
பாடல்
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே
வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்
கருத்து – வராகி அன்னையின் உருவத் தோற்றம் குறித்து கூறும் பாடல்.
பதவுரை
மலர்க்கொடி போன்றவளும், உடலுக்கு ஆற்றல் தரும் தெய்வம் ஆனவளும், ஐயும் கிலியும் எனும் பீஜ மந்திரங்கள் கொண்டு தொண்டர்களால் போற்றப்படுபவளும், அரியதான பச்சை நிற உடலும், கருணை மிகுந்ததான விழியும் கொண்டு, கைகளில் மலர்கள்,பிரம்பு, கபாலம், மற்றும் சூலம் ஆகியவை கொண்டவளான வராகி வழிபடும் அன்பர்கள் கண் முன்னே தோன்றும்படியாக இந்த உலகத்து உயிர்கள் துதிக்கும்படியாக வருவாள்.
விளக்க உரை
- அரியபச்சை – மரகதம் ஒத்த பச்சை நிறம் கொண்டவள் எனவும் கொள்ளலாம். மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி எனும் அபிராமி அந்தாதி பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.