பாடல்
காமக் கிரிபீடத்தழகி
கனக சபையில் நடனமிடும்
காத்யா யனியே கவுமாரி
காமேஸ் வரியே ஈஸ்வரியே
பூமிதேவி நான்முகவன்
புனித மனைவி இந்த்ராணி
புகழ்நா ரணியும் தினம்பணியும்
பூர்ண கலையே கதிமுதலே
சோமன் உதய மணிநுதலே
சுருதி ஞான முடிமுதலே
துவாத சாந்த நிலையாளே
சுகமே ஞான மணிவிளக்கே
வாம நயனி அதிரூபி
வனசா கினியே மாமணியே
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
கருத்து – அன்னையின் புகழ்பெற்ற வடிவங்களாகவும், சப்த மாந்தர்களின் வடிவமாகவும், ஞானம் வழங்குபவளாகவும் இருப்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! நீ காமகிரிப் பீடம் ஆகியதும், பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் உள்ள காமாக்கியா கோவிலில் காம ரூபிணியாக வீற்றிருக்கும் காமக்கிரி பீடத்து அழகியாகவும், கனகசபை ஆகிய சிதம்பரத்தில் உள்ள ஈசனும் நடனமிடும் காத்யானி, கௌமாரி, காமேஸ்வரி, ஈஸ்வரி, பூமாதேவி, நான் முகன் ஆன பிரம்மாவின் புனித மனைவி ஆன இந்திராணி, புகழ் பெற்ற நாரயணி இவர்கள் தினமும் பணியும் முழுமையான கலை டையவளாகவும், கொடுக்கும் தன்மை உடைய சோமனை நெற்றிசுட்டியாக அணிந்திருப்பவளாகவும், மறைகளின் ஞானமுடிவாக விளங்குபவளாகவும்,, உச்சிக்குமேல் பன்னிரண்டு அங்குலத்தில் உள்ள யோகத்தானம் ஆகிய துவாத சாந்தத்தில் நிலைபெற்றவளாகவும், எல்லை இல்லாத பேரின்ப நிலையைத் தரும் ஞான விளக்கு போன்றவளாகவும், ஒளிரும் கண்களை உடையவளாகவும்,, மிகுந்த அழகிய வடிவம் கொண்டவளாகவும், வனத்தில் வாழும் தூய்மையின் வடிவமாகி இருக்கும் சாகினியாகவும், மாணிக்கம் போன்றவளாகவும் இருக்கிறாய். (ஆதலால் உன்னைப் பணிகிறேன்)