பதினொன்றாம் திருமுறை – நம்பியாண்டார் நம்பிகள் – விநாயகர் இரட்டை மணிமாலை
கருத்து – சிவனின் மகனான விநாயகர் திருமேனி தன் சிறப்புக் கூறல்.
பதவுரை
சேற்றினை உடைய வயல்களை சார்ந்ததும், நிலை பெற்றதான நீர் நிலைகளில் ஆரல் எனும் மீன் வகைகளை கொண்டதுமான திருநாரையூர் எனும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் திருநாரையூர்ச் சிவபெருமான் மகன் களிறு முகம் உடையவன் ஆனவனாகவும், அவனது காயம் ஆகிய திருமேனி செந்தீயைப்போல ஒளிவிடுகின்ற நிறத்தைக் கொண்டிருப்பது என்னே வியப்பு
கருத்து – பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் எமனுடை துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
ஈசனையே எக்காலத்திலும் நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்ததும், பல வழிகளில் திரிந்து செல்லும் வஞ்சக தன்மை உடையதும் ஆன மனதை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்த செய்வதும் ஆன திருவைந்தெழுத்தே மனமானது உறங்கும் பொழுதும், மனம் உறங்காமல் விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருகி நாள்தோறும் நினைத்துப் போற்றுங்கள்.
விளக்கஉரை
போழ்தின் என்ற சொல்லைத் துஞ்சல் என்பதோடு கூட்டித் துஞ்சும் பொழுதினும், துஞ்சுதல் இல்லாத போழ்தினும் என்றும் விளக்கம் பெறும்
நெஞ்சகம் – மனம்
நைந்து – உருகி
நெஞ்சக நைதல் – அன்பினால் குழைதல்
வஞ்சகம் – ஈசன் சிந்தனை விடுத்து சிந்தையை இடையே மாற்றி வினையைப் பிற இடங்களிள் செலுத்தி வஞ்சித்தல்
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில் நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே
வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்
கருத்து – மெய்ஞான கண்டு உணர்ந்தவர்களை வராகி கைவிடமாட்டாள் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
மெய்ஞானக் கல்வியைக் கற்று அறிந்தவர்களால் பெரிதும் போற்றி வழிபடத்தக்கதான பஞ்சமி தினத்துக்கு உரித்தானவளும், தன்னை பகைப்பவர்களை இரும்புத் தடி கொண்டு அடிக்கும் பேய் போன்றவர்களின் குருதியினைக் குடித்து அவர்களின் குடலினை தோளில் மாலையாக இட்டு அதில் மகிழ்வு கொண்டு நிலை பெற்று வாயில் முற்றத்தில் (சுடுகாடு எனவும் கொள்ளலாம்) இருப்பவளும், பதினான்கு உலகமும் நடுங்குமாறு செய்பவளும் ஆனவள் வாராகி ஆவாள்.
கருத்து – ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளியவனே, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ள்வர்களுக்கு தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையின் காரணமாக உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி அடியேன், உலகியலில் இருந்தும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.
என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே மின்னு வார்சடை வேத விழுப்பொருள் செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி மன்னு சோதிநம் பால்வந்து வைகவே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – திருநாவுக்கரசர், சோதி வடிவான ஈசன் தம்மிடம் எழுந்தருளியதை கூறும் பாடல்
பதவுரை
நெஞ்சமே! மின்னல்போல விளங்குகின்ற நீண்ட சடையை உடையவனும், மறை ஆகிய வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவனும், செம்மையான நெற்கதிர்கள் பொருந்திய வயல்கள் பொருந்தி வயல் உடைய திருச்சேறையுள் செந்நெறியில் நிலைபெற்ற ஒளிவடிவமானதான சோதியும் ஆகிய பெருமான் நம்மிடம் வந்து நிலையாக வந்து எழுந்தருள எத்தகைய சிறந்த தவம் செய்தாய்.
விளக்கஉரை
திருச்சேறை திருதலத்து தேவாரப்பாடல்
என்ன – எத்தகைய
வேத விழுப்பொருள் – வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவன் .
எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே பந்தம் வீடவை யாய பராபரன் அந்த மில்புக ழாரூ ரரனெறி சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – திருவாரூர், அரநெறியை உள்ளத்தில் கொண்டு மறவாது உணர்தலும் தலையால் தொழலும் நல்ல தவம் உரையர்களுக்கு அன்றி மற்றவர்களுக்கு எய்தாது என்பதை விளக்கும் பாடல்
பதவுரை
நெஞ்சமே! ஆன்மாவைப் பிணித்துள்ள பாசத்தினை ஏற்படுத்துவதும் உலக் ஈடுபாட்டினை தருவதாகிய பந்தமும், முடிவில்லா புகழை உடையவனும், முக்தி பேற்றை அளிக்கும் வீடுமாயிருக்கும் பரம்பொருளாகிய திருவாரூர்ப் பெருமானுக்கு உரியதான முடிவற்ற புகழ் வாய்ந்த திருவாரூர் அரநெறி சிந்தையினும், சிரத்தினும் தங்குதற்கு மேலாகிய தவங்கள் பலவற்றுள் எந்தத்தவத்தை நீ செய்தாய்?
தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி ஆனிடை அஞ்சுங் கொண்டு அன்பினால் அமர வாட்டி வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிகள் தம்மை நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
தேன் உடைய மலர்களை பறித்துக் கொண்டு வந்து திருவடிகளிலே பொருந்துமாறு அவற்றை அர்ப்பணித்து, அன்பு கொண்டு அவரை அமரச் செய்து கோ எனும் பசுவிடத்தில் இருந்து பெறப்படுவதாகிய பஞ்சகவ்வியத்தால் அடியார்கள் அபிடேகம் செய்ய அதை உவந்து ஏற்று வானில் உலவும் பிறையைச் சடையில் சூடிய வலம்புரத்துப் பெருமானை அடியேன் சரணமாக அடைந்து துதித்து நல்வினைப் பயனைப் பெற்றவன் ஆனேன்
விளக்கஉரை
ஏத்தப்பெற்று – முற் பிறவிகளிற் செய்த நல்வினைகளின் பயனை இப் பிறவியில் பெற்றேன்
தேன் உடை மலர்கள் – வண்டுகள் உடைத்தமையால் மலர்ந்த பூக்கள்
திருந்து அடி – ஞானம் முதிர முதிரச் ஞான சிந்தை அற்றிருந்தும், திருத்துவது சிவனருள். திருந்துவது ஆன்மா
திருந்து அடி – ஞானம் முதிர முதிரச் ஞான சிந்தை அற்றிருந்தும், திருத்துவது சிவனருள். திருந்துவது ஆன்மா.
அன்பினால் அமர ஆட்டி – தம் அன்பாம் மஞ்சனநீர் ஆட்டி; இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
நான் அடைந்து :- நான் கெட்டு அஃதாவது தற்போதம் அற்றுச் சொல்லுகின்ற அருளாளர்கள் கூறும் ` நான் ` குற்றமாகாது எனும் பொருளில்
கருத்து – வராகி அன்னையின் உருவத் தோற்றம் குறித்து கூறும் பாடல்.
பதவுரை
மலர்க்கொடி போன்றவளும், உடலுக்கு ஆற்றல் தரும் தெய்வம் ஆனவளும், ஐயும் கிலியும் எனும் பீஜ மந்திரங்கள் கொண்டு தொண்டர்களால் போற்றப்படுபவளும், அரியதான பச்சை நிற உடலும், கருணை மிகுந்ததான விழியும் கொண்டு, கைகளில் மலர்கள்,பிரம்பு, கபாலம், மற்றும் சூலம் ஆகியவை கொண்டவளான வராகி வழிபடும் அன்பர்கள் கண் முன்னே தோன்றும்படியாக இந்த உலகத்து உயிர்கள் துதிக்கும்படியாக வருவாள்.
விளக்கஉரை
அரியபச்சை – மரகதம் ஒத்த பச்சை நிறம் கொண்டவள் எனவும் கொள்ளலாம். மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி எனும் அபிராமி அந்தாதி பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
ஈனம் தரும்இதென்றெண்ணாமலே யிடும்பான் மெலிந்திங் கூனம் தரும்இந்தச் செல்வருக் கிச்சையுரை உரைத்தேன் வானம்தரும்உம் பருக்காய் அவுணரை மாட்டி நல்ல தானம் தரும்அண்ண லேகாழி யாபதுத் தாரணனே
பதப்பிரிப்பு
ஈனம் தரும் இதென்று எண்ணாமலே யிடும்பான் மெலிந்திங்கு ஊனம் தரும் இந்தச் செல்வருக்கிச்சையுரை உரைத்தேன் வானம் தரும் உம் பருக்காய் அவுணரை மாட்டி நல்ல தானம் தரும் அண்ணலே காழியாபதுத்தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
கருத்து – அசுரர்களிடம்இருந்துதேவர்களைகாத்தநீ, குற்றம்கொண்டஎன்னையும்காக்கவேண்டும்என்பதைகுறிக்கும்பாடல்.
பதவுரை
வானில் இருந்து வேண்டியவற்றை வழங்கும் தேவர்களை காப்பதன் பொருட்டு அசுரர்களை துன்பம் அடையச் செய்து அவர்களை துன்புறுத்தி தேவர்களுக்கு நல்ல சக்தியினையும், உறைவிடத்தையும் வழங்கும் இறைவனானவனும் காழிப் பதியில் உறைபவனும் ஆன ஆபதுத்தாரணனே! இந்த உலக வாழ்வானது குறைவு பட்டது என்பதை அறியாமல் செருக்குள்ளவனாக திரிந்து, தர்மத்தின் வழி நில்லாமல் செல்வம் உடையவருக்கு அவர்கள் விரும்பிய உரைகளை உரைத்தேன்.
கருத்து – ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
நெஞ்சே! குற்றமில்லாத மணிகளும் முத்துக்களும் நிறைந்ததும், அதனைக் கொண்டுவந்து சேர்க்கும் நிலையான காவிரி ஆற்றினால் சூழப்பட்டதுமான திருவலஞ்சுழி இறைவனைப் போற்றி பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் நாம் செய்த நல்வினைப் பயன்களில் நீ எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்.
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறி லாதவன் ஈச னொருவனே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
நூறுகோடி பிரமர்கள் அழிக்கப்பட்டார்கள்; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப் பெருகும் கங்கையாற்றின் மணலைவிட எண்ணிக்கை அற்றதான இந்திரர்கள் நிலையும் அவ் வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் இறைவனானவனும் ஈசன் எனப்படுபவனும் ஆன சிவபெருமான் மட்டுமே.
விளக்கஉரை
எண்ணிக்கை அற்ற அளவில் உயிர்கள் படைக்கப்பட்டன; அதில் பிரம்ம முடிச்சினை கண்டு உணர்ந்து பிரம்ம தன்மை அடைந்த நூறு கோடி பேர்கள் அழிக்கப்பட்டார்கள். ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள். என்று மொழி பகர்வார்களும் உண்டு. யோக மரபினை முன்வைத்து பிரம்மனுக்கு உரித்தான சுவாதிட்டானம் வரை கண்டு உணர்ந்தவர்களும், திருமாலுக்கு உரித்தான் மணிபூரகம் வரை கண்டு உணர்ந்தவர்களும் அதற்கு மேல் செல்ல இயலாமல் அழிக்கப்பட்டார்கள் என்று கூறுவதும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
ஊழிக் காலமாகிய சங்காரத்தில் இந்த உலகினை பெரிய கடல் சூழ்ந்து ஊழிவெள்ளம் ஏற்படப் பிரம்மன் இறப்பான்; அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும், வினைகளை ஒப்பு நோக்கி உயிர்களுக்கு வினைப்பயன்களை தருபவன் ஆகியவனும், கரிய கடல்போன்ற நிறமுடையவனும் ஆகிய திருமாலுடைய உடலையும் சுமந்து கொண்டு, அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனான எம் பெருமான சிவன் கங்காள வடிவம் கொண்டு ஒடுங்கிய உலகம் மீண்டும் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான்.
விளக்கஉரை
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் (திருமந்திரம்) – எல்லாவற்றையும் ஒடுக்கியபின் அவை ஒடுங்கிய சாம்பலைப் பூசுகின்ற என்னும் குறிப்பு பற்றியது.
மீளவரும் கடன் நின்று – ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து;
எம் இறை – எம் இறைவன்
நல்வீணை வாசிக்கும் – அழகிய வீணையை இயம்பும் இசையின் சுருதியியல் கெடாதவாறு அமைந்தது
கருத்து – சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
சங்காரம் எனும் பேரூழிக்காலத்தில் பெரியதான இந்த நிலமாகிய மண் புனல் என்படும் நீரில் ஒடுங்க, நீரானது நெருப்பு எனும் எரியில் ஒடுங்க, நெருப்பு வளி எனும் காற்றில் ஒடுங்க, காற்று ஆகாயத்தில் ஒடுங்க பரந்துபட்டதான இந்த உலகமும் உலகப் பொருள்களும் அனைத்தும் அழிய, இறுதியில் மால் அயன் இவர்களுடைய உடலாகவும் இருந்து (அந்த தன்மைகள் எனவும் கொள்ளலாம்) திரிகின்ற இறைவன் முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன்; வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசைக்கும் மறைவனம் எனும் தலத்தில் அமரும் பரமன் ஆவான்.
விளக்கஉரை
பிரபஞ்ச உற்பத்தியில் முதலில் ஆகாயமும், பின் காற்றும், நெருப்பும், நீரும் கடைசியில் நிலமும் தோன்றுதல் என்பது சைவ சித்தாந்தத்திலும் இன்னும் பல சைவ ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளது. சங்காரத்தில் இவை வரிசை மாறாமல் அதே வரிசையில் ஒடுங்கப்படுதல் நினைவு கூறத்தக்கது. பெரு வெடிப்பு கொள்கையினை (Big bang theory) முன்வைத்து பிரபஞ்சம் சுருங்கி விரிவடைவதை அறிவியல் கொண்டு ஒப்பு நோக்கி உணர்க.
இருங்கடல் – இருமை = கருமை. இருள், இரவு/இரா, இருட்டு, இரும்பு, ஈரல் போன்ற கரியது இருங்கடல். காலாபாணி என்பர் வடமொழியில். காழ் = கருமை. காளபாணி/காலபாணி என்பது ‘மணிநீர்’. மணிநீர் = கரியநீர், பண்பாகுபெயராய் கடல். நல் வினை, தீவினை முன்வைத்து அந்தப் பதிவுகளே பிறப்பு எடுக்க வைக்கிறது; அதற்கு மண்ணில் தோன்ற வேண்டும் என்ற பொருளும் உரைக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன் சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ் சாலே யவாயமற நின்றாடு வான்
பதப்பிரிப்பு
எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன் சிவாயநம வென்னூந் திருவெழுத்தஞ் சாலே அவாயமற நின்றாடு வான்
திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்
கருத்து – திருவைந்தெழுத்தினை ஓத ஆன்மாக்களின் பிறவித் துன்பம் தீரும் எனக் கூறும் பாடல்.
பதவுரை
எட்டு எழுத்தாகிய அகரத்தினையும், இரண்டு எழுத்தாகிய உகரத்தினையும் கொண்டு உருவானதும் பத்து எழுத்தால் ஆனதும் ‘ய’ எனும் எழுத்தால் குறிக்கப் பெறுவதும் ஆன லிங்கம் எனப்படுவதான இந்த உடலில் உறையும் ஆன்மாவில் சிவபெருமான் ஆடுகின்ற நடனத்தை யாம் சொல்லக் கேட்பாயாக; அனைத்தையும் அறிந்தவனாகிய ஈசன் சிவாயநம என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு ஆன்மாக்களின் பிறவித் துன்பம் நீங்கும்படி ஆடல்புரிவான் என்பதை அறிவாயாக.
விளக்கஉரை
எட்டும் இரண்டும் அறியாத என்னை எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின் எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்
யோக மரபினை முன்வைத்து, எட்டு ஆகிய வலது கண், இரண்டு ஆகிய இடது கண் இரண்டையும் கொண்டு சூரிய சந்திரன் எனவும், சிவசக்தியினை பத்தாகிய அக்னிஸ்தானம் என்றும் திருமந்திர விளக்கம் அருளப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
ஆமென்ற துரைச்சியைத்தான் பூசை பண்ண அநேக நாள் செய்த தவ பலத்தாற் கிட்டும் வாமென்ற பிரமனொடு விஷ்ணு ருத்திரன் மகேசனோடு சதாசிவனுங் கணேசன் கந்தன் ஏமென்ற விந்திரனும் சந்திரா தித்தர் எழிலான காமனொடு அங்கிநந்தி கோமென்ற குபேரனொடு கும்பமுனியுங் கூராகிய முனிரிஷிகள் பூசித்தாரே
போகர் கருக்கிடை நிகண்டு 500
கருத்து – பல ஜென்மங்களில் செய்த தவப் பயனால் அன்னையை பூசை செய்யும் பாக்கியம் கிட்டுகிறது என்பதையும், அவ்வாறு பூசை செய்தவர்களையும் கூறும் பாடல்.
பதவுரை
ஆம் (ஒம் எனும் ஒலியின் மூல நாதம்) எனும் நாதத்தால் அறியப்படுபவள் ஆன தாயானவளை பல ஜென்மங்களில் செய்த தவப் பயனால் பூசை செய்யும் பாக்கியம் கிட்டுகிறது. அழகும் ஒளி பொருந்தியவனும் ஆன பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேசன்,சதாசிவன், கணேசன், கந்தன், பாதுகாப்பினைத் தருபவனாகிய இந்திரன், சூரியன், சந்திரன், அழகிய வடிவம் கொண்டவனாகிய காமன், அங்கி, நந்தி, குபேரன், கும்ப முனியாகிய அகத்தியர் மற்றும் சிறந்தவர்களான முனிவர்கள் ரிஷிகள் ஆகியோர்கள் அன்னையை பூசனை செய்தார்கள்
விளக்கஉரை
96 தத்துவங்கள் என்பதை ஸ்தூலத்தை முன்வைத்து 36 மற்றும் 60 ஆக பகுக்கப்படும் என்றும் சிவ தத்துவங்களோடு கூடும் போது ப்ரிதிவி சார்ந்து இருப்பதும், சக்தி தத்துவங்களோடு கூடி ஆகாசம் எங்கும் நிறைந்திருத்தலை குறிக்கும் என்பதையும் சக்தி உபாசனை செய்பவர் அருளினார்.
துரைச்சி – தலைவி, ஐரோப்பியப் பெண், உலோகநிமிளை
வாமம் – தொடை, அழகு, ஒளி, இடப்பக்கம், நேர்மையின்மை, எதிரிடை, தீமை, அகப்புறச்சமயம், பாம்பு வகை, முலை, செல்வம்
ஏமம் – பாதுகாப்பு
கூர் – மிகுதி, கூர்மை, கூர்நுனி, குயவன் சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு, இலையின்நடுநரம்பு, கதிர்க்கூர், காரம், குத்துப் பாடானபேச்சு, மிக்க, சிறந்த
அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும் விட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்று கண்டேன் வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே
பட்டினத்தார்
கருத்து – பட்டினத்தார் தான் பெற்ற அனுபவங்களை கூறும் பாடல்.
பதவுரை
சித்தத் தன்மை அடைந்தவர்களால் அடையப் பெறுவதும், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய படிநிலைகள் கொண்ட எட்டினை தருவதும் ஆன அட்டாங்க யோகம் அடைந்து, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி , ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்கள் கடந்து, உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகிய காரிய அவத்தையானது, புருவ மத்தியில் இருந்து செயல்படுவதாகிய நனவு, கண்டத்திலிருந்து செயல்படுவதாகிய கனவு, இருதயத்திலிருந்து செயல்படுவதாகிய உறக்கம், உந்தியிலிருந்து செயல்படுவதாகிய பேருறக்கம், மூலாதாரத்திலிருந்து செயல்படுவதாகிய உயிர்ப்படக்கம் ஆகிய அவத்தைகள் ஐந்தும் கடந்து நிற்பதும் வெட்ட வெளி, சிற்றம்பலம், நடன சபை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறும் அண்ட உச்சிதனில் பெரிய வியத்தலுக்கு உரிய நிகழ்வினைக் கண்டேன்; வட்டமானதும்சந்திரனில் இருந்து விழும் துளியினை ஒத்ததாகிய பாலூறல் எனும் அமுதம் உண்டு மகிழ்ந்திருக்கும் போது உலகால் அறியப்படாது தன்னால் மட்டுமே அறியப்பட தக்கதான பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றது.
விளக்கஉரை
யோக மரபில் கண்டத்தில் இருந்து மேலே சென்று புருவ மத்தியாகிய ஆக்கினையில் பூசித்தல் மனித நிலையில் இருந்து விலக்கி தேவர்கள், முனிவர்கள் போன்ற மேல் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதுவும் கருத்து. மேல் விபரங்களை குரு மூலமாக அறிக.
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால் எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானின் பெருமைகளை எல்லாக் காலங்களிலும் ஓத வேண்டியது குறித்து அறிவுறுத்தும் பாடல்.
பதவுரை
உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினை, அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினை, பிராப்தம் ஆகிய நிகழ்கால வினை, ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினை ஆகிய எல்லா வினைகளையும் அழித்து, இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் இருந்து பேரின்ப வீடாகிய முக்தியை தர வல்லதுமான கூர்மையான வேலினை ஏந்திய திருமுருகப் பெருமானின் புகழினைக் கூறும் பாடல்களை எழுத்துப் பிழைகள் சிறிதுமின்றி கற்றுக் கொள்ளாமலும், ஓதாமலும் இருக்கின்றீர்களே! நெருப்பு மூண்டு எரிவதைப் போல தன்னுடைய கண்களை உருட்டி, புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் நம்மை நோக்கி வீசும் வீசுகின்ற பாசக் கயிறு கொண்டு நம் கழுத்தில் சுருக்கு விழும்படி செய்து நம் உயிரைப் பறிக்கும் நாளிலா முருகனின் புகழைக் கூறும் பாடல்களைக் கற்க(ஓத) இயலும்?
விளக்கஉரை
எழுத்துப் பிழையறக் கற்கின்றி – பேசா எழுத்து – ‘ஓம்’ என்பதே பிரணவம். இதுவே அசபை என்னும் பேசா எழுத்தும், ஊமை எழுத்தும் ஆகும். இதுவே வாசி. முருகன் பிரணவ வடிவில் இருப்பதை குற்றம் இல்லாமல் உணரவேண்டும்.இதற்கு வேறு விளக்கங்களும் அருளப்பட்டு இருக்கின்றன. ஆன்றோர் அறிந்து உய்க
கருத்து – பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதி இராவணன் தன் துன்பத்தில் இருந்து நீங்கியது குறித்தப் பாடல்.
பதவுரை
கோபம் கொண்டவனும், வாளேந்தியவனும் அரக்கன் ஆனவனுமான இராவணன் முன்னொரு காலத்தில் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்டபோது அவன் கரமும், சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை ஊன்றியவரான சிவபெருமான் இராவணன் தன் தவறு உணர்ந்து அஞ்செழுத்தை உரைத்து யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக் கொடுத்தருளினார்; அவ்வாறான சிவபெருமான் நான்மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்களும் அவர்களுடன் வேதம் பயிலும் சிறுவர் குழாமும் ஓதும் மறைகளை ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓதும் படியும் விரிந்த சோலைகளையுடையதும் ஆன திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகிறார். அந்த திருத்தலத்து இறைவனின் திருநாமத்தை ஓத, வினையாவும் கெடும்.
வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற் காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே
வராகி மாலை
கருத்து – வாலை புவனை திரிபுரை மாலயன் தேவர் ஆகியவர்களால் எக்காலத்திலும் வணங்கத்தக்கவள் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
அணிமா, லகிமா, மகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எட்டு சித்திகளையும் அளிப்பவளும் பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்ணாக இருப்பவளும், சத்திபேதங்களுக்குள் ஒன்றான வாலையால் காலையில் வணங்கப்படுபவளாகவும், பார்வதி என்று அழைக்கப்படும் புவனையால் மாலையில் வணங்கப்படுபவளாகவும், திரிபுரசுந்தரி என்றும் அழைக்கபடுபவளும் உச்சி வேளையில் வணங்கப்படுபவளாகவும் இருக்கும் திரிபுரையால் வணங்கப்படுபவளுமாக இருக்கும் வராகியின் ஆலயத்திற்கு சென்று அவளது அன்பில் தோய்ந்து திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்களும் பாடி துதிக்கின்றார்கள்.
உன்னுதல் – நினைத்தல், பேச வாயெடுத்தல், எழும்புதல், முன்னங்கால் விரலையூன்றி நிமிர்தல்
வாலை புவனை திரிபுரை ஆகியவர்களால் எக்காலத்திலும் (காலை, மாலை, உச்சி ஆகிய பொழுதுகளில்) வணங்கப்படுபவளாக இருப்பவள் என்றும் மற்றொரு பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. குருவருள் கொண்டு அறிந்து உய்க.