
பாடல்
மூலம்
எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன்
சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ் சாலே
யவாயமற நின்றாடு வான்
பதப்பிரிப்பு
எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன்
சிவாயநம வென்னூந் திருவெழுத்தஞ் சாலே
அவாயமற நின்றாடு வான்
திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்
கருத்து – திருவைந்தெழுத்தினை ஓத ஆன்மாக்களின் பிறவித் துன்பம் தீரும் எனக் கூறும் பாடல்.
பதவுரை
எட்டு எழுத்தாகிய அகரத்தினையும், இரண்டு எழுத்தாகிய உகரத்தினையும் கொண்டு உருவானதும் பத்து எழுத்தால் ஆனதும் ‘ய’ எனும் எழுத்தால் குறிக்கப் பெறுவதும் ஆன லிங்கம் எனப்படுவதான இந்த உடலில் உறையும் ஆன்மாவில் சிவபெருமான் ஆடுகின்ற நடனத்தை யாம் சொல்லக் கேட்பாயாக; அனைத்தையும் அறிந்தவனாகிய ஈசன் சிவாயநம என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு ஆன்மாக்களின் பிறவித் துன்பம் நீங்கும்படி ஆடல்புரிவான் என்பதை அறிவாயாக.
விளக்க உரை
எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்
- யோக மரபினை முன்வைத்து, எட்டு ஆகிய வலது கண், இரண்டு ஆகிய இடது கண் இரண்டையும் கொண்டு சூரிய சந்திரன் எனவும், சிவசக்தியினை பத்தாகிய அக்னிஸ்தானம் என்றும் திருமந்திர விளக்கம் அருளப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.