
பாடல்
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
நூறுகோடி பிரமர்கள் அழிக்கப்பட்டார்கள்; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப் பெருகும் கங்கையாற்றின் மணலைவிட எண்ணிக்கை அற்றதான இந்திரர்கள் நிலையும் அவ் வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் இறைவனானவனும் ஈசன் எனப்படுபவனும் ஆன சிவபெருமான் மட்டுமே.
விளக்க உரை
- எண்ணிக்கை அற்ற அளவில் உயிர்கள் படைக்கப்பட்டன; அதில் பிரம்ம முடிச்சினை கண்டு உணர்ந்து பிரம்ம தன்மை அடைந்த நூறு கோடி பேர்கள் அழிக்கப்பட்டார்கள். ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள். என்று மொழி பகர்வார்களும் உண்டு. யோக மரபினை முன்வைத்து பிரம்மனுக்கு உரித்தான சுவாதிட்டானம் வரை கண்டு உணர்ந்தவர்களும், திருமாலுக்கு உரித்தான் மணிபூரகம் வரை கண்டு உணர்ந்தவர்களும் அதற்கு மேல் செல்ல இயலாமல் அழிக்கப்பட்டார்கள் என்று கூறுவதும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
- நொந்துதல் – அழிதல், தூண்டுதல்