பாடல்
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
காட்டில் மிகுந்தும், பொருந்தி உள்ளதும், நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தை தருவதுமான கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தும், ஆகாயம் அளவு குவிக்கப்பட்டதும், பெருமை மிக்க மலர்களையும் கொண்டு சிவனை வழிபட்டாலும், உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, அதனால் உடல் மேல் உள்ள பற்றை விடுத்து, சிவனையே பற்றாக உணர்பவர்க்கள் அல்லாது ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.
விளக்க உரை
- ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதும், ‘சிவபூசைக்கு முன்னே குருபூசை செய்தல் இன்றியமையாதது’ என்பதும், ‘சிவபூசையும் குருவருள் பெற்றே செய்யப்பட வேண்டும்’ என்பதும், `சிவனை அவ்வாறு உணரும் உணர்வை குருவருளால் அன்றி அடைய இயலாது` என்பதும் குறிப்பு.
- உறுதல் – உண்டாதல், மிகுதல், சேர்தல், இருத்தல், பொருந்தல், கூடல், நேர்தல், பயனுறல், கிடைத்தல், வருந்தல், தங்கல், அடைதல், நன்மையாதல், உறுதியாதல், நிகழ்தல்