
பாடல்
ஒருமையுடன் ஈசனருள் ஒங்கிஎன்றுந் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு)
ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போதுதா னே
சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
கருத்து – இறைவன் பரிபாகம் உடைய உயிர்களுக்கு ஞானத்தை உணர்த்தி ஆசான் மூர்த்தியாக வந்து அருளுதலும், ஏனையோருக்கு அவ்வாறு அருளாமையும் கூறும்பாடல்.
பதவுரை
வினைகள் நீங்கப்பெற்ற பிறகு அந்த மனதில் வேறு எவ்விதமான சிந்தனைகளும் இல்லாமல் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து எனும் அருமையான உணர்வு வெளிப்படும்; அவ்வாறு அறியா உயிர்களிடத்தில் உயர்ந்தநிலை, மேன்மை, கீர்த்தி போன்றவைகள் இல்லாமல் அது குறித்து பெருமை, வெறுப்பு கொண்டு தீங்கு செய்தல், செருக்கு கொண்டு இருத்தல், சினம் கொள்ளுதல், அன்பு பாசம் கொண்டு அபிமானத்துடன் இருத்தல், ஆசை போன்ற வினைகள் நீங்கம் பெறுதல் போன்றவை விலகாமல் இருக்கும் போது முதல்வன் திருவருள் கைகூடுதல் என்பது அரிதானது.
விளக்கஉரை
- இடும்பு – அகந்தை, அவமதிப்பு, வெறுப்பு, கொடுஞ்செயல், தீங்கு, சேட்டை
- ஆங்காரம் – செருக்கு, அகங்காரம், அபிமானம்
- தூங்கல் – தொங்கல், தராசு, தாழ்கை, நெருங்குகை, உறக்கக்கலக்கம், சோம்பல், சோர்தல், ஓரிசை, வஞ்சிப்பா ஓசை, கூத்து
#அந்தக்கரணம் #அமுதமொழி #குரு #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்