பாடல்
கரந்தை கூவிள மாலை
கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ
வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
திகழ்தரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை
வல்வினை நலியஒட் டாரே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
திருத்தமான மாடங்கள் உடையதும், உயர்ந்து தோன்றுகின்றதும், பெரும் புகழ் கொண்டதும் ஆன திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனானவர், பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆநிரைகளை மீட்டுவருவதை குறிப்பிடுவதாகிய கரந்தைப் பூவினாலும், முக்கூறுகளைக் கொண்டதும், திரிசூலத்தின் குறியீடாகவும் உள்ளது கூவிள இலை என்பதான வில்வ இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிகுந்த பூதகணங்கள் புடைசூழ பரமனாகி நம் இறைவனானவரும், அமுதம் போல்பவரும், தம் அடியாரை வலிய வினைகள் வந்து துன்புறுத்தாமல் காப்பவரும் ஆவர்.
விளக்க உரை
- மாயைக்கு உட்பட்ட பசுவாகிய உயிர்களை மீட்கும் பதி எனும் சைவ சித்தாந்த கருத்து ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.