அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 17 (2018)

பாடல்

கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக் கடலின்உள்ளம்
விடலரி யேனை விடுதிகண் டாய்விட லில்லடியார்
உடல்இல மேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
மடலின்மட் டேமணி யேஅமு தேஎன் மதுவெள்ளமே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

உன் திருவடியை விடும் தன்மை இல்லாத அடியார்களது உடலாகிய வீட்டில் நிலைபெறுகின்ற திரு உத்தரகோசமங்கைக்குத் தலைவனே! மலரில் இருக்கும் பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மது வெள்ளமே! பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே! உன் திருவடியை விடுதல் இல்லாத அடியாரது உடலாகிய வீட்டில் நிலைபெறுகின்ற, திரு உத்தரகோச மங்கைக்குத் தலைவனே!  கடல் நீரில் நாய் நக்கிப் பருகினது போல உனது கருணைக் கடலினுள்ளே, உள்ளத்தை அழுந்திச் செல்ல விடாத என்னை விட்டு விடுவாயோ?

விளக்க உரை

  • இறைவனது கருணை ஏகவுருவாய் எங்கும் பரந்து கிடப்பினும் உயிரினது தன்மைக்கேற்பவே அதைப் பெற முடியும்‘ என்பது பற்றியப் பாடல்
  • ‘விடலரியேனை’  –  முழுதும் மூழ்கும் படி விட்டுப் பருகாது, சிறிதே சுவைத்து ஒழிவேனை என்னும் உவமைக்கேற்ப உரைத்தல்
  • மடலின் மட்டு – பூவிதழில் துளிக்கின்ற தேன் (மிகச் சிறிய அளவு)
  • மதுவெள்ளம்- தேன் வெள்ளம்(பெருகிய மிக அதிக அளவு)
  • இறைவனுக்கு அடியாரது உடல் ஆலயமாதலின், ‘அடியார் உடல் இலமே மன்னும்’ என்ற  அடிகள் கொண்டு அறியலாம்; ‘ஊனுடம்பு ஆலயம்’ என்ற திருமூலர் வாக்கையும் ஒப்பு நோக்கிக் காண்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 16 (2018)

பாடல்

பேயேன் ஊமை விழிக்குருடு
      பேணுஞ் செவிடு கால்முடமாய்ப்
   பிள்ளை எனவே ஈன்றவர்க்குப்
      பிரிய விடவும் மனமாமோ

நாயேன் செய்யும் வினைமுழுதும்
      நலமாய்ப் பஞ்சுப் பொறிஎனவே
நகர்த்திச் சிவத்துள் எனதுளத்தை
      ஞானப் பதியுள் சேர்த்தருள்வாய்

ஆயே அமலை அருட்கடலே
      அகிலா தார முடிவிளக்கே
அணங்கே இணங்கும் அடியவர்கட்(கு)
      அமுத ஞானம் அருளரசே

மாயே செகமோ கனமான
      வடிவே முடிவே மலைமகளே
மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, அன்னை போன்றவளே, அருட்கடல் போன்றவளே, மலமற்று இருப்பதால் குற்றமற்றவளாக இருப்பவளே, அழகிய தெய்வ வடிவமாக ஆனவளே, உன்னை வணங்கும் அடியவர்களுக்கு அமுத ஞானத்தினை அருளும் அரசே, மாயையின் வடிவானவளே, இந்த செகத்தினை விட கனமான தன்மை கொண்டவளே, மலையரசன் மகளே, பிள்ளையைப் பெற்ற தாய்க்கு, பேய்த் தன்மை உடையவன் ஆயினும், பேசாத ஊமைத் தன்மை உடையவன் ஆயினும், காட்சி காண இயலா குருடன் ஆயினும், ஒலி கேட்க இயலா தன்மை இல்லாத செவிட்டுத் தன்மை உடையவன் ஆயினும், ஊனத்தை உரைப்பதாகிய கால் முடம் போன்ற தன்மை கொண்டவன் என்றாலும் குறையைப் பற்றி  நின்று அக்குழந்தையை பிரிய மனம் வருமோ(வராது); (அதுபோல்) நாய்த் தன்மை உடைய  யாம் செய்யும் வினைகளை பஞ்சுப் பொதியில் வைத்த தீப்பொறி போல் முழுவதும் அழித்து எம்மை ஞானவடிவாகிய சிவத்துள் சேர்த்து அருள்வாயாக.

விளக்க உரை

  • அன்னையைப் போற்றி தன் வினைகளை அழிக்க வேண்டுதல்
  • ‘பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்’ எனும் அபிராமி அந்தாதி பாடல் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • அணங்கு  – அழகு; வடிவு, தெய்வம்; தெய்வமகள்; தெய்வத்திற்கு ஒப்பான மாதர், வருத்திக் கொல்லும் தெய்வமகள்; தீண்டி வருத்தும் தெய்வப்பெண், வருத்தம்; நோய்; மையல்நோய், அச்சம், வெறியாட்டு, பத்திரகாளி, தேவர்க்காடும் கூத்து, விருப்பம், மயக்க நோய், கொலை, கொல்லிப்பாவை, பெண்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 15 (2018)

பாடல்

மாடுதானாலும் ஒருபோக்குண்டு; மனிதருக்கோ
     அவ்வளவும் தெரியா தப்பா!
நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார்;
     நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார்;
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு; அரிய தந்தை
     யினஞ்சேரு மென்றுந் தோணார்;
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித் தளமான
     தீயில்விழத் தயங்கினாரே

அகத்தியர்

பதவுரை

ஐந்தறிவு மட்டுமே பெற்றதாயினும் மாடு தன் கவனத்தை தன்னை செலுத்துபவன் மீதே கொண்டு அதே போக்கில் கவனச் சிதறல் இல்லாது பயணிக்கும்.; ஆனால் ஆறறிவு பெற்றிருந்தும் மனிதர்கள் அவ்வாறு அறிய இயலாதவர்கள்; முற்பிறவியில் செய்த நல்ல மற்றும் தீய செயல்களின் விளைவே இப்பிறவி சார்ந்த கர்மங்கள் என்பதை மறந்து நரகம் என்றும், சொர்கம் என்றும் வீண் பேச்சுப் பேசி வாழ்வைக் கழித்திடுவார்கள். கண்களைக் கவறும் நாட்டியம் போலான நடை உடை பாவனைகளைக் கொண்ட  பெண்களைத் தங்கள் சகோதரிகள் (தந்தை இனம்) என எண்ணவே தோணாது வாழ்வார். வெளியில் அழகாகவும் பொருள் விடமாகவும் பேசும் நங்கையர்களின் மேலேயே கவனம் செலுத்தி, சிற்றின்பங்களின் பால் கொண்ட விருப்பம் துறந்து உடலின் மேல்தளமான சகஸ்ராரத்தில் அணையா விளக்காய் கனன்று கொண்டிருக்கும் கனலில் சேர்வதற்குத் தயங்குகிறார்கள்.

விளக்க உரை

  • மனிதகுலத்தின் மேலான தாக்கத்தை வெளிப்படுத்தும் அகத்தியப் பெருமானின் பாடல்.
  • தந்தை இனம் மட்டுமே சகோதரத்துவதை ஏற்படுத்தும்; உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகவே எண்ணுதல் தம்மை மேம்பட்ட நிலைக்கு அழைத்துச் செல்லும் முக்கிய இறை வழிகளில் ஒன்று. ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ எனும் வரிகளுடன் ‘அரிய தந்தை’ எனும் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • தன்னில் இருந்து மனித குலம் மீது எவ்வகையிலும்  கடும் சொல் விழக் கூடாது என்பதற்காக ‘ஆடுகின்ற தேவதைகள்’ எனும் பதத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

மதனா அண்ணா அவர்களுக்கு நன்றி.

சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 14 (2018)

 

பாடல்

அடியார் மனத்தில் நினைத்த கருமம் அனைத்துமங்கே
முடியாத தேது முடித்தருள் வாய் முருகாரலங்கல்
கடியார் மலர்க் கொன்றை மாலிகை சூடிய கண்ணுதலே
தடியேந்திய கையனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

அழகிய தளிர் நிறைந்து சூட்டப்பட்ட கொன்றை மலர் மாலையை அடையார்களால் சூட்டப்பட்டு அதை அணிந்தவனே, காப்பதன் பொருட்டு தடியினை கைகளில் ஏந்தியவனே, சீகாழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே, ‘உன்னிடத்தில் பற்றுக் கொண்ட அடியவர்கள் மனதில் தோன்றிய சிந்தனைகள் உன்னைப் பற்றியப் பின் முடியாது ஏது?’ என்று அவற்றை முடித்து அருள்வாய்.

விளக்க உரை

  • அலங்கல்  –  மாலை, பூமாலை, அசையும் கதிர், தளிர், ஒழுங்கு, ஒலி, துளசி, முத்துச்சிப்பி

ஆதினம் அவர்கள் பக்தி நிலையில் எழுதியதால், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 13 (2018)

பாடல்

கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்
   திற்புத சேனைக் கதிபதி யின்பக்
      கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் …… கரைபால்தேன்
கட்டிள நீர்முக் கனிபய றம்பொற்
   றொப்பையி னேறிட் டருளிய தந்திக்
      கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் …… பரியாய
பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப்
   பொற்சரி நாதப் பரிபுர என்றுப்
      பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் …… தினிதேயான்
பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்
   றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற்
      றுப்புக லாகத் தமுதையு முண்டிட் …… டிடுவேனோ
தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்
   குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக்
      கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் …… செவையாகித்
திக்கய மாடச் சிலசில பம்பைத்
   தத்தன தானத் தடுடுடு வென்கச்
      செப்பறை தாளத் தகுதொகு வென்கச் …… சிலபேரி
உற்பன மாகத் தடிபடு சம்பத்
   தற்புத மாகத் தமரர்பு ரம்பெற்
      றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் …… தொடுவேலா
உட்பொருள் ஞானக் குறமக ளும்பற்
   சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்
      றுத்தர கோசத் தலமுறை கந்தப் …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

பதவுரை

போர் செய்வதற்கு ஏதுவான உடலை உடைய கூட்டமான குதிரைகளும், யானைகளும் நிரம்பியதும், அசுரர்களின் பிணங்கள் குப்பை போன்று தோற்றம் உடையதாகி, எட்டுத் திசைகளையும் மூடி இரத்தத்தால் திசைகள் எல்லாம் சிவக்க, எட்டுத் திக்குகளிலும் உள்ள ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம் ஆகிய யானைகள்  அசைந்து ஆடவும், சிற்சில பறை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்று முழங்கவும், தாளங்கள் செய்யும் ஒலி தகு தொகு என்று ஒலிக்கவும், சில முரசு வாத்தியங்கள் மின்னல் மின்னுவது போலவும், இடி இடிப்பது போலவும் தோன்ற, அற்புதமான விண்ணுலகத்து தேவர்களின் ஊரானதும், பொன்னால் ஆனதுமான பொன்னுலகத்தைத் திரும்பப் பெற்று, செல்வங்களை அடைந்து, பொன் மலர்களைச் சிந்தும் படியாக வேலாயுதத்தைச் செலுத்திய வேலனே! மெய்ப் பொருளை அறிந்த ஞானி வடிவாகிய  குறமகள் வள்ளியும், ஐராவதம் எனும் யானையால் வளர்க்கப்பட்ட அழகிய தேவயானையும், மேம்பட்ட வாகனமான மயிலும் விளங்கப் பெற்று, உத்தர கோச மங்கை எனும் திருதலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே! வேண்டுவோர்க்கு வேண்டியதைத் அருளும் கற்பக மரம் போன்ற ஞான மூர்த்தியாகிய கடவுளே, முன்பு விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானைக்குத் தலைவனே, இன்பம் தரத்தக்கதான  தேன் சுவை கொண்ட கரும்பு, வெல்லம், அன்னம், வெள்ளைச் சர்க்கரை, பால், தேன், நிரம்பிய இளநீர்,  மா, பலா மற்றும் வாழை என்னும் மூன்று வகையான பழங்கள், பயறு ஆகிய இவைகளை அழகிய பொலிவுள்ள வயிற்றில் ஏற்றுக் கொண்டு அருளும் யானையாகிய கணபதியின் வலிமை நிறைந்த தம்பியே, எழில்மிகு திருவடியை முற்பிறப்பில் வணங்கியதால், உனக்கு வாகனமாக இப்பிறவியில் அமைந்த அழகிய மயிலை உடையவனே, திரளாக உள்ளதும், உருளும் தன்மை உடையதுமான ரத்தினம் பதித்த தண்டையையும், அழகிய சந்த நாதத்தோடு ஒலிக்கின்ற சிலம்புகளையும் அணிந்தவனே, என்றெல்லாம் அழகாக உன்னை உள்ளக் கசிவோடு மனம் கசிந்து தியானித்து, நன்றாக யான், உனது அழகிய திருப்புகழைப் பாடி சிவ பதத்தையும் பெற்று, மெய்  ஞானப் பெரு வெளியாகிய சிதாகாச உயர் நிலையைப் பெற்று, அதனால் உண்டாகும்  ஞான அமுதை உண்ணப் பெறுவேனோ?

விளக்க உரை

  • உற்பனம் – விரைவில் அறிகை, உத்தமம், தோன்றியது, உற்பத்தி செய்தது, பிறப்பு, ஞானம், கல்வி, நிமித்தம்.
  • உத்தரகோசமங்கை திருத்தலத் திருப்புகழ்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 12 (2018)

பாடல்

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
     நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
     அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
     இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
     எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

விரும்பத்தக்க பெண் யானையைப் போலவும், இளமையும் அழகியதுமான அன்னம் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியை தம்முடைய துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதகணங்கள் நின்று இசை பாட அதற்கேற்ப ஆடுபவரும்,  நீண்டதும், பரந்து விரிந்ததும் ஆன  சடை மீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர் தம்முடைய இடமாக விளங்கும் திருத்தலம் எதுவெனில் ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையில் யாழ் ஓசையை ஒத்து விளங்குமாறு இருப்பதும்,  அதன் அருகில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும், அழகிய சோலைகளில் குயில்கள் பாடவும் கொண்டு விளங்கக் கூடியதான  திருத்தருமபுரம் என்னும் நகராகும்.

விளக்க உரை

  • பண் : யாழ்முறி
  • மடப்பிடி – பெண் யானை
  • புன்னை –  நெய்தல் சார்புடையதல் பற்றி
  • திருஞானசம்பந்தரின் பதிகங்களின்மேல் அளவிலாத பக்தியுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவே அந்தப் பதிகங்களைத் தம்முடைய யாழ் வாத்தியத்தின் மூலம் இசைத்துவந்தவர். திருஞானசம்பந்தர் இத் திருத்தலம் வந்த போது யாழ் வாத்தியத்தால் வாசிக்க முடியாத அளவுக்கு ஒரு பதிகத்தைப் பாட வேண்ட, திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் இது. பதிகத்தில் வரும் `எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே..’ எனும் வரிகளில் வாசிக்க இயலாமல் போனது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 11 (2018)

பாடல்

கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான்
     கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
     நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்
     கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை
மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
     எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே. 

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

எக்காலத்திலும் அறிவினால் தன்னை உணர்ந்து உரைப்பவர்களாகவும், அறியாதவர்களாள் உரைக்கப்படும் பொருள் அற்ற வார்த்தைகளை ஏற்காமலும் இருக்கும் ‘நாடவர்’ எனவும் ‘நாட்டார்’ எனவும் அழைக்கப்படுபவர்களாலும் உரைக்கப்படும் சொற்களைக் கேட்டு அறியாதவனும்,  தனக்கு எந்த வகையிலும் எந்த ஒரு கேடும் இல்லாதவனும், தனக்கென எந்த வகையிலும் உறவு இல்லாதவனும், கேட்டல் என்னும் தொழில் இல்லாமல் இயல்பாகவே எல்லாவற்றையும் கேட்பவனும் ஆகிய இறைவன், என்னுடைய சிறுமையை நோக்காது நாய்க்கு ஆசனம் அளித்து இருக்கையில் அமரச்செய்தது  போல தன் அருகில் இருக்கச் செய்து, காட்டுவற்கு அரிதான தன் உண்மை நிலையைக் காட்டி, நான் எந்த காலத்திலும் கேட்காத சிவாகமங்களின் பொருள்களைக் கேட்பிக்கச் செய்து, மீண்டும் நான் பிறவாமல் என்னைத் தடுத்து ஆட்கொண்டான். இது எம்பெருமான் செய்த ஒரு வித்தை ஆகும்.

விளக்க உரை

  • தவிசு – இருக்கை; ஆசனம்
  • ‘ஆரும் கேட்டு அறியாதான்` – உலகல் உள்ளவர்களால் கேட்டறியப் படாமை
  • கேளாதே எல்லாம் கேட்டான் – பிறர் அறிவிக்க பின் அறிவது அல்லாமல், தானே எல்லாவற்றையும் நன்கு உணர்ந்தவன்.
  • ‘நாயினுக்குத் தவிசிட்டு’ – உயர்ந்தவர்களுக்கு செய்யத் தக்கதை இழந்தோர்க்கு செய்ததை அறிவித்தல் பொருட்டு
  • காண இயலாப் பொருளைக் காணச் செய்தல், கேட்க இயலாப் பொருளை கேட்கச் செய்தல், வினைகளில் இந்து காத்து மீண்டும் பிறவாமல் செய்தல் ஆகியவை உயர்ந்தோர்க்கே செய்யக் கூடியவை;  இவற்றையும் எனக்குச் செய்தான் என்பது கருத்து.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 10 (2018)

