மூலம்
ஒழியாத பேரின்பத் துள்ளாய் உலகில்
விழியா திருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற் கருள்
பதப்பிரிப்பு
ஒழியாத பேரின்பத்து உள்ளாய் உலகில்
விழியாது இருந்து விடவே – அழியாத
பூரணா செங்கமலப் பொற்பாதா தென்கமலை
ஆரணா நாயேற்கு அருள்
சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
கருத்து – ஆனந்தநிலையினைஅருளவேண்டும்என்பதைகூறும்பாடல்.
பதவுரை
அழியாத பூரணத்துவத்தை உடையவனும், செந்தாமறை போன்ற நிறம் உடைய பொற்பாதங்களை கொண்டு தென்கமலையில் வாழும் வேதம் போன்றவனும், அழியாமலும் குறைவுபடாமலும் என்றும் நிலைத்து இருக்கும் பேரின்பத்தில் இருப்பவனும் ஆகியவனே! உலகில் பிறவி எடுக்காது இருப்பதன் பொருட்டு நாய் போன்ற அடியவன் ஆகிய எனக்கு அருள் புரிவாயாக.
விளக்கஉரை
- ஆரணம் – வேதம்
- உலகில் விழியாது இருந்துவிடவே – ஞானஆசிரியன் வழிநிற்றலும், ஒருவேளை உலகியலில் இருந்து மீளவரும்படி நேருமாயின் அந்தமீட்சியும் ஆசிரியன் வழிநின்று உணர்தலால் நீங்கப்பெறும் அந்தநிலையை அடையும் பொருட்டு பிறப்பு எடுக்காது இருத்தல் என்பது பற்றியது.
#அந்தக்கரணம் #அமுதமொழி #குரு #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்