
பாடல்
என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – திருநாவுக்கரசர், சோதி வடிவான ஈசன் தம்மிடம் எழுந்தருளியதை கூறும் பாடல்
பதவுரை
நெஞ்சமே! மின்னல்போல விளங்குகின்ற நீண்ட சடையை உடையவனும், மறை ஆகிய வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவனும், செம்மையான நெற்கதிர்கள் பொருந்திய வயல்கள் பொருந்தி வயல் உடைய திருச்சேறையுள் செந்நெறியில் நிலைபெற்ற ஒளிவடிவமானதான சோதியும் ஆகிய பெருமான் நம்மிடம் வந்து நிலையாக வந்து எழுந்தருள எத்தகைய சிறந்த தவம் செய்தாய்.
விளக்க உரை
- திருச்சேறை திருதலத்து தேவாரப்பாடல்
- என்ன – எத்தகைய
- வேத விழுப்பொருள் – வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவன் .
- மன்னு – நிலைத்து விளங்குகின்ற .
- நம்பால் – நம்மிடத்து
- வைக – நிலையாக வந்து எழுந்தருள