பாடல்

அவசியமுன் வேண்டிப் …… பலகாலும்
அறிவினுணர்ந் தாண்டுக் …… கொருநாளில்
தவசெபமுந் தீண்டிக் …… கனிவாகிச்
சரணமதும் பூண்டற் …… கருள்வாயே
சவதமொடுந் தாண்டித் …… தகரூர்வாய்
சடுசமயங் காண்டற் …… கரியானே
சிவகுமரன் பீண்டிற் …… பெயரானே
திருமுருகன் பூண்டிப் …… பெருமாளே

திருப்புகழ் – அருணகிரிநாதர்

பதவுரை

சபதம் செய்து இந்த ஆட்டை* அடக்குவேன் என்று உரைத்து, ஆட்டின் மீது ஏறி அதனை வாகனமாகச் செலுத்தியவனே! காணாபத்தியம், கௌமாரம், சௌரம், சைவம், வைணவம், சாக்தம்  என வழங்கப்பெறும்  ஆறு வகை சமயத்தவராலும் காணுதற்கு அரியவனே! சிவனின் புத்திரனாகிய சிவகுமாரனே! உன்னிடத்தில் அன்பு கொண்டு உன்னை நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும் பிரியாதவனே! திருமுருகன்பூண்டி என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (வினைகளை களைவதன் பொருட்டு) உன்னைத் தொழுவது அவசியமென அறிந்து, பலமுறையும் பிரார்த்தித்து, எனது சுய அறிவினால் உன்னை உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளாவது தவ ஒழுக்கத்தையும், ஜெபம்  மேற்கொண்டு, உள்ளம் கனிந்து, உனது திருவடிகளை மனத்தே தரிப்பதற்கு நீ அருள்வாயாக.

விளக்க உரை

  • * நாரதர் ஒரு முறை யாகம் செய்த போது தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகுவை அனுப்பி அவர் மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட வரலாறு – கந்த புராணம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 9 (2018)

பாடல்

தந்தை தாயார் சுற்றத்தார்
      சகல வாழ்வும் உனதருளே
   தமியேன் செய்யும் வினைஉனது
      சடலம் உனது உயிர் உனது

சிந்தைக் கிசைந்த அடிமை என்று
      செகத்தில் எவர்க்குந் தெரியாதா
   சிந்தா மணியே எனக்குவருஞ்
      செயலே உனது செயல்அலவோ

சொந்த அடிமை கிடந்தலையச்
      சும்மா இருந்தால் உனைவிடுமோ
  சோதி வதன மணிவிளக்கே
      துவாத சாந்தப் பெருவெளியே

மைந்தன் எனவந் தாண்டருள்வாய்
      வனச வதனி நவசரணி
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயாகிய நீ, தந்தை, தாயார், உறவினர்கள் எனும் சுற்றத்தார் மற்றும் சகல வாழ்வும் உனது அருளால் ஏற்பட்டது; பிராப்தம் ஆகிய என்னுடைய தனித்த நிகழ்கால வினைகளும் உன்னுடைய அருளால் உண்டாக்கப்பட்டது; சடலம் உன்னுடையது; உயிர் உன்னுடையது; நான், உனது சிந்தையில் ஏற்படும் எண்ணங்களை மாறுபாடு இல்லாமல் செய்யும் உனது அடிமை என்று இந்த உலகினில் அனைவர்க்கும் தெரியும்; விரும்பிய அனைத்தும் கொடுக்கவல்லதான தெய்வமணி எனப்படும்  சிந்தா மணியே! வினைக்கு உட்பட்டு எனக்கு வரும் செயல்கள் அனைத்தும் உன்னுடைய சிந்தையின் செயல்கள்; உனக்கு சொந்தமான அடிமை இவ்வுலகில் கிடந்து அலையும் போது நீ சும்மா இருந்தால் அது உன்னை விடுமா? (விடாது); உடலின் உச்சி ஆகியாகிய தலையில் பெரிய இடமானதும், பிரகாசிக்கின்றதும் ஆன மணி விளக்கே! என்னை மைந்தனாக பாவித்து எனை வந்து ஆண்டு அருளவேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 8 (2018)

பாடல்

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே

சிவவாக்கியர்

பதவுரை

அருளைத் தரும் நாதர் மற்றும் அம்மையின் உண்மையான திருவடிகளைக் கொண்டு இயம்புவது என்னவெனில் வினையது கொண்டு உருவம் கொண்ட உடலில் இருக்கும் நாடியில் தசவாயுக்களில் ஒன்றானதும், பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் ஆகிய வாயுக்களுடன் இணைந்து அவற்றை இயக்கி தானும் இயங்குவதான தனஞ்செயனை எண்ணத்தினால் குவித்து துரியத்தின் இடமான கபாலத்தில் ஏற்றும் முறையை தெரிந்து கொண்டால், முதுமை உடையவர்களும் இளமைத் தோற்றம் உடையவராக ஆகிவிடுவார்கள்; அவர்களது மேனி சிவப்பு நிறம் கொண்டிடும்.

விளக்க உரை

  • கபாலம் ஏற்றுதல் – குரு மூலமாக அறிக.

சித்தர் பாடல் என்பதாலும், பக்தி நிலையில் இருந்து எழுதியதாலும், அவர்களின் உள் அனுபவங்களை மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 7 (2018)

பாடல்

பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப் பொருகடற்பவளமொ டழனிறம்புரையக்
குன்றிரண்டன்ன தோளுடையகலங் குலாயவெண்ணூலொடு கொழும்பொடியணிவர்
மின்றிரண்டன்ன நுண்ணிடையரிவை மெல்லியலாளையோர் பாகமாப்பேணி
அன்றிரண்டுருவ மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவனான ஆட்சீஸ்வரர், தமது முறுக்கேறிய பொன் திரண்டதைப் போன்ற சடையையும்,  பெருங்கடலில் அலைகளில் தோன்றியதும், தீ வண்ணத்தை ஒத்ததுமான பவள கொடியையும் கொண்டு, குன்றுகள் போன்ற தரும் இரண்டு தோள்களில் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினையும், மென்மைத் தன்மையும் வாய்ந்த இளம் பெண்ணாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓர் உருவில் இரண்டு உருவாய்த் தோன்றும் அடிகளாவார்.

விளக்க உரை

  • கொழும் பொடி – வளப்பமான விபூதி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 6 (2018)

பாடல்

வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
   கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்
   டூன்வந் துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந் தமுதின் தெளிவின் ஒளிவந்த
   வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

விண்ணுலகில் தோன்றிய தேவர்களும், திருமால், பிரமன், இந்திரன் முதலானவர்களும், காட்டில் சென்று ஊண் உறக்கமின்றி, தம்மை மறந்து கடும் தவம் செய்தும் காண்பதற்கு அரியவனாகிய சிவபெருமான்  தானே வலிய வந்து நாய் போன்றவனாகிய அடியேனைத் தாய்போலக் கருணை செய்து, உயிரினை உருகச் செய்து, என் ரோமங்கள் விதிர்விதிர்க்குமாறு செய்து, இனிமையான அமுதம் போல், தெளிவான ஒளிவடிவமான அவன் பெருமை பொருந்திய திருவடியைப் புகழ்ந்து அம்மானைப் பாட்டாக  பாடுவோமாக.

விளக்க உரை

  • ‘தேவர்களும் நிலவுலகத்திற்கு வந்து தவம் புரிகின்றனர்` எனும் பொருளில். இந்திரன் சீகாழிப்பதியில் தங்கித் தவம் புரிந்தது – கந்த புராணம் உரைத்தது
  • ‘கானின்று வற்றியும்’ – ஊண் உறக்கமின்றித் தவம் புரிதல்
  • ‘புற்றெழுந்தும்’ – தம்மை மறந்து தவம் புரிதல்
  • உயிர்ப்பு – (அன்பினால்)  உயிர்த்தல்; மூச்செறிதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 5 (2018)

பாடல்

பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி
     எடுத்துரையில் புனைவேன் சில்லோர்
தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி
     ஓடுவனித் தரத்தேன் இங்கே
முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின்
     அருள்இலதேல் முன்னே வைத்த
அடிஎடுக்க முடியாதே அந்தோஇச்
     சிறியேனால் ஆவ தென்னே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

திருநீற்றுப் பொடியை எடுத்து அணியச் சென்று, அந்தக் காரணத்தை மறந்து, பின் வெறும் மடியைத் தட்டிப் பார்த்து, இல்லாமையை உணர்ந்து அதற்காக இறங்கி, அவ்வாறு இல்லாமல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் கடையனானவனும், சிலர் கையில் தடி எடுத்து வரக்கண்டு, அதனால் அச்சம் உண்டாகி , மனம் கலங்கி வேறிடம் நாடி விரைந்தோடுவோனும் ஆகிய முடிவெடுக்க இயலாத யான், இவ்வுலகில் நினது திரு அருள் துணை இல்லையாயின் முடிவெடுப்பதும் தலை நிமிர வல்லவனும் ஆவேனோ? முன் வைத்த காலைத் தான் எடுக்க வல்லவன் ஆவேனோ?? ஐயோ, சிறியவனாகிய என்னால் யாது செய்ய முடியும்?

விளக்க உரை

  • திருவருளின்றி ஒரு செயலும் செய்ய இயலாது என்பதை தெரிவிக்கும் பாடல்
  • பொடி – திருநீற்று வெண் பொடி.
  • மடி – அரையில் உடுத்த ஆடையின் மடித்த கூறு.
  • ‘பொடி எடுக்கப் போய் அதனை மறந்து மடி எடுத்து அரையிற் புனைவேன்’ – கொண்ட சிந்தையில் நிலைத்தன்மையும், மன வலிமையும், வினையும் உடையவன் அல்ல என்பதை உரைத்தல்.
  • ‘உளம் கலங்கி யோடுவேன்’ –  தம் வழியில் செல்லும் சிலர் கையில் தடி ஏந்தி செல்வது கண்டால் தம்மை அடிப்பரென அஞ்சி ஒதுக்கிடம் நாடி ஓடும் கீழ்மைப் பண்புடையவன்
  • சிறியேன் – குணம் அறிவு செயல்களில் சிறுமையுடையவன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 4 (2018)

பாடல்

கரந்தை கூவிள மாலை
     கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ
     வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
     திகழ்தரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை
     வல்வினை நலியஒட் டாரே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

திருத்தமான மாடங்கள் உடையதும்,  உயர்ந்து தோன்றுகின்றதும், பெரும் புகழ் கொண்டதும் ஆன திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனானவர், பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆநிரைகளை மீட்டுவருவதை குறிப்பிடுவதாகிய  கரந்தைப் பூவினாலும், முக்கூறுகளைக் கொண்டதும்,  திரிசூலத்தின் குறியீடாகவும் உள்ளது கூவிள இலை என்பதான வில்வ இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிகுந்த பூதகணங்கள் புடைசூழ பரமனாகி நம் இறைவனானவரும், அமுதம் போல்பவரும், தம் அடியாரை வலிய வினைகள் வந்து துன்புறுத்தாமல் காப்பவரும் ஆவர்.

விளக்க உரை

  • மாயைக்கு உட்பட்ட பசுவாகிய உயிர்களை மீட்கும் பதி எனும் சைவ சித்தாந்த கருத்து ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 3 (2018)

பாடல்

கான நாடு கலந்து திரியிலென்
ஈன மின்றி யிரும்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்ட லொழிந்துவான் நோக்கிலென்
ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

இறைவன் ஞான வடிவினன் என்பதை அறிதவர்களுக்கு மட்டுமே நற்பயன் கிடைக்கும்; அவ்வாறு இல்லாமல் க்ஷேத்திராடனம் என்பதன் பொருட்டு காடு மற்றும் நாடு சார்ந்த பகுதிகளில் மாறிமாறி திரிந்தாலும், அங்கங்கள் ஊனம் ஆகும் அளவிற்கு பெருந்தவம் செய்தாலும், ஊனுண்டலை விடுத்து, தத்துவ ஆராய்ச்சி ஆகிய ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டாலும் என்ன பயன் கிடைக்கக் கூடும்?

விளக்க உரை

  • ஈனம் – குற்றம்
  • இரும் – பெரிய

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 2 (2018)

பாடல்

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பாரபரச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலைவிய ளாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

அம்மையானவள், அருளால் தோற்றுவித்துள்ள உலகமும் மற்றும் உண்பொருள்களும் அந்த உண் பொருள்களுடன் இணைந்த அழிவில்லாத பலவுயிர்களும், எண் திசைகளுடன் கூடி மேல் மற்றும் கீழ் இணைந்த பத்துத்திசையிலும், நிறைந்து நின்று இயக்கும் தன்மையால்  பத்து முகம் உடையவளாகவும், சிவசக்தி வடிவமாகவும், சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி  முதலிய நால்வகை வாக்குகளும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்களது உயர்வும், தாழ்வுமாகிய எண்ண அலைவுகளும், அவ் எண்ணங்களின் வழி நிகழ்கின்ற செயலாகவும் நிற்பாள்.

விளக்க உரை

  • திரிபுரை வழிபாட்டு முறைகளும், அவற்றின்  பயன்களும் விளக்கப்பட்டுள்ளது
  • வித்தை – திருவடியுணர்வு; மெய்யுணர்வு; பதிஞானம்; பிரம வித்தை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 1 (2018)

பாடல்

கொம்பு அனையாளை குவிமுலை மங்கையை
வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம் பவளத் திருமேனிச் சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

பூங்கொம்பு  கொம்பு போன்ற துவளும் இடையினை உடையாளை, குவிந்த அழகிய தனங்களையுடைய மங்கையை, மணம் வீசுகின்ற மலர்சூடிய கூந்தலை உடையவளை, தேவர்களால் விரும்பிப் பூசிக்கப்படுபவளை, செம்மையான பவழம் போன்ற திருமேனியை உடைய ஆகிய திரிபுரையை பெருந்துணையென்று உறுதியாக நம்பி மிக விரும்பி என் உள்ளத்துள் வைத்தேன்.

விளக்க உரை

  • திரிபுரையின் தியானச் சிறப்பு பற்றிக் கூறப்பட்டப் பாடல்
  • சிறுமி – கௌரி; எட்டு அல்லது பத்து ஆண்டுப் பருவப்பெண்.
  • வானவர் நாடியை – தேவ வாழ்வினை உடையவள் என்றும் சில இடங்களில் விளக்கப்பட்டுளது. தேவ வாழ்வினை கொண்டவள் ஆயினும் அவள் எப்பொழுதும் சிறுமியாக இருக்கிறாள்.
  •  `மென்கடிக் குங்கும தோயம் என்ன’ எனும் அபிராமி அந்தாதி பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 31 (2018)

பாடல்

போகம் செய் சத்தி , புரிகுழ லாளொடும்
பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும்,
ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்தோறும்
பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை ஆனவள், உயிர்களுக்கு இன்பத்தைத் தருபவள் சக்தி; திரண்டு சுருண்ட நீண்ட கூந்தலை உடைய பராசக்தி ஆகி உயிர்களை பக்குவப்படுத்துவாள்; அடியார்கள் தினம்தோறும் தங்கள் உள்ளத்தில் அவளை தியானிக்க, அவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உண்மை ஞானமாகிய கொடி படருவதற்கு  ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி ஆனவள்.

விளக்க உரை

  • சிவபெருமானுடைய பஞ்ச சத்திகளுள் ஒன்றானதும்,  ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களை தந்து உண்மையை மறைத்தல் செய்யும் சத்தி ஆகிய திரோதான சத்தியும்,  அருள் சத்தியும் வேறு வேறு அல்ல என்பதைக் கூறும் பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 30 (2018)

பாடல்

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம்
புராசத்தி புண்ணிய மாகிய போகமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை ஆனவள், எங்கும் வியாபித்து, மாபெரும் சக்தி ஆனவள்; எல்லா வகையிலும் எல்லாவற்றுக்கும் ஆதாரமானவள்; அதோடுமட்டுமல்லாமல் அதில் எல்லாவற்றிலும் பொருந்தி அதன் மெய் உணர்வு வடிவகமாக இருப்பவள்; திரிவுபடும் ஊழி எனப்படும் மிக நீண்ட காலத்தில் உயிர்களிடத்தில் உடனிருந்து நின்று அதன் புண்ணியப் பலன்களை அருள்பவள்.

விளக்க உரை

  • பராசத்தி – எங்கும் வியாபித்துள்ள சத்தி.
  • தராசத்தி – ஆதாரசத்தி, தாங்கும் ஆற்றல்
  • உராசத்தி – பொருந்தும் சத்தி.
  • புராசத்தி – திரிபுரை.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 29 (2018)

பாடல்

தான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி
ஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன்
வான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம்
கோன்எங்கும் நின்ற குறிபல பாரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

எங்கெல்லாம் சிவம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன்  உடன் இருப்பாள் சக்தி; எங்கெல்லாம் உடல் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன் அந்த உடல் சார்ந்திருக்கும் உயிருக்குக் காவல் ஆவாள்; எங்கெல்லாம் வான் எனும் ஆகாசம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் விளங்கி, அதைத் தாண்டிய பரவெளியிலும் சிவனோடு நிறைந்து நிற்கும் அடையாளங்களை ஆராய்ந்து அறிவாயாக!

விளக்க உரை

  • குறி, வடிவம் – சிவனது வடிவங்கள் யாவும் சத்தி ஆதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல். அஃதாவது சத்தியும் சிவமும் உலகில் எவ்வித பேதமும் இல்லாமல் நின்ற நிலையைக் கூறுதல்.
  • உயிர்களுக்கு உடல்  ஆதாரமாக இருப்பதும், எல்லா பொருள்களுக்கும் வானம் ஆதாரமாக இருப்பதும் வெளிப்படை. (சைவ சித்தாந்த கருத்துப்படி).

Loading

சமூக ஊடகங்கள்