அமுதமொழி – விளம்பி – மாசி – 8 (2019)

பாடல்

மூலம்

அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே

பதப்பிரிப்பு

அல்லல் என் செயும் அருவினை என் செயும்
தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனுக்கு அடிமை பூண்ட தனக்கு எந்த வினைகளும் ஒரு துன்பமும் செய்யாது என அறுதியிட்டுக் கூறிய பாடல்.

பதவுரை

உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், வல்வினையாகிய துவந்தங்களும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளும், பிராப்தம் ஆகியதும் தீர்ப்பதற்கு அரியதும் ஆன நுகர்வினை ஆகிய  நிகழ்கால வினைகளும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகள் ஆகிய எதிர்வினைகளும்  எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன? தில்லைமாநகரிலே திருக்கூத்து நிகழ்தி அருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாத அடிமைபூண்ட எனக்கு அந்த வினைகள் ஒரு துன்பமும் செய்யாது.

விளக்க உரை

  • அல்லல் – ஆகாமிய வினை, பழைய வினைகளை அனுபவிக்கும் போது நாம் செய்யும் செயல்களால் நாம் பெருக்கிக்கொள்ளும் வினைகள்;
  • அருவினை – அனுபவித்தால் அல்லது தீராத வினை; வேறு எவராலும் தீர்க்கமுடியாது எனபதால் அருவினை
  • தொல்லை வல்வினை – பழமையான சஞ்சித வினை; நம்மை மாயத் தோற்றத்தில் ஆழ்த்தும் வலிமை கொண்டமையால் வல்வினை
  • தொந்தம் (வடமொழியில் துவந்துவம்) – துவந்துவம் – இரட்டை . நல்வினை தீவினை , அறம் மறம் , இன்பம் துன்பம் என்னும் இரட்டைகள்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *