
பாடல்
எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புக ழாரூ ரரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – திருவாரூர், அரநெறியை உள்ளத்தில் கொண்டு மறவாது உணர்தலும் தலையால் தொழலும் நல்ல தவம் உரையர்களுக்கு அன்றி மற்றவர்களுக்கு எய்தாது என்பதை விளக்கும் பாடல்
பதவுரை
நெஞ்சமே! ஆன்மாவைப் பிணித்துள்ள பாசத்தினை ஏற்படுத்துவதும் உலக் ஈடுபாட்டினை தருவதாகிய பந்தமும், முடிவில்லா புகழை உடையவனும், முக்தி பேற்றை அளிக்கும் வீடுமாயிருக்கும் பரம்பொருளாகிய திருவாரூர்ப் பெருமானுக்கு உரியதான முடிவற்ற புகழ் வாய்ந்த திருவாரூர் அரநெறி சிந்தையினும், சிரத்தினும் தங்குதற்கு மேலாகிய தவங்கள் பலவற்றுள் எந்தத்தவத்தை நீ செய்தாய்?
விளக்க உரை
- திருஆரூர் திருத்தலம் பற்றிய தேவாரப் பாடல்
- எந்த மாதவம் செய்தனை – வியப்புமொழி
- பந்தம் – முடிச்சு, கட்டு, பாசம், ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம், உறவு, சம்பந்தம், பற்று, பாவின் தளை, முறைமை, கட்டுப்பாடு, மயிர்முடி, சொத்தைப் பராதீனப்படுத்துகை, மதில், அழகு, கைவிளக்கு, தீவட்டி, தீத் திரள், உருண்டை, பொன், நூலிழை, பெருந்துருத்தி
- அந்தமில் புகழ் – முடிவில்லாத புகழ்
- ஆரூர் அரநெறி -ஆருர்த் திருக்கோயில்களில் பூங்கோயில் அரநெறி, பரவை யுண்மண்டளி என்பவற்றுள் ஒன்று
- சிந்தை – உள்மனம் . நிலையான நினைப்பு உண்டாக்கும் அடி மனம்