பாடல்
எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திரு நாவுக்கரசர்
கருத்து – முக்தி வேண்டி விண்ணப்பித்தல்.
பதவுரை
நிலைத்த பேரின்ப வடிவாக இருப்பவனே, அழகியதான புகலூர் தலத்தில் மேவி இருக்கும் புண்ணியனே, நினையும் தன்மை உடையேனாகிய நான் எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினைப்பதை அல்லாது வேறு எதனை விரும்புவேன்? நினது கழலினை அணிந்த திருவடியை கைதொழுது காணும் காட்சி அல்லாது வேறு ஒன்றையும் விரும்ப மாட்டேன்; உன்னை விடுத்து வேறு எந்த பற்றுக்கோடும் இல்லாதவனாக இருக்கிறேன்; யான் வாழ்வதற்குப் பொருந்தி இருப்பதானதும் உறை போன்றதுமான இந்த உடம்பிலே ஒன்பது வாசல் வைத்தாய்; உடலின் தன்மையால் அவையாவும் ஒன்று சேர்ந்து அடைக்கப்படும் காலத்தில் உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன்; ஆதலின் அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக.
விளக்க உரை
- திருநாமம் - சிவபிரான் பெயரைக் குறிக்கும் சொல்.
- திறம் – இயல்பு
- அளி அற்றார் – தலைவரால் அருளப் பெறும் அருளை இழந்தவர்
- ஒருகாலும் - கூறாத இடங்களிலும் கூட்டிக் கொள்ளலாம்.
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #ஆறாம்_திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #திருப்புகலூர்