அமுதமொழி – விளம்பி – மாசி – 9 (2019)

பாடல்

சித்தான சித்தனிட மார்க்கஞ்சொன்னேன்
     சிறப்பான இன்னமொரு வயனங்கேளிர்
முத்தான வடிவேலர் முருகரப்பா
     முயற்சியுடன் வயததுவும் ஏதென்றாக்கால்
சத்தியமாய் வயததுவுங் கணக்கோயில்லை
     சார்பான நூல்தனிலுஞ் சொல்லவில்லை
சித்திபெற ஞானவழி கொண்டசித்து
     சிறப்பான சுப்ரமணியர் என்னலாமே

போகர் சப்த காண்டம் – போகர்

கருத்து – போகர், முருகப் பெருமான் வயதினை கணித்து கூற இயலாமை குறித்தப் பாடல்.

பதவுரை

இவ்வாறான மெய்யறிவுப் பொருளாகியனும், அவன் பற்றிய மார்க்கத்தினையும் சொன்னேன்; சிறப்பான இன்னொரு வேதம் போன்றதான மற்றொரு வசனத்தினைச் சொல்கிறேன்; தூமணி போன்றவரான வடிவேலர் முருகப் பெருமானே ஆவார்; அப்படிப்பட்டவரான முருகனுக்கான வயது எதுவென்றால், சர்வ நிச்சயமாக வயதினைக் கணித்துக் கூற இயலாது. அவனைப் பற்றிய நூல்களிலும் அதுபற்றி உரைக்கப்படவில்லை. முக்தி அருளக் கூடியவனும், பேரறிவாக இருந்து, அந்த அறிவுடைப் பொருளாகவும் ஆகி, பரமான்மாவாகவும் ஆகி, அட்டமாசித்தி பெற அருள்வோனுமாய்,  ஞான வழி  அருள்பவனுமாய் இருப்பது சிறப்பான சுப்ரமணியர் என்று (மட்டும்) கூறலாம்.

விளக்க உரை

  • சித்து – அறிவு, அறிவுப்பொருள், ஆன்மா, அட்டமாசித்தி, கலம்பக உறுப்பு, வேள்வி, வெற்றி, ஒரு வரிக்கூத்து வகை, எழுத்தடிப்பு, கொத்தனுக்கு உதவிசெய்யும் சிற்றாள்
  • வயனம் – வசனம், வேதம், பழிமொழி
  • ‘பெம்மான் முருகன், பிறவான், இறவான்’ எனும் அருணகிரிநாதரரின் கந்தர் அனுபூதி பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *