அமுதமொழி – விகாரி – ஆவணி – 5 (2019)


பாடல்

மூலம்

ஈனம் தரும்இதென்றெண்ணாமலே யிடும்பான் மெலிந்திங்
கூனம் தரும்இந்தச் செல்வருக் கிச்சையுரை உரைத்தேன்
வானம்தரும்உம் பருக்காய் அவுணரை மாட்டி நல்ல
தானம் தரும்அண்ண லேகாழி யாபதுத் தாரணனே

பதப்பிரிப்பு

ஈனம் தரும் இதென்று எண்ணாமலே யிடும்பான் மெலிந்திங்கு
ஊனம் தரும் இந்தச் செல்வருக்கிச்சையுரை உரைத்தேன்
வானம் தரும் உம் பருக்காய் அவுணரை மாட்டி நல்ல
தானம் தரும் அண்ணலே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துஅசுரர்களிடம் இருந்து தேவர்களை காத்த நீ, குற்றம் கொண்ட என்னையும் காக்க வேண்டும் என்பதை குறிக்கும் பாடல்.

பதவுரை

வானில் இருந்து வேண்டியவற்றை வழங்கும் தேவர்களை காப்பதன்  பொருட்டு அசுரர்களை துன்பம் அடையச் செய்து அவர்களை துன்புறுத்தி தேவர்களுக்கு நல்ல சக்தியினையும், உறைவிடத்தையும் வழங்கும் இறைவனானவனும் காழிப் பதியில் உறைபவனும் ஆன  ஆபதுத்தாரணனே! இந்த உலக வாழ்வானது குறைவு பட்டது என்பதை அறியாமல் செருக்குள்ளவனாக திரிந்து, தர்மத்தின் வழி நில்லாமல் செல்வம் உடையவருக்கு அவர்கள் விரும்பிய உரைகளை உரைத்தேன்.

விளக்க உரை

  • என்னைக் காப்பாயாக என்பது மறைபொருள்.
  • ஈனம் – குறைபாடு, அங்கவீனம்; ஊனம், இழிவு, குறைபாடு என்பதைச் சுட்டும் பின்னொட்டு, சரிவு
  • இடும்பன் – செருக்குள்ளவன்
  • உம்பர் – விண்ணவர், தேவர்கள், சொர்க்கம், மேற்கூறப்படவை, மேலுள்ளவை
  • அவுணர் – அசுரர்
  • மாட்டுதல் – இணைத்தல், தொடுத்தல், செருகுதல், செலுத்துதல், உட்கொள்ளுதல்,
  • கற்றுவல்லனாதல், அடித்தல், விளக்கு முதலியன கொளுத்துதல், எரித்தல், கூடிய தாதல், வலிபெறுதல்
  • தானம் – இசைச்சுரம், சுரவிஸ்தார முறை, இடம், உறைவிடம், பதவி, கோயில், சுவர்க்கம், ஆசனம், எழுத்துப்பிறக்கும் இடம், எண்ணின் தானம், சாதகசக்கரத்திலுள்ள வீடு, ஆற்றலில் சமமாயிருக்கை, சக்தி, நன்கொடை, தசபாரமிதைகளுள் ஒன்றாகிய ஈகை, நால்வகை உபாயங்களுள் ஒன்றான கொடை, ஆகாரதானம், அபயதானம், சாஸ்திரதானம், ஒளஷததானம் என்ற நால்வகை அறச்செயல், இல்லறம், யானைமதம், வேள்வி, மகரவாழை, ஸ்நானம்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *