உமை :
வைரக்கியம் பற்றி உரைக்கவேண்டும்.
மகேஷ்வரர் :
தேவேந்திரன் எப்பொழுதும் இன்பம் அனுபவிப்பதில்லை. அவனுக்கும் மிகப்பெரிய துன்பம் இருக்கின்றது. அவனும் நித்திய சுகத்தை அடைவதில்லை.இன்பமும் துன்பமும் மாறி மாறி வருபவை. தனங்கள் எல்லாவற்றிற்கும் அழிவுதான் முடிவு; சேர்க்கைக்கு பிரிவு முடிவு; வாழ்வுக்கு மரணம் முடிவு; நிலை உயர்வையும், தாழ்வையும் கண்டு இவை அநித்தியம் என்று அறிந்து துன்பம் தர தக்கவை என்றும் வைராக்கியம் கொள்ள வேண்டும்.
பொருளை ஈட்டுதல், அதைக் காத்தல், அழிப்பது, செலவழித்தல் ஆகியவை துன்பம் தரத்தக்கவை. பொருள் உடைய மனிதனை அரசன், கள்வன், தாயார், பூதங்கள், செலவு ஆகிய ஐந்து பெரும் பகைவர்கள் எப்பொழுதும் சூழ்ந்து இருக்கின்றனர். பொருள் இல்லாதவனை துன்பங்கள் சேர்வதில்லை. பொருள் கிடைப்பதால் ஆசை முடிவுறுவது இல்லை என்று உணர்ந்தால் வைராக்கியம் உண்டாகும்.
பொருள் ஈட்டும் ஆசையானது விறகில் தீப்பற்றுவது போல் அதிகமாகும். நான்கு கடல்களையும் மேகலை எனும் அணிகலனாக அணிந்திருக்கும் பூமியினை ஜெயித்தப்பின்னும் அக்கரையை ஜெயிக்க எண்ணம் தோன்றும். பற்று குற்றம் உடையது என்றும் புற்று சேர்க்கும் கரையான் பற்றுதலினால் கொல்லப்படுகின்றது என்றும் உணர்வு வைராக்கியத்தினால் அடையப்பெறும்.
மிகப்பெரிய தேசத்தினை ஆண்டாலும் அவன் இருப்பிடம் மிக சிறியது. பெரிய பற்றினால் அவன் அனுபவிப்பது மிக கொஞ்சம். ‘எல்லாம் எனது பலத்தினால்‘ எனும் எண்ணம் உடையவன் அனுபவிக்கும் பிரயோஜனம் மிகக் கொஞ்சமே. மனிதர்களின் தேகயாத்திரை ஒருபடி அரிசி அளவு என்பதை உணர்பவன் வைராக்கியம் அடைவான்.