பாடல்
நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்கள் எப்பொழுதும் மல கன்ம மாயையாகிய பாசங்கள் நீங்கியவர்களாக இருப்பார்கள் என்பது பற்றிய பாடல்.
பதவுரை
உயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல், உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள் (முன்னர்ப் பிணிப்பவிழ்ந்து நீங்கினவை) மீளவும் தொடர்ந்தும் பற்றமாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.
விளக்க உரை
- காட்டுவது – ஞானம்.
- காண்பது – காணப்படுவது.
- ஞாதுரு = காண்பவன் – ஆன்மா / சீவன்
- ஞானம் = பெறும் அறிவு – சிவ ஞானம்
- ஞேயம் = காணப்படும் பொருள் – சிவம்