பாடல்
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசன் தாயாகவும், தந்தையாகவும், உறவுகளாகவும், அவன் வீற்றிருக்கும் திருப்பாதிரிப்புலியூர் திருத்தலப் பெருமைகளையும் கூறும் பாடல்.
பதவுரை
திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு, உயிரைப்பற்றிய அறிவு இல்லாத காரணத்தால் எங்களின் ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான், அடியேனுக்குத் தாயாகவும், தந்தையாகவும், உடன்பிறந்த சகோதர சகோதரியாராகவும் அமைந்து, பூமி, பாதாளம், சுவர்க்கம் ஆகிய மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாகவும், அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாகவும் தேவர்களுக்கும் அன்பனாகியவன் சிவபெருமான் ஆவான்.
விளக்க உரை
- உடன்தோன்றினர் – திலகவதி அம்மையார்
- தோன்றாத்துணை – திருப்பாதிரிப்புலியூர்ப் பிரானுக்குப் பெயர்
- தோன்றாமை – உணர்விலும் உளத்திலும் தோன்றிப்புறத்தே விழிக்குத் தோன்றாமை
- சிவன் மூன்று உலகங்களுக்கும் தந்தையாக இருப்பதை முன்வைத்து அவரை’ திரிலோகநாதர்’ என்று அழைப்பது கொண்டு ஒப்பு நோக்கி உய்க.