பாடல்
புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
புகுந்தெனைக் கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த
கருத்தனே நின்றனை அல்லால்
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே
ஆறாம் திருமுறை – திருஅருட்டா – வள்ளலார்
கருத்து – கைவிடாது இருக்க வேண்டி விண்ணப்பம்.
பதவுரை
எனது கண்ணிலும், கருத்திலும் கலந்து நின்ற கடவுளே! மண்ணில் தோன்றியும், மிகுந்தும் இருப்பவர்களையும், வானில் இருப்பவர்களையும் மதிக்கவில்லை; அவ்வாறு மதிப்பவர்கள் தம்மிடத்தில் பொருந்தி இருக்கவில்லை; உடலில் காயம் ஏற்படுத்திய புண்ணிலே அம்பு தைத்தது போன்று துயரம் ஏற்படுத்தி என்னை கலங்கச் செய்தது போதும்; உன்னை மட்டும் நம்பியதால் வேறு எதைப்பற்றியும் எண்ணவில்லை ஆகவே என்னை கைவிடாது இருப்பாயாக.
விளக்க உரை
- கருத்தன் – செய்வோன், தலைவன், கடவுள்
- வயங்குதல் – ஒளிசெய்தல், விளங்குதல், தெளிதல், தோன்றுதல், மிகுதல், நடத்தல்
- நண்ணுதல் – கிட்டுதல், பொருந்துதல், செய்தல், இருத்தல்