வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 39


உமை :

வைரக்கியம் பற்றி உரைக்கவேண்டும்.

மகேஷ்வரர் :  

ஆசைக்கு ஈடான துன்பமும் இல்லை. விடுவதைப் போல் இன்பமும் இல்லை. ஒருவன் விருப்பங்களை எல்லாம் விட்டப்பின் பிரம்ம பிராப்தத்திற்கு உரியவனாகிறான். நல்லறிவு இல்லாதவர்களால் விட முடியாததும், தேகம் தளர்ந்தாலும் தளராரதும், உயிருள்ள வரை துன்பம் தரத் தக்கதான ஆசை விடுபவனுக்கே சுகம் அதிகம் என்பதை உணர்பவன் வைராக்கியம் அடைவான்.

விருப்பம் விரும்பியதை அனுபவிப்பதால் தணிவதில்லை. அது நெய்யினால் தீயானது அதிகமாக ஆவது போல் இன்னும் அதிகரிக்கும். பற்றுதல் ஏற்படுத்தி ஜொலிப்பது போல் இருக்கும் காமமானது மெய்யறிவு இல்லா மனிதர்களை சப்தாதி விஷயங்களினால் மயக்கி எரித்து விடுகின்றது. உலகிலுள்ள காம சுகங்களும், தேவ லோக பெரிய சுகங்களும் ஆசையற்றவனின் சுகத்தில் பதினாறின் ஒரு பாகத்திற்கு சமம் ஆகாது என்பதை வைராக்கியம் கொண்டவன் அறிவான்.

ஐம்புலன்களையும் ஆறாவதான மனதினை கட்டி எப்பொழுதும் ஆத்மாவிடம் வைக்க வேண்டும். புலன்களை விஷயத்தில் செலுத்துவதால் கெடுதலே. இவ்வாறு இந்திரியங்களை ஆத்மாவிடம் சேர்த்து கட்டும் திறமை உள்ளவன் பாவங்களையும், துயரத்தையும் அடையான்.

பெரும் உபாயங்களால் தேடப்பட்டவைகளும், நிலையற்றவையும், குணமற்றவையும் துன்பத்தை முதலும் முடிவுமாக கொண்டவை ஆன காம சுகங்களினால் என்ன இன்பம் இருக்கின்றது? வியாதி கொண்டு இருக்கும் மனிதனுக்கு மரணம் வரும் போது என்ன சுகம் இருக்கிறது? காட்டில் புலியானது ஆட்டை தூக்கி செல்வது போல் காமத்தில் திளைத்து விரும்பம் நிறைவேறா மனிதனை எமன் தூக்கிச் செல்கிறான். சம்சாரத்தில் இருக்கும் மனிதர்கள் பாவத்திற்கு அஞ்சுவது இல்லை.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply