
பாடல்
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே
மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்
கருத்து – பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் எமனுடை துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
ஈசனையே எக்காலத்திலும் நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்ததும், பல வழிகளில் திரிந்து செல்லும் வஞ்சக தன்மை உடையதும் ஆன மனதை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்த செய்வதும் ஆன திருவைந்தெழுத்தே மனமானது உறங்கும் பொழுதும், மனம் உறங்காமல் விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருகி நாள்தோறும் நினைத்துப் போற்றுங்கள்.
விளக்க உரை
- போழ்தின் என்ற சொல்லைத் துஞ்சல் என்பதோடு கூட்டித் துஞ்சும் பொழுதினும், துஞ்சுதல் இல்லாத போழ்தினும் என்றும் விளக்கம் பெறும்
- நெஞ்சகம் – மனம்
- நைந்து – உருகி
- நெஞ்சக நைதல் – அன்பினால் குழைதல்
- வஞ்சகம் – ஈசன் சிந்தனை விடுத்து சிந்தையை இடையே மாற்றி வினையைப் பிற இடங்களிள் செலுத்தி வஞ்சித்தல்