வைத்த பொருணமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச் சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால் மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர் அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் பேதைநெஞ்சே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – சிவாய நம என்று ஓதாமல் அவன் அருள் பெறல் இயலாது எனக் கூறும் பாடல்.
பதவுரை
மெய்யுணர்வு இல்லாத அறியாமையை உடைய மனமே! நமக்கு என்று எக்காலத்திலும் காவலாகவும், அரணாகவும், புதையல் போன்ற பொருளாகவும் இருப்பவன் சிவபெருமானே என்று உணர்ந்து, அவனை மனத்தில் தியானித்து, மனத்தை ஒருவழிப்படுத்தி ‘சிவாய நம’ என்று திரு ஐந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தல் அல்லாது, செறிந்த கிரணங்களையுடைய சந்திரனைப்போன்று பல கலைகளில்வல்ல சான்றோர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள தலைவனும், குருவாகவும், முனிவனாகவும், உயர்ந்தவனாகவும் இருக்கும் அவனுடைய அருளைப் பெறுதல் இயலுமோ?
கருத்து – சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்கள் எப்பொழுதும் மல கன்ம மாயையாகிய பாசங்கள் நீங்கியவர்களாக இருப்பார்கள் என்பது பற்றிய பாடல்.
பதவுரை
உயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல், உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள் (முன்னர்ப் பிணிப்பவிழ்ந்து நீங்கினவை) மீளவும் தொடர்ந்தும் பற்றமாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.
கருத்து – அன்னையின் புகழ்பெற்ற வடிவங்களாகவும், சப்த மாந்தர்களின் வடிவமாகவும், ஞானம் வழங்குபவளாகவும் இருப்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! நீ காமகிரிப் பீடம் ஆகியதும், பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் உள்ள காமாக்கியா கோவிலில் காம ரூபிணியாக வீற்றிருக்கும் காமக்கிரி பீடத்து அழகியாகவும், கனகசபை ஆகிய சிதம்பரத்தில் உள்ள ஈசனும் நடனமிடும் காத்யானி, கௌமாரி, காமேஸ்வரி, ஈஸ்வரி, பூமாதேவி, நான் முகன் ஆன பிரம்மாவின் புனித மனைவி ஆன இந்திராணி, புகழ் பெற்ற நாரயணி இவர்கள் தினமும் பணியும் முழுமையான கலை டையவளாகவும், கொடுக்கும் தன்மை உடைய சோமனை நெற்றிசுட்டியாக அணிந்திருப்பவளாகவும், மறைகளின் ஞானமுடிவாக விளங்குபவளாகவும்,, உச்சிக்குமேல் பன்னிரண்டு அங்குலத்தில் உள்ள யோகத்தானம் ஆகிய துவாத சாந்தத்தில் நிலைபெற்றவளாகவும், எல்லை இல்லாத பேரின்ப நிலையைத் தரும் ஞான விளக்கு போன்றவளாகவும், ஒளிரும் கண்களை உடையவளாகவும்,, மிகுந்த அழகிய வடிவம் கொண்டவளாகவும், வனத்தில் வாழும் தூய்மையின் வடிவமாகி இருக்கும் சாகினியாகவும், மாணிக்கம் போன்றவளாகவும் இருக்கிறாய். (ஆதலால் உன்னைப் பணிகிறேன்)
வழுத்துகிறேன் என்மகனே மாணா கேளு வல்லவர்க்குப் பிள்ளை என்றவகையும் சொல்வேன் அழுத்துகிற ஆத்தாளை அவர்க்கே ஈந்தேன் அதனாலே அரனுக்குப் பிள்ளை என்றார் தொழுத்துகிற அவரையுந்தா நின்று யானும் துய்யவெளி உபதேசம் துரந்து சொல்லி வழுத்துகிறேன் அதனாலே ஆசானென்று அல்லோரும் எனைத் தானும் அருளினாரே
சுப்ரமணியர் ஞானம்
கருத்து – சிவன் தனக்கு தந்தையாகவும், மகனாகவும் ஆன ரகசியத்தை முருகப் பெருமான் அகத்தியர் கேட்டதற்கு இணங்க அவருக்கு கூறியது.
பதவுரை
என் மகனாகவும், என் மாணவன் ஆனவனாகவும் ஆன உன்னை வாழ்த்துதல் செய்கின்றேன். வலிமை உள்ளவனும் சமர்த்தவனும் ஆகியவருக்கு எவ்வாறு மகன் ஆனேன் என்று உரைக்கிறேன். தனது ஆத்தாள் ஆகிய பார்வதி தேவியை அவள் விரும்பியவாறு ஈசனாருக்கு கொடுத்தேன். அதனாலே ஈசனார் ஆகிய அவரை விட இளமை உடைய இளைஞன் ஆனேன். தனக்கு ஞான உபதேசம் செய்யும் படி விரும்பி நின்ற அவரை, தூயவெளி என்பதும், வெட்டவெளி என்பதும் ஆகாசம் என்பதும் ஆன இடம் காட்டி உபதேசம் காட்டி அருளியதால் அவருக்கு ஆசான் ஆனதால் அவருக்கு மெய்ஞானத் தந்தை ஆனேன் என்று அல்லாதவர்களும் கூறியது குறித்து தன்னைப்பற்றி அருளினார்.
கருத்து – சிவானந்தத்தில் நிலை பெற்று இருந்தால் அறிவுத் திறனை ஆணவம் மறைக்காது; அப்படி மறைக்க முயன்றாலும் குருவின் அருளால் அகங்காரம் நீங்கும் என்பது பற்றியப் பாடல்.
பதவுரை
உயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல் உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள் மீளவும் தொடர்ந்தும் பற்ற மாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.
பேருகாரணியத்தில் யான் சென்ற போதும் பெரும் பொருளால் வருகாதல் கொண்டிரவில் துயில் போதும் இம்மண்டலத்தில் துருவாதியர்கள் சபையில் செல்போதும் துணையெனக்கு வருவாயுனைநம்பினேன் காழியாபதுத்தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
கருத்து – எந்த நிலையில் நின்ற போதும் நீ எனை காப்பாய் என்று நம்பினேன் என்று உறுதி பற்றி கூறியப் பாடல்.
பதவுரை
தோற்றத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கின்ற பெரியதான காடுகளில் யான் சென்ற போதும், பொருள் வருதல் கண்டு, அதன் பொருட்டு மகிழ்வு கொண்டும், யாகத்தை விரும்புதல், ரிஷிகள், தேவர்கள், தேவதை, துருவாதி கிரகங்கள், பிதுர்க்கள், ஆகிய இவ்விதமாக பிறத்தலை சத்துவ குணத்தில் மத்யமகதியில் பிறந்தாலும் நீ எனக்கு துணையாக வருவாக என உனை நம்பினேன்.
விளக்கஉரை
உலகவாழ்வினை அடர்கானகத்திற்கு உவமையாக கூறுதல் இயல்பு. முதல் உவமை இகலோக வாழ்வில் துயறுற்று நின்ற போதும் என்பது பற்றியது. இரண்டாவது உவமையில் சற்று மேன்மை உற்று சத்துவ குணத்தில் நின்ற போதும் என்பதை பற்றியது. எந்த நிலையில் நின்ற போதும் நீ எனை காப்பாய் என்று நம்பினேன்
பொருளால் வருகாதல் கொண்டிரவில் துயில் போதும் – பொருள் மீது பற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறந்து இறத்தல் பற்றியது.
கருத்து – ஈசன் தாயாகவும், தந்தையாகவும், உறவுகளாகவும், அவன் வீற்றிருக்கும் திருப்பாதிரிப்புலியூர் திருத்தலப் பெருமைகளையும் கூறும் பாடல்.
பதவுரை
திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு, உயிரைப்பற்றிய அறிவு இல்லாத காரணத்தால் எங்களின் ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான், அடியேனுக்குத் தாயாகவும், தந்தையாகவும், உடன்பிறந்த சகோதர சகோதரியாராகவும் அமைந்து, பூமி, பாதாளம், சுவர்க்கம் ஆகிய மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாகவும், அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாகவும் தேவர்களுக்கும் அன்பனாகியவன் சிவபெருமான் ஆவான்.
விளக்கஉரை
உடன்தோன்றினர் – திலகவதி அம்மையார்
தோன்றாத்துணை – திருப்பாதிரிப்புலியூர்ப் பிரானுக்குப் பெயர்
கருத்து – ஈசனின் பெருமைகளையும், அவன் வீற்றிருக்கும் திருப்புனவாயில் திருத்தல பெருமைகளையும் கூறும் பாடல்.
பதவுரை
ஊக்கம் மிகுந்தவனும் செருக்குடைய மனம் உடையவனும், வேல் வாள் போன்ற படைக்கலன்களை உடையவனுமான அரக்கனான இராவணனின் வலிமை அழியுமாறு செய்தவனும், அழகும், பெருமையும் ஊடைய கயிலை மலையால் வீற்றிருந்து அருளும் சிவபெருமான் வீற்றிருந்து அருளும் இடமாவதும், பழமையான அவனுடைய புகழைப் பல்வேறு வகைகளில் போற்றுகின்ற பாடல்களும், ஆடல்களும் நிறைந்து அழகு பெறுமாறு விளங்குகின்றதும், கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றல்காற்று வீசுகின்றதுமானதுமான திருத்தலம் திருப்புனவாயில் ஆகும்.
விளக்கஉரை
புனம் – காடு
வேலன் – இராவணனுக்குச் சிவபிரான் தந்த வாளைத் தவிரப் பிற ஆயுதங்களும் உண்டு எனவே வேலன்
புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம் புகுந்தெனைக் கலக்கிய போதும் கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை அல்லால் மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை மதித்திலேன் மதிக்கின்றார் தமையும் நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே
ஆறாம் திருமுறை – திருஅருட்டா – வள்ளலார்
கருத்து – கைவிடாது இருக்க வேண்டி விண்ணப்பம்.
பதவுரை
எனது கண்ணிலும், கருத்திலும் கலந்து நின்ற கடவுளே! மண்ணில் தோன்றியும், மிகுந்தும் இருப்பவர்களையும், வானில் இருப்பவர்களையும் மதிக்கவில்லை; அவ்வாறு மதிப்பவர்கள் தம்மிடத்தில் பொருந்தி இருக்கவில்லை; உடலில் காயம் ஏற்படுத்திய புண்ணிலே அம்பு தைத்தது போன்று துயரம் ஏற்படுத்தி என்னை கலங்கச் செய்தது போதும்; உன்னை மட்டும் நம்பியதால்வேறு எதைப்பற்றியும் எண்ணவில்லை ஆகவே என்னை கைவிடாது இருப்பாயாக.
கருத்து – திருவடியில் ஆனந்தமாக நிலைபெறச் செய்யவேண்டி விண்ணப்பம்.
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, உமையானவளே, இமையாதவர்கள் எனும் தேவர்களால் துதிக்கப்படுபவளும், மந்திரக் கலையை பூரணமாகப் பெற்று, அதன் வடிவமாக இருப்பவளும், நவ கோணத்தில் வாழும் யோக நாயகியே, இரவும் பகலும் அற்ற இடம் தந்து இனிமை தந்து என்றும் இருள் அடையாமல் இருக்கும் பேரொளி விளக்கே! கருணையுடன் கூடியதான உந்தன் இரு மலர்போன்ற தாள் சேர்த்து, தங்கம் போன்றதும், ஒளியுடன் கூடியதுமான இமய மலைமேல் தோன்றியவளே! எந்தன் நினைப்பு எனும் நிலையினைக் கடந்து, ஏக வெளி எனப்படுவதும், ஆகாசம் எனப்படுவதும் ஆன இடத்தில் நிலைபெற்று இருக்கும் நிலையைத் தந்து, எனது அனைத்து வினைகளும் அறும்படி செய்து, உன்னை நேரில் கண்டு சந்திக்கும் படி செய்து, என்னை இறைவனும் தலைவனும் ஆகியவனின் திருவடியில் வெளிப்படையாக சேர்த்து, சர்வ ஆனந்த மயமாக இருக்கச் செய்வாயாக.
விளக்கஉரை
‘வீடான நவகோணம் இட்டுக்கொண்டு’ எனும் சித்தர்கள் பூஜா விதிப்பாடலும், ‘ஒளி நின்ற கோளங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே எனும் அபிராமி பட்டரின் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. எண்திசையுடன் கூடி, ஆகாயமும் சேர்ந்து ஒன்பது என்று உரைப்பவர்களும் உளார். அன்பர்கள் பொருள் ஆய்ந்து உய்க.
கருத்து – போகர், முருகப் பெருமான் வயதினை கணித்து கூற இயலாமை குறித்தப் பாடல்.
பதவுரை
இவ்வாறான மெய்யறிவுப் பொருளாகியனும், அவன் பற்றிய மார்க்கத்தினையும் சொன்னேன்; சிறப்பான இன்னொரு வேதம் போன்றதான மற்றொரு வசனத்தினைச் சொல்கிறேன்; தூமணி போன்றவரான வடிவேலர் முருகப் பெருமானே ஆவார்; அப்படிப்பட்டவரான முருகனுக்கான வயது எதுவென்றால், சர்வ நிச்சயமாக வயதினைக் கணித்துக் கூற இயலாது. அவனைப் பற்றிய நூல்களிலும் அதுபற்றி உரைக்கப்படவில்லை. முக்தி அருளக் கூடியவனும், பேரறிவாக இருந்து, அந்த அறிவுடைப் பொருளாகவும் ஆகி, பரமான்மாவாகவும் ஆகி, அட்டமாசித்தி பெற அருள்வோனுமாய், ஞான வழி அருள்பவனுமாய் இருப்பது சிறப்பான சுப்ரமணியர் என்று (மட்டும்) கூறலாம்.
அல்லல் என் செயும் அருவினை என் செயும் தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனுக்கு அடிமை பூண்ட தனக்கு எந்த வினைகளும் ஒரு துன்பமும் செய்யாது என அறுதியிட்டுக் கூறிய பாடல்.
பதவுரை
உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், வல்வினையாகிய துவந்தங்களும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளும், பிராப்தம் ஆகியதும் தீர்ப்பதற்கு அரியதும் ஆன நுகர்வினை ஆகிய நிகழ்கால வினைகளும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகள் ஆகிய எதிர்வினைகளும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன? தில்லைமாநகரிலே திருக்கூத்து நிகழ்தி அருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாத அடிமைபூண்ட எனக்கு அந்த வினைகள் ஒரு துன்பமும் செய்யாது.
விளக்கஉரை
அல்லல் – ஆகாமிய வினை, பழைய வினைகளை அனுபவிக்கும் போது நாம் செய்யும் செயல்களால் நாம் பெருக்கிக்கொள்ளும் வினைகள்;
அருவினை – அனுபவித்தால் அல்லது தீராத வினை; வேறு எவராலும் தீர்க்கமுடியாது எனபதால் அருவினை
தொல்லை வல்வினை – பழமையான சஞ்சித வினை; நம்மை மாயத் தோற்றத்தில் ஆழ்த்தும் வலிமை கொண்டமையால் வல்வினை
தொந்தம் (வடமொழியில் துவந்துவம்) – துவந்துவம் – இரட்டை . நல்வினை தீவினை , அறம் மறம் , இன்பம் துன்பம் என்னும் இரட்டைகள்
கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுறு மாமலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
காட்டில் மிகுந்தும், பொருந்தி உள்ளதும், நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தை தருவதுமான கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தும், ஆகாயம் அளவு குவிக்கப்பட்டதும், பெருமை மிக்க மலர்களையும் கொண்டு சிவனை வழிபட்டாலும், உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, அதனால் உடல் மேல் உள்ள பற்றை விடுத்து, சிவனையே பற்றாக உணர்பவர்க்கள் அல்லாது ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.
விளக்கஉரை
ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதும், ‘சிவபூசைக்கு முன்னே குருபூசை செய்தல் இன்றியமையாதது’ என்பதும், ‘சிவபூசையும் குருவருள் பெற்றே செய்யப்பட வேண்டும்’ என்பதும், `சிவனை அவ்வாறு உணரும் உணர்வை குருவருளால் அன்றி அடைய இயலாது` என்பதும் குறிப்பு.
மூலவர் சந்நிதி வாயிற்கதவுகளில் கொங்கு நாட்டிலுள்ள ஏழு தேவாரத் தலங்களின் மூல வடிவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ள தலம்.
வெஞ்சமன் என்ற வேடர்குல மன்னன் அரசாண்ட தலம்
இந்திரன் அகலிகை சாபநிவர்த்திக்காக வழிபட்டு அருள்பெற்ற தலம்
குடகனாற்று வெள்ளப்பெருக்கால் பழைய கோயில் சிதிலமானதால் தற்போதைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது புதிய கோயில்
சுந்தரரின் தேவாரப் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் கிழவராகவந்து, தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் ( பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கியத் தலம். ( குறிப்பு – கொங்கு மண்டலச்சதகச் செய்யுள் )
முருகப்பெருமான், ஆறு திருமுகங்களுடன் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீது கால் வைத்தது அமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி
அருகில் கருவூர் ஆனிலை தேவாரத்தலம்.
தலம்
திருவெஞ்சமாக்கூடல்
பிற பெயர்கள்
வெஞ்சமாங்கூடலூர்
இறைவன்
கல்யாண விகிர்தீஸ்வரர், விகிர்த நாதேஸ்வரர்
இறைவி
பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷிணி, விகிர்த நாயகி)
தல விருட்சம்
வில்வமரம்
தீர்த்தம்
குடகனாறு, விகிர்த தீர்த்தம்
விழாக்கள்
மாசிமகத்தில் 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை , ஐப்பசி அன்னாபிஷேகம் , திருக்கார்த்திகை , மகா சிவராத்திரி
மாவட்டம்
கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை ௦7:௦௦ முதல் 12:0௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦7:3௦ வரைஅருள்மிகு விகிர்த நாதேஸ்வரர் திருக்கோவில்
வெஞ்சமாங்கூடலூர் அஞ்சல்
வழி மூலப்பாடி, அரவக்குறிச்சி வட்டம்
கரூர் மாவட்டம். PIN – 639109
04320-238442, 04324-238442, 99435-27792, 9443362321, 9894791878
வழிபட்டவர்கள்
இந்திரன்
பாடியவர்கள்
சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
கரூர் – அரவக்குறிச்சி சாலையில் 13 கிமீ தொலைவில் உள்ள சீத்தப்பட்டி சாலையில் சுமார் 8 கிமீ தூரம். மற்றைய வழிகள் – கரூர் – ஆற்றுமேடு சாலை வழி , கரூர் – திண்டுக்கல் சாலை வழி
கரூரில் இருந்து சுமார் 16 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
கொங்குநாட்டுத்தலங்களில் 7 வதுதலம்.
பண்ணேர் மொழியம்மை உடனாகிய கல்யாண விகிர்தீஸ்வரர்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 42
திருமுறை எண் 4
இசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அகிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 42
திருமுறை எண் 7
உடல்கள் எரிக்கப்படுவதால் கருமை நிறம் படிந்த சுடுகாட்டை இடமாக கொண்டு நெருப்பை வீசி நின்று நடனமாட வல்லவனே, ரிஷபத்தின் மீது விரும்பி ஏறி வருபவனே, இயல்பாய் பிற உயிர்களுக்கு நன்மை செய்பவனே, மணம் உடைய கொன்றை மலரை மகிழ்ந்து அணிந்தவனே, ஆயிரம் புள்ளிகளை உடைய படங்கள் பொருந்தியதும், பருத்ததும், நெருப்பு போன்ற கண்களை உடைய, பிளந்த வாயில் பற்களோடு நெருப்பை உமிழ்கின்றதும் ஆன நஞ்சினையுடைய அரிய பாம்பை அணிந்தவனே, திருவெஞ்சமாக் கூடலில் எழுந்து அருளியிருக்கின்ற இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
கருத்து – மரணிக்கும் தருவாயில் ‘இங்கிருக்கிறேன்’ என்று இருப்பிடத்தைக் காட்டி அருள் புரிய வேண்டுதல்.
பதவுரை
முதற்கடவுளாகவும், அனைவருக்கும் மேம்பட்டனும் ஆகிய இறைவனே, திருமேனி முழுதும் நீறு பூசப்பட்டதால் சங்கினை ஒத்த வெண்ணிறமான மேனியை உடைய செல்வனே, வெட்கத்தை கொடுப்பதும், குற்றத்தினையும், கேட்டினை உடையதும் ஆன இந்த உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாசம் நீக்கி, அதன் மூலம் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி, இந்த உடல் மண்ணுடன் பொருந்தி கலக்குமாறு செய்து, உன்னைப்பற்றி ஆர்வம் கொண்டு, விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்து, மனதினில் உன்னை தியானித்து, என் உயிர் போய் இறக்கும் தருவாயில், இறைவனே, நாய் போன்றவனாகிய அடியேன் உன்னை ‘எங்கிருக்கின்றாய்’ என்று வினவினால், ‘இங்கிருக்கிறேன்’ என்று உனது இருப்பிடத்தைக் காட்டி அருள் புரியவேண்டும்.
விளக்கஉரை
அங்கம் – உடம்பு
மண்ணுக்கு ஆக்கி – புதைக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ மண்ணொடு மண்ணாய்ப் போமாறு உடல் நீங்குதல்
விழுந்து தொழும்போது – உடம்பு மண்ணில் கழிக்கப்பட்ட பிறகு, உயிர் அந்த உடம்பில் இருந்து நீங்கிச் சிவத்தில் கலத்ததாக எண்ணுதல் சைவ மரபு .
கருத்து – உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்தி ஆகியவை இரு பொருள்கள் ஆகாமல் ஒன்றாய் இருக்கும் சொரூப நிலை பற்றி உரைத்தப் பாடல்
பதவுரை
சிவத்தை விட்டுத் தனியாய் இல்லாமலும், சிவம் விடுத்து தனியே இயங்காமலும் இருக்கும் சத்தியானது, உலகம் செயற்படுதன் பொருட்டு, சிவத்தினில் தோன்றி வேறு நிற்பது போல இருக்கிறது என சொல்லப்பட்டாலும், சத்தியானது எஞ்ஞான்றும் தனித்து நிற்காமல், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு எப்பொழுது ஒன்றி நிற்கும்; எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல் என்பது, அறிவு, செயல் என்னும் வேறுபாடு கொண்டு கொள்ளப்படும் தொழில் என்பன பற்றியதே; இவ்வாறான தன்மை உடையதும், தன்னில் இருந்து வேறு ஆகாததுமான சத்தியை ‘அதுதானே எல்லாம் செய்யவல்லதாக நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளாகிய முதல்வனை, `இப்படிப்படவன், இந்த நிறமுடையவன்’ என்று சொல்லால் சொல்லி விளக்க முற்பட்டால் , அஃது ஒருவனாலும் செய்ய இயலாது. ஏனெனில், விளக்கப்படும் சொற்களுக்கும், அந்தப் பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.
விளக்கஉரை
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் – கண்ணில் ஒளி போல் இருக்கும் என்று பொருள் உரைப்பாரும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
மிகப் புண்ணியமான தேசமும் காலமும் எவை என்பதை உரைக்கவேண்டும்?
மகேஸ்வரர்
தேவர்களாலும், ரிஷிகளாலும் அடையப்பட்டதும், எல்லோராலும் பூஜிக்கப்பட்டதுமாகிய குருக்ஷேத்திரத்தினை சுற்றியுள்ள சிறந்தமலைகள் சூழ்ந்துள்ளதும், புண்ணிய தீர்த்தங்களும் தானம் செய்ய சிறப்பான இடங்கள்.
வசந்தகாலம், புண்ணியமான மாசம், சுக்லபக்ஷம், பூர்ணிமை, சிராத்தமும் தேவகாரியமும் செய்யதகக்க. புண்ணியதினம், சந்திர சூரிய கிரஹணம் ஆகியவை மிகச்சிறந்த புண்ணியகாலங்கள் என்று அறிவாயாக.
மேலே குறிக்கப்பட்ட காலங்களில் செய்யப்படும் தானம் பெரிய பலன் கொடுப்பதாகும். கொடுப்பவன், கொடுக்கப்படும் பொருள், வாங்குகிறவன், கொடுக்கும்வகை, இடம், காலம் இவைகள் தானத் தின் சிறப்புக்கள் ஆகும். இவையெல்லாம் சேர்ந்து செய்யப்படும் தானம் பெரிதாகும். இந்த ஆறு குணங்களும் சேர்ந்த தானம் எண்ணுவதற்கு சுலபமாயிருந்தாலும் மிகப் பெரிய பாபங்களைப்போக்கும்.
இந்தக் குணங்களில்லாத தானம் மிகப்பெரியதாயிருந்தாலும் பலனில்லாமல் போய் விடும்.
உமை
இந்த ஆறு குணங்களுடன் சேர்த்து கொடுக்கப்பட்ட பெருந்தானமும் எப்பொழுது பலன்படாமல் போகும்?
மகேஸ்வரர்
சாஸ்திரத்தில்விதிக்கப்பட்டவாறுதர்மத்தைச்செய்தாலும், பின்அதற்காகத்துன்பப்பட்டாலும்,தான்செய்ததைமற்றவர்கள்முன்னிலையில்வீணாகச்சபையில்புகழ்ந்துபேசினாலும், மறுஜன்மத்தில்அதன் பலன் வரவேண்டுமென்றுமனத்தில்விருப்பங்கொண்டாலும், எப்போதும்பலனைவிரும்பியேதர்மங்களைச்செய்தாலும்அந்தத்தர்மமும்தானமும்பலனற்றவைஆகிவிடும். ஆகவேபுண்ணியத்தைக்கருதுகின்றவன்இந்தக்குற்றங்களைவிடவேண்டும்; இதுதான்நெடுங்காலமாகப்பெரியோர்களால்எக்காலத்திலும்கைகொள்ளப்படும்ஒழுக்கமென்றும், மற்றவர்களைகாப்பாற்றுவதுகிரகஸ்தர்களின்கடமையென்றும், எப்போதும்மனத்தில்உறுதிகொண்டுதானம்செய்யவேண்டும்.
இப்படி இடைவிடாமல் செய்யப்படும் புண்யம்தான் பெரிதாகும்.
உமை
மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்கவிரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.
கருத்து – அடியவர்கள் துன்பத்தை நீக்க திருவுள்ளம் கொண்டது பற்றி வினா எழுப்பியது
பதவுரை
முந்நீர் எனும் கடலின் வளமான அலைகள் கொண்டதும், கடலின் கரையில் இருப்பதும், திரையினையும் உடைய சங்கங்களையும் முத்துக்களையும் கொண்டு வந்து சேர்பதும், பழமையானதும், வேகமாக வந்து அலைகளை ஒதுக்கிச் சேர்க்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கும் உத்தமனே! திருச்செவியினை கொடுத்து நீ கேட்பதற்குத் தயாரானால், ‘உனக்கு தொண்டு செய்வதற்காக வந்து சேர்ந்த அடியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நீ, இப்பொழுது அவர் துன்பத்தைத் தீர்க்காமல் எதிர் காலத்தில் அவர்களுக்கு யாது வழங்கத் திருவுள்ளம் பற்றியுள்ளாய்’ என்பதே அடியேன் கேட்க நினைக்கும் கேள்வி ஆகும்.
கருத்து – நிலைபெற்ற பேரின்பத்தில் என்றும் நிலைக்க வேண்டி விண்ணப்பம்
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, சுடர் ஒளி போன்ற தங்க மலையின் மேல் உதித்தவள் ஆகிய உமையே, இமையாதவர் ஆகிய தேவர்களின் முதன்மையானது எனப் போற்றப்படுவதும், மந்திரத் தன்மை உடையதும், நவ கோணம் கொண்டதுமான இடத்தில் வாழும் யோக நாயகியானவளே, இரவு, பகல் ஆகிய கால மாறுதல் இல்லாமல், நினைவு எனும் நிலையைக் கடந்து, ஏக வெளி, பரவெளி, ஆகாசம் எனும் பெருவெளி ஆகிய நிலையில் இருக்கும் நிலையைத் தொடர்ந்து இனிமையாக இருக்குமாறு செய்த பேரொளி விளக்கினைப் போன்றவளே, மலர் போன்ற கருணை தரும் உன்னுடைய இரண்டு தாளினையும் தந்து, என்னுடைய இருவினைகளாகிய நல்வினை, தீவினை ஆகியவை அறுந்து விடும்படு செய்து, ஆறு போன்றதான வாழ்வின் முடிவில் கரையேறுமாறு எனைச் செய்து, வெளிப்படையாகவும், முழுவதுமாகவும் தலைவன் ஆகிய இறைவன் திருவடி சேர்த்து முழு ஆனந்தமாக இருக்கும்படி செய்து அருள்.
கருத்து – அகத்திலும், புறத்திலும் நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு அதன்படி நடக்கும் முறையைப் பற்றியதை விளக்கும் பாடல்
பதவுரை
மும்மலங்களில் ஒன்றான ‘தான்’ எனும் ஆணவம் கொண்டு இந்த உலகில் சஞ்சாரம் செய்யும் மனிதர்களுடன் திரியாமல் தனித்து நிற்பாயாக; ஆன்ம அனுபவத்தை தருவதாகிய ‘ஓம்’ எனும் மந்திரத்தை குரு உபதேசித்தபடி, குரு உபதேசித்த அளவில் கொள்வாயாக; நியாயம் சார்ந்து இருப்பவனுக்கு எதிர் அணியில் இருந்து எதுவும் உரைத்திடாதே; நெற்றி உச்சியை குறிப்பதானதும், ‘ஔம்’ * என்றும் வழங்கப்படுவதுமான அட்சரத்தை மறந்துவிடாதே; களைப்பு, அலுப்பு, சோர்வு கொண்டு உலகில் இலக்கு இல்லாமல் திரிந்திடாதே; பேய் போன்ற காமம் கொண்டவர்களோடு இணைந்திடாதே; மண்ணைப் பானையாக மாற்ற குயவன் என்ற நிமித்த காரணமும், மண் எனும் உபாதான காரணம் இருப்பதை அறிந்து கொண்டு விதிக்கப்பட்ட காலம் வரையில் இந்த உலகினில் இயங்கிக் கொண்டு இருப்பாயாக.
விளக்கஉரை
ஊண் – உண்கை; உண்ணுதல், உணவு, ஆன்மாவின் சுகதுக்கானுபவம்
ஆயாசம் – களைப்பு, அலுப்பு, சோர்வு
ஆமென்ற அட்சரம் – ‘ஔம்’ என்று கொள்ளப் பெறும். (பல அட்சரங்கள் மந்திரத் தொடர்பு உடையவை என்பதால் குரு முகமாக பெறுக)
முதலில் கூறியதான `ஸௌம்` என்பதோடு, `ஔம், ஆம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீரீம்` என்பவையும் சேர்த்துப்பின் `க்லீம்` என்பதை மந்திரத்தின் முடிவு எழுத்தாக வைத்து, ஒவ்வொரு முறையும், `சிவாய நம` என்று என்று சொன்னால் நவாக்கரி சக்கர வழிபாடு கைவரும்.
சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.