அமுதமொழி – குரோதி – ஆவணி – 15 (2024)


மூலம்

இருளுதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருளுதய நன்றா யருளி – மருளுதய
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமுஞ்
சாற்றியஞா னப்பிரகா சன்

பதப்பிரிப்பு

இருள் உதய நீக்கும் இரவியைப்போல் என்னுள்
அருள் உதய நன்றாய் அருளி – மருள் உதயம்
மாற்றியவன் ஆரூரன் மாமறையும் ஆகமமும்
சாற்றிய ஞானப்பிரகாசன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – ஆசானமூர்த்தியாய் நின்று எய்தும் பயன்களில் பாசநீக்கமும், அருள்விளக்கமும் பற்றி அருளிய பாடல்.

பதவுரை

ஆரூரில் உறைபவனும், பெரிய வேதங்களையும், ஆகமங்களையும் அறிவித்தவனாகிய ஞானப்பிரகாசனானவன், சூரிய ஒளியானது இருளைநீக்கும் தன்மையைப்போல் என்னுள்ளே அருள் தோற்றத்தினை தோன்றச்செய்து நன்றாய் அருளி அநாதிகாலம் தொட்டு தொடர்ந்து பெருகிவரும் பிறவியின் மயக்கம் மாற்றியவன்.

விளக்கஉரை

  • மருள் – மயக்கம், பேயாட்டம், பயம், திரி புணர்ச்சி.வியப்பு, உன்மத்தம், கள், குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று, எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, பெருங்குரும்பை, புதல், பேய், ஆவேசம், புல்லுரு
  • இருள் உதயநீக்கு – அருள்தோற்றம் பற்றிய கணத்தில் மருள்நீக்கம் முற்றிலும் நீங்காதவாறு சிந்தித்தல் தெளிதல் போன்றவற்றை முற்றிலும் நீக்கி எனும் பொருள் பற்றி நின்றது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *