கருத்து – ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
நெஞ்சே! குற்றமில்லாத மணிகளும் முத்துக்களும் நிறைந்ததும், அதனைக் கொண்டுவந்து சேர்க்கும் நிலையான காவிரி ஆற்றினால் சூழப்பட்டதுமான திருவலஞ்சுழி இறைவனைப் போற்றி பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் நாம் செய்த நல்வினைப் பயன்களில் நீ எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்.
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறி லாதவன் ஈச னொருவனே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
நூறுகோடி பிரமர்கள் அழிக்கப்பட்டார்கள்; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப் பெருகும் கங்கையாற்றின் மணலைவிட எண்ணிக்கை அற்றதான இந்திரர்கள் நிலையும் அவ் வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் இறைவனானவனும் ஈசன் எனப்படுபவனும் ஆன சிவபெருமான் மட்டுமே.
விளக்கஉரை
எண்ணிக்கை அற்ற அளவில் உயிர்கள் படைக்கப்பட்டன; அதில் பிரம்ம முடிச்சினை கண்டு உணர்ந்து பிரம்ம தன்மை அடைந்த நூறு கோடி பேர்கள் அழிக்கப்பட்டார்கள். ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள். என்று மொழி பகர்வார்களும் உண்டு. யோக மரபினை முன்வைத்து பிரம்மனுக்கு உரித்தான சுவாதிட்டானம் வரை கண்டு உணர்ந்தவர்களும், திருமாலுக்கு உரித்தான் மணிபூரகம் வரை கண்டு உணர்ந்தவர்களும் அதற்கு மேல் செல்ல இயலாமல் அழிக்கப்பட்டார்கள் என்று கூறுவதும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
ஊழிக் காலமாகிய சங்காரத்தில் இந்த உலகினை பெரிய கடல் சூழ்ந்து ஊழிவெள்ளம் ஏற்படப் பிரம்மன் இறப்பான்; அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும், வினைகளை ஒப்பு நோக்கி உயிர்களுக்கு வினைப்பயன்களை தருபவன் ஆகியவனும், கரிய கடல்போன்ற நிறமுடையவனும் ஆகிய திருமாலுடைய உடலையும் சுமந்து கொண்டு, அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனான எம் பெருமான சிவன் கங்காள வடிவம் கொண்டு ஒடுங்கிய உலகம் மீண்டும் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான்.
விளக்கஉரை
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் (திருமந்திரம்) – எல்லாவற்றையும் ஒடுக்கியபின் அவை ஒடுங்கிய சாம்பலைப் பூசுகின்ற என்னும் குறிப்பு பற்றியது.
மீளவரும் கடன் நின்று – ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து;
எம் இறை – எம் இறைவன்
நல்வீணை வாசிக்கும் – அழகிய வீணையை இயம்பும் இசையின் சுருதியியல் கெடாதவாறு அமைந்தது
கருத்து – சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
சங்காரம் எனும் பேரூழிக்காலத்தில் பெரியதான இந்த நிலமாகிய மண் புனல் என்படும் நீரில் ஒடுங்க, நீரானது நெருப்பு எனும் எரியில் ஒடுங்க, நெருப்பு வளி எனும் காற்றில் ஒடுங்க, காற்று ஆகாயத்தில் ஒடுங்க பரந்துபட்டதான இந்த உலகமும் உலகப் பொருள்களும் அனைத்தும் அழிய, இறுதியில் மால் அயன் இவர்களுடைய உடலாகவும் இருந்து (அந்த தன்மைகள் எனவும் கொள்ளலாம்) திரிகின்ற இறைவன் முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன்; வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசைக்கும் மறைவனம் எனும் தலத்தில் அமரும் பரமன் ஆவான்.
விளக்கஉரை
பிரபஞ்ச உற்பத்தியில் முதலில் ஆகாயமும், பின் காற்றும், நெருப்பும், நீரும் கடைசியில் நிலமும் தோன்றுதல் என்பது சைவ சித்தாந்தத்திலும் இன்னும் பல சைவ ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளது. சங்காரத்தில் இவை வரிசை மாறாமல் அதே வரிசையில் ஒடுங்கப்படுதல் நினைவு கூறத்தக்கது. பெரு வெடிப்பு கொள்கையினை (Big bang theory) முன்வைத்து பிரபஞ்சம் சுருங்கி விரிவடைவதை அறிவியல் கொண்டு ஒப்பு நோக்கி உணர்க.
இருங்கடல் – இருமை = கருமை. இருள், இரவு/இரா, இருட்டு, இரும்பு, ஈரல் போன்ற கரியது இருங்கடல். காலாபாணி என்பர் வடமொழியில். காழ் = கருமை. காளபாணி/காலபாணி என்பது ‘மணிநீர்’. மணிநீர் = கரியநீர், பண்பாகுபெயராய் கடல். நல் வினை, தீவினை முன்வைத்து அந்தப் பதிவுகளே பிறப்பு எடுக்க வைக்கிறது; அதற்கு மண்ணில் தோன்ற வேண்டும் என்ற பொருளும் உரைக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன் சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ் சாலே யவாயமற நின்றாடு வான்
பதப்பிரிப்பு
எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன் சிவாயநம வென்னூந் திருவெழுத்தஞ் சாலே அவாயமற நின்றாடு வான்
திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்
கருத்து – திருவைந்தெழுத்தினை ஓத ஆன்மாக்களின் பிறவித் துன்பம் தீரும் எனக் கூறும் பாடல்.
பதவுரை
எட்டு எழுத்தாகிய அகரத்தினையும், இரண்டு எழுத்தாகிய உகரத்தினையும் கொண்டு உருவானதும் பத்து எழுத்தால் ஆனதும் ‘ய’ எனும் எழுத்தால் குறிக்கப் பெறுவதும் ஆன லிங்கம் எனப்படுவதான இந்த உடலில் உறையும் ஆன்மாவில் சிவபெருமான் ஆடுகின்ற நடனத்தை யாம் சொல்லக் கேட்பாயாக; அனைத்தையும் அறிந்தவனாகிய ஈசன் சிவாயநம என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு ஆன்மாக்களின் பிறவித் துன்பம் நீங்கும்படி ஆடல்புரிவான் என்பதை அறிவாயாக.
விளக்கஉரை
எட்டும் இரண்டும் அறியாத என்னை எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின் எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்
யோக மரபினை முன்வைத்து, எட்டு ஆகிய வலது கண், இரண்டு ஆகிய இடது கண் இரண்டையும் கொண்டு சூரிய சந்திரன் எனவும், சிவசக்தியினை பத்தாகிய அக்னிஸ்தானம் என்றும் திருமந்திர விளக்கம் அருளப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதி இராவணன் தன் துன்பத்தில் இருந்து நீங்கியது குறித்தப் பாடல்.
பதவுரை
கோபம் கொண்டவனும், வாளேந்தியவனும் அரக்கன் ஆனவனுமான இராவணன் முன்னொரு காலத்தில் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்டபோது அவன் கரமும், சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை ஊன்றியவரான சிவபெருமான் இராவணன் தன் தவறு உணர்ந்து அஞ்செழுத்தை உரைத்து யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக் கொடுத்தருளினார்; அவ்வாறான சிவபெருமான் நான்மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்களும் அவர்களுடன் வேதம் பயிலும் சிறுவர் குழாமும் ஓதும் மறைகளை ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓதும் படியும் விரிந்த சோலைகளையுடையதும் ஆன திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகிறார். அந்த திருத்தலத்து இறைவனின் திருநாமத்தை ஓத, வினையாவும் கெடும்.
வங்கம் கலிங்கம் குலுங்கம் தெலுங்கம் மராடம்முதல் எங்கெங்கும் போக இடர்வரும் போதும் இனிமையுடன் அங்கங்கு நீ துணை யாய்வரு வாய்அந்தி வான்மதியம் தங்கும் சடாடவி யாய்காழி யாபதுத் தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
கருத்து – தூர தேசம் செல்கையில் ஏற்படும் துயர் ஏற்படாமல் காக்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
அந்தி வானத்தைபோல் இருப்பதான ஒளிரும் பிறை சந்திரனை தன்னுடைய சடைமுடியில் தாங்குபவனும் காழிப்பதியில் உறைபவனும் ஆன ஆபதுத் தாரணனே! வங்காளதேசம், கலிங்கம் (தற்கால ஒரிஸ்சா, குலுங்கம் (தற்கால கோவாக இருக்கலாம்) ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகள்), தெலுங்கம் (தற்கால ஆந்திரா ), மராடம் (தற்கால மகாராஷ்ட்ரா) ஆகிய தேசங்களில் எந்த திசை சென்ற போதும் அங்கு ஏற்படுவதாகிய இடர் எனும் துயர் நீங்க மிக்க மகிழ்வுடன் அனைத்து இடத்திலும் எனக்கு துணையாக நீ வருவாய்.
நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த் தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் – அற்புதம்போல் ஆனா அறிவாய் அளவிறந்து தோன்றானோ வானே முதல்களையின் வந்து
திருநெறி 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்
கருத்து – அசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
குணம் என்பதாகிய எண் குணம் உடையவனும், அழுக்கு எனும் குற்றங்கள் அற்றவன் ஆனவனும், எக்காலத்திலும் துன்பமற்றவனும், மேம்பட்டதான பரம் பொருள் ஆனவனும் படைப்பில் முதல் முதலில் தோன்றிய ஆகாயமே அசத்து என்று சுட்டறிவினைக் கொண்டு அறியும் பொருளாய் கொண்ட அறிவினைக் கடந்து சூன்யப் பொருள் போல் தோன்றி, (குருவருளால்) சுட்டறிவதால் உண்டாகும் தன்னறிவினால் நீங்காமல் நிலை பெறுவதாகிய சோதி வடிவாய் (அகத்தில்) விளங்கிக் தோன்றுவான்.
விளக்கஉரை
தற்பரம் தனக்குப் பரமென விரியும்.
சூனியமாய்த் தோன்றினாலும் அது அற்புதம் போல் வந்தது
தனி முதல்வன் – உலகியல் விடுத்து அதைக் கடந்து அதற்கும் காரணாய் இருக்கும் ஞானத் தன்மைப் பற்றியது.
பிரபஞ்சம் நிலைப்பு தன்மை உடையது அல்ல எனும் பேருண்மையினையும், அசத்தாய் உள்ள உலகினைக் அறிய ஞான வடிவமாகியவனே அருளிச் செய்ய இயலும் என்றும், அசத்து நிலையுடைய பொருள்கள் தன் சொருபத்தை காட்டாது மறைத்து நிற்கும் இயல்பு உடையது; இது நிலைப்பு தன்மை உடையது என்று அறிய உணர்த்துவது ஞான சொருபமாகிய பதி ஞானம் என்று சுப்பிரமணிய தேசிகர் உரையில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும் தோளும் ஆகமும் துவளு முன்னூல் முனி சொல்ல ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்
பன்னிரெண்டாம் திருமுறை – சேக்கிழார் – திருநாவுக்கரசு நாயனார் புராணம்
கருத்து – திருநாவுக்கரசரை திருக்கயிலாய மலையில் இருந்து திரும்பிச் செல்ல உரைத்தலும், திருநாவுக்கரசர் அதற்கு மறுதலித்ததையும் கூறும் பாடல்.
பதவுரை
‘இந்தக் கயிலாய மலையிலிருந்து திரும்பிச் செல்லுதலே உன்னுடைய கடமை’ திகழும் தோள்களை உடையவரும், மார்பினினில் துவள்கின்ற முப்புரி நூலையுடைய முனிவரான இறைவர் உரைத்தார்; என்னை ஆள்பவனாகவும், எனக்கு தலைவனாகவும் இருக்கும் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலையில் இருக்கும் காட்சி காணாமல், என்றேனும் மடியப்போகும் இந்த உடலால் தமக்கு எதுவும் நட்டம் எதுவும் இல்லை, ஆதலால் இவ்வுடலுடன் கயிலைக் காட்சி காணாமல் திரும்பிச் செல்லமாட்டேன் என்று திருநாவுக்கரசர் மறுத்தார்
விளக்கஉரை
திருநாவுக்கரசர் திருவையாற்றில் கயிலை காட்சி கண்ட நாள் (ஆடிமாதம் அமாவாசை திருநாள்)
ஆச்சப்பா உட்கருவி முப்பத்தாறும் அப்பே சிவத்தினுட கூறேயாச்சு நீச்சப்பா புறக்கருவி அறுவதுதான் நிசமான சக்தியுட கூறேயாச்சு பேச்சப்பா உள்வெளியும் நன்றாய்ப் பார்த்து பெருமையுடன் ஆதார நிலையுங் கண்டு காச்சப்பா கருவி கரணாதி என்று காடான தத்துவத்தைக் கண்டு தேரே
சௌமிய சாகரம் – அகத்தியர்
கருத்து – 96 தத்துவங்கள் சிவ சக்தி ரூபமாக இருப்பதை அகத்தியர் புலத்தியருக்குக் கூறும் பாடல்.
பதவுரை
உலகின் தோற்றம், பிரபஞ்சத்தின் அமைப்பு என்பவற்றை விளக்கும் மெய்ஞ்ஞானத்தின் எண்ணக் கருக்களில் சைவநெறியினை முன்னிறுத்தி கூறப்படும் தத்துவங்கள் உணர்த்துவதாகிய 96 தத்துவங்களில் அககருவிகளான 36 தத்துவங்கள் சிவனின் கூறுகள் ஆகும்; செயல்பட்டு அறிவை ஏற்படுத்தும் புறக்கருவிகளான 60 தத்துவங்கள் உண்மையில் செயல்படும் சக்தியின் கூறுகள் ஆகும்; ஆகாயம் என்பதும், பெருவெளி என்பதும் ஆன ஆதார நிலை ஆகிய இந்த சூட்சுமத்தை குருவின் மூலமாக நன்கு அறிந்தும் உணர்ந்தும் கருவிகளையும் கரணங்கள் எனப்படும் மனத்தில் மாறுபாடுகளையும் பக்குவப்படுமாறு செய்ய வேண்டும்; உடல் கருவிகளும் உயிர் கருவிகளும் கொண்டு மேலே கூறப்பட்டவாறு பக்குவப்படுமாறு செய்தால் காடு போல் வழிதவறி உலகில் உழலச் செய்யும் தத்துவங்களை அறிந்து அதில் இருந்து தேறலாம்.
விளக்கஉரை
சாங்கிய யோகத்தில் 24 தத்துவங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆன்றோர் அறிந்து உய்க.
விரித்த பல்கதிர் கொள்சூலம், வெடிபடு தமரு கங்கை தரித்ததோர் கோல கால பைரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒன்டிரு மணிவாய் விள்ள சிறிதருள் செய்தோர் சேரிச் செந்நிறச் செல்வனாரே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – சிவபெருமான் கால பைரவர் வடிவம் தாங்கி வந்ததை குறிப்பிடும் பாடல்.
பதவுரை
திருச்சேறை எனும் திருத்தலத்தில் செம்மை நிறம் கொண்டு அதை இருப்பிடமாக உடையவனாக சிவபெருமான், விரிந்த சூரியனை போன்று பல கதிர்களை கொண்ட ஒளியுடைய சூலம், இடி முழக்கம் போல சப்தம் எழுப்புவதான டமருகம் (உடுக்கை), தலையில் கங்கை ஆகியவை கொண்டு அழகிய கால பைரவர் வடிவம் தரித்து வேழ வடிவில் வந்த அசுரனின் தோலை உரித்தார்; அதை கண்டு அஞ்சிய உமையவளை நோக்கி தனது மணிவாய் மலர்ந்து தோன்றுமாறு அட்டகாசமாய் சிரித்தார்.
விளக்கஉரை
தேவாரத்தில் கால பைரவர் பெயர் வரும் ஓரே பாடல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உய்க.
விள்ளுதல் – மலர்தல்; உடைதல்; வெடித்தல்; பிளத்தல்; பகைத்தல்; மாறுபடுதல்; தெளிவாதல்; நீங்குதல்; சொல்லுதல்; வெளிப்படுