பாடல்
எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி
முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்
தேவாரம் – நான்காம் திருமுறை – திரு நாவுக்கரசர்
கருத்து – காட்சிப் பொருளை சிவசக்தி ரூபமாகக் காணுதல் என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
ஒளிர்தல் கொண்ட பிறை நிலவினை அணிந்தவனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதி தேவியோடு இணைத்துப்பாடியும், அந்த பாடலுக்கு ஏற்றவாறு கூத்து தாளங்களை இட்டுக் கொண்டும், முகமலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரையில் இருக்கும் திருவையாற்றை அடையும் நேரத்தில் ஆண்குயில் பெண்குயிலோடு கலந்து காதல் கீதங்களைப் பாடியும் பின் இணைந்தும் வருவனவற்றைக் கண்டேன். அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் கண்டறியாத திருப்பாதங்களாகக் கண்டேன்.
விளக்க உரை
- எரி – நிலவு
- ஏந்து இழையாள் – அம்பிகை
- இலயம் – கூத்துக்கு ஒத்த தாளலயம்
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை # நான்காம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருவையாறு