
பாடல்
ஆமென்ற துரைச்சியைத்தான் பூசை பண்ண
அநேக நாள் செய்த தவ பலத்தாற் கிட்டும்
வாமென்ற பிரமனொடு விஷ்ணு ருத்திரன்
மகேசனோடு சதாசிவனுங் கணேசன் கந்தன்
ஏமென்ற விந்திரனும் சந்திரா தித்தர்
எழிலான காமனொடு அங்கிநந்தி
கோமென்ற குபேரனொடு கும்பமுனியுங்
கூராகிய முனிரிஷிகள் பூசித்தாரே
போகர் கருக்கிடை நிகண்டு 500
கருத்து – பல ஜென்மங்களில் செய்த தவப் பயனால் அன்னையை பூசை செய்யும் பாக்கியம் கிட்டுகிறது என்பதையும், அவ்வாறு பூசை செய்தவர்களையும் கூறும் பாடல்.
பதவுரை
ஆம் (ஒம் எனும் ஒலியின் மூல நாதம்) எனும் நாதத்தால் அறியப்படுபவள் ஆன தாயானவளை பல ஜென்மங்களில் செய்த தவப் பயனால் பூசை செய்யும் பாக்கியம் கிட்டுகிறது. அழகும் ஒளி பொருந்தியவனும் ஆன பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேசன்,சதாசிவன், கணேசன், கந்தன், பாதுகாப்பினைத் தருபவனாகிய இந்திரன், சூரியன், சந்திரன், அழகிய வடிவம் கொண்டவனாகிய காமன், அங்கி, நந்தி, குபேரன், கும்ப முனியாகிய அகத்தியர் மற்றும் சிறந்தவர்களான முனிவர்கள் ரிஷிகள் ஆகியோர்கள் அன்னையை பூசனை செய்தார்கள்
விளக்க உரை
- 96 தத்துவங்கள் என்பதை ஸ்தூலத்தை முன்வைத்து 36 மற்றும் 60 ஆக பகுக்கப்படும் என்றும் சிவ தத்துவங்களோடு கூடும் போது ப்ரிதிவி சார்ந்து இருப்பதும், சக்தி தத்துவங்களோடு கூடி ஆகாசம் எங்கும் நிறைந்திருத்தலை குறிக்கும் என்பதையும் சக்தி உபாசனை செய்பவர் அருளினார்.
- துரைச்சி – தலைவி, ஐரோப்பியப் பெண், உலோகநிமிளை
- வாமம் – தொடை, அழகு, ஒளி, இடப்பக்கம், நேர்மையின்மை, எதிரிடை, தீமை, அகப்புறச்சமயம், பாம்பு வகை, முலை, செல்வம்
- ஏமம் – பாதுகாப்பு
- கூர் – மிகுதி, கூர்மை, கூர்நுனி, குயவன் சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு, இலையின்நடுநரம்பு, கதிர்க்கூர், காரம், குத்துப் பாடானபேச்சு, மிக்க, சிறந்த