
பாடல்
அன்னத்தின் பெயர்தனையே யறையக்கேளு
அஞ்சமாம் அஞ்சம்பா பீதமாகும்
நன்னமா மரத்தபர தோயமாகும்
ராசவங் கசமான தாத்திராஷ்டிரஞ்
சின்னமாஞ் சிறையன்னஞ் சிவலோகத்தன்னஞ்
செழுமுளரிப் பொகுட்டி லன்னமாகும்
புன்னப்பூ வன்னம் புனலிவன்னம்
புலம்புகின்ற வன்னமாம் அன்னப்பேரே
போகர் கருக்கிடை நிகண்டு 500
கருத்து – போகர் அன்னத்தின் வெவ்வேறு பெயர்களைக் கூறும் பாடல்.
பதவுரை
அன்னத்தின் பெயர்களை சொல்லுகிறேன் கேட்பாயாக. அஞ்சகம், அஞ்சம் பாபிதம், பல்லாற் கடித்தலை போன்ற மெல்லியதான மரத்த பரதோயம், தலையான மருந்தினைப் போன்றதுமான தாத்திராஷ்டிரம், சிறையன்னம், சிவலோககற்றன்னம், செழுமுளரி, பொகுட்டிலன்னம், பூவன்னம், புனலிவன்னம் ஆகும். இவ்வாறாக அன்னத்தின் பெயர்களை சொன்னேன்.
விளக்க உரை
- நன்னுதல் – பல்லாற் கடித்தல், நறுக்குதல்
- வங்குசம் – கூகைநீறு, ஒரு மருந்து, காட்டெருமைப் பால்
- அறைதல் – அடித்தல், பறைமுதலியன கொட்டுதல், கடாவுதல், சொல்லுதல், துண்டித்தல், மண்ணெறிந்து கட்டுதல், ஒலித்தல்