
பாடல்
அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்று கண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே
பட்டினத்தார்
கருத்து – பட்டினத்தார் தான் பெற்ற அனுபவங்களை கூறும் பாடல்.
பதவுரை
சித்தத் தன்மை அடைந்தவர்களால் அடையப் பெறுவதும், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய படிநிலைகள் கொண்ட எட்டினை தருவதும் ஆன அட்டாங்க யோகம் அடைந்து, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி , ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்கள் கடந்து, உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகிய காரிய அவத்தையானது, புருவ மத்தியில் இருந்து செயல்படுவதாகிய நனவு, கண்டத்திலிருந்து செயல்படுவதாகிய கனவு, இருதயத்திலிருந்து செயல்படுவதாகிய உறக்கம், உந்தியிலிருந்து செயல்படுவதாகிய பேருறக்கம், மூலாதாரத்திலிருந்து செயல்படுவதாகிய உயிர்ப்படக்கம் ஆகிய அவத்தைகள் ஐந்தும் கடந்து நிற்பதும் வெட்ட வெளி, சிற்றம்பலம், நடன சபை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறும் அண்ட உச்சிதனில் பெரிய வியத்தலுக்கு உரிய நிகழ்வினைக் கண்டேன்; வட்டமானதும் சந்திரனில் இருந்து விழும் துளியினை ஒத்ததாகிய பாலூறல் எனும் அமுதம் உண்டு மகிழ்ந்திருக்கும் போது உலகால் அறியப்படாது தன்னால் மட்டுமே அறியப்பட தக்கதான பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றது.
விளக்க உரை
- யோக மரபில் கண்டத்தில் இருந்து மேலே சென்று புருவ மத்தியாகிய ஆக்கினையில் பூசித்தல் மனித நிலையில் இருந்து விலக்கி தேவர்கள், முனிவர்கள் போன்ற மேல் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதுவும் கருத்து. மேல் விபரங்களை குரு மூலமாக அறிக.
இன்று பட்டினத்தார் குருபூசை