைகளில் இருந்து அருள்செய்பவன் என்றாலும், அன்புநெறி கொண்டோருக்கே ஆசானமூர்த்தியாக அருளுவான் என்பது பெறப்படும்.

#அந்தக்கரணம் #அமுதமொழி #குரு #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply