அமுதமொழி – குரோதி – கார்த்திகை – 14 (2024)


பாடல் : 8

மூலம்

தேடுந் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்றருளிற் கூட்டினான் – நாடரிய
ஞானப்ர காசனுயர் நற்கமலை மானகர்வாழ்
வானப் பிறையணிந்த மன்

பதப்பிரிப்பு

தேடும் திரவியமும் சிற்றறிவும் பற்றுதலும்
கூடும்பொய் என்று அருளி கூட்டினான் – நாடு அறிய
ஞானப்ரகாசன் உயர் நற்கமலைமானகர் வாழ்
வானப் பிறையணிந்த மன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – திரவியம், சிற்றறிவு, பற்றுதல் ஆகியவை பொய் என்றுகாட்டி அதை விலக்கி அருள்கூட்டுவித்த தன்மையைக் கூறும் பாடல்.

பதவுரை

பேரறிவாலும், மெய்யாலும் உயர்ந்ததும் நல்லதுமான கமலை எனும் திருவாரூர் மாநகரத்தில் வாழ்பவனும், வான் பிறை எனும் சந்திரனை அணிந்தவனுமாகிய ஞானப்பிரகாசன், வாழத் தேவைப்படும் திரவியம் எனப்படும் பொருளும், உலகியல் பற்றி நிற்கும் சிற்றறிவும், உலகம் மற்றும் அவற்றின் மீது கொண்ட பற்றுதலும் அவைகளைப் பற்றி ஒன்று சேர்வதும் பொய்யானது என்று அருள் செய்து தன்னை நாடிய அடியவர்களிடத்தில் மெய் அருளைக் கூட்டினான்.

விளக்கஉரை

  • தேடும் திரவியமும் – முன்செய்த ஜன்மங்களில் செய்தவினைக்கு ஈடாக செல்வம் ஈட்டுகிரோம் என்பதை உணராமல்தாமே செல்வத்தினை சேர்த்தோம் எனும் மயக்கநிலை.
  • சிற்றறிவு – பேரறிவினை சிந்தியாமல் நூல் பல கற்றுஅடைந்த அறிவு
  • பற்றுதல் – சிற்றறிவு கொண்டு பெறப்பட்டதாகிய அறிவினைக் கொண்டு அதைப்பற்றிக் கொள்ளுதல்
  • திரவியம் என்பது பொய் என்பதுவும், திருவருள்ஒன்றே மெய் எனவும் பெறப்படும். திருவருள் கூடியதால் திரவியம் முதலியவற்றை பிரிவித்தான் என்பது பொருள்.
  • வானப்பிறையணிந்தமன் – தக்கனது சாபம் தன்னைத் தொடராதவாறு தன்னைப் பற்றுக்கோடாக கொண்டதால் சந்திரனை வாழ்வித்த பெருமான் என்பது ஒத்து தன்னையும் வாழ்வித்தவன் எனும்பொருள் பற்றியது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *