பாடல்
மூலம்
சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற்றொண் டாயடைந்தார்
அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி யலைகொண்முந்நீர்
மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம் பக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே
பதப்பிரிப்பு
சொல்லக் கருதியது ஒன்று உண்டு கேட்கில், தொண்டாய் அடைந்தார்
அல்லல் படக்கண்டு பின்என் கொடுத்தி, அலைகொள் முந்நீர்
மல்லல் திரைச்சங்கம் நித்திலம் கொண்டுவம்பு அக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந்து எற்று ஒற்றியூர்உறை உத்தமனே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – அடியவர்கள் துன்பத்தை நீக்க திருவுள்ளம் கொண்டது பற்றி வினா எழுப்பியது
பதவுரை
முந்நீர் எனும் கடலின் வளமான அலைகள் கொண்டதும், கடலின் கரையில் இருப்பதும், திரையினையும் உடைய சங்கங்களையும் முத்துக்களையும் கொண்டு வந்து சேர்பதும், பழமையானதும், வேகமாக வந்து அலைகளை ஒதுக்கிச் சேர்க்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கும் உத்தமனே! திருச்செவியினை கொடுத்து நீ கேட்பதற்குத் தயாரானால், ‘உனக்கு தொண்டு செய்வதற்காக வந்து சேர்ந்த அடியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நீ, இப்பொழுது அவர் துன்பத்தைத் தீர்க்காமல் எதிர் காலத்தில் அவர்களுக்கு யாது வழங்கத் திருவுள்ளம் பற்றியுள்ளாய்’ என்பதே அடியேன் கேட்க நினைக்கும் கேள்வி ஆகும்.
விளக்க உரை
- முந்நீர் – கடல், ஆழி
- மல்லல் – வளம்
- நித்திலம் – முத்து
- ஒல்லை – வேகமாய், காலதாமதமின்றி , சீக்கிரமாக, சீக்கிரம், சிறுபொழுது, தொல்லை, தொந்தரவு, பழமை