பாடல்
இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்தி ஆகியவை இரு பொருள்கள் ஆகாமல் ஒன்றாய் இருக்கும் சொரூப நிலை பற்றி உரைத்தப் பாடல்
பதவுரை
சிவத்தை விட்டுத் தனியாய் இல்லாமலும், சிவம் விடுத்து தனியே இயங்காமலும் இருக்கும் சத்தியானது, உலகம் செயற்படுதன் பொருட்டு, சிவத்தினில் தோன்றி வேறு நிற்பது போல இருக்கிறது என சொல்லப்பட்டாலும், சத்தியானது எஞ்ஞான்றும் தனித்து நிற்காமல், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு எப்பொழுது ஒன்றி நிற்கும்; எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல் என்பது, அறிவு, செயல் என்னும் வேறுபாடு கொண்டு கொள்ளப்படும் தொழில் என்பன பற்றியதே; இவ்வாறான தன்மை உடையதும், தன்னில் இருந்து வேறு ஆகாததுமான சத்தியை ‘அதுதானே எல்லாம் செய்யவல்லதாக நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளாகிய முதல்வனை, `இப்படிப்படவன், இந்த நிறமுடையவன்’ என்று சொல்லால் சொல்லி விளக்க முற்பட்டால் , அஃது ஒருவனாலும் செய்ய இயலாது. ஏனெனில், விளக்கப்படும் சொற்களுக்கும், அந்தப் பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.
விளக்க உரை
- கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் – கண்ணில் ஒளி போல் இருக்கும் என்று பொருள் உரைப்பாரும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.