![](https://areshtanaymi.in/wp-content/uploads/2022/02/Ayya-1.jpg)
பாடல் 4.
மூலம்
அரியயற்கு முன்னாள் அடிமுடியுங் காணாப்
பெரியவனே வந்து பிறந்து – துரியம்
பெருக்கின்றான் ஞானப் பிரகாச னாகி
இருக்கின்றா னாரூரில் இன்று
பதப்பிரிப்பு
அரி அயற்கு முன்னாள் அடிமுடியும் காணாப்
பெரியவனே வந்து பிறந்து – துரியம்
பெருக்கின்றான் ஞானப் பிரகாசனாகி
இருக்கின்றான் ஆரூரில் இன்று
சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
கருத்து – உள் நின்று உணர்த்திய முதல்வனே குருவடிவமாக வந்து பிறந்து தன்னை ஆட்கொண்டு அருளுகின்றான் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
திருவாரூர் திருத்தலத்தில் தன்மயமாய் நிற்கும் உயர் நிலையில் இருப்பவனும், முன்னொருமுறை திருமாலும், பிரம்மாவும் முறையே தேடி காண முடியாத திருவடியினையும், திருமுடியினையும் கொண்டவனாகிய பிறவாத் தன்னை உடையவனாகிய பெரியவனும் ஆனவன் தன் நிலையில் இருந்து இறங்கி வந்து ஆருர் தலத்தில் ஞானப் பிரகாசனாகி பிறந்து பரந்து விரிந்து இருந்து ஞானத்தினை அருளிக் கொண்டு இருக்கின்றான்.
விளக்கஉரை
துரியம் – நான்காவது, நான்காம் அவத்தை, யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை, பொதி எருது, சுமத்தல்
பெருக்குதல் – முதிர்வித்தல்
#சைவம் #சிவபோகசாரம் #குரு #குருவின்_பெருமை