
பாடல்
திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்
திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி
ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்
பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்
அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளியவனே, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ள்வர்களுக்கு தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையின் காரணமாக உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி அடியேன், உலகியலில் இருந்தும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.
விளக்க உரை
- தேவர்க்குத் தேவர், காரணக் கடவுளர் – அயனும், மாலும்
- நாமமாவது – திருவைந்தெழுத்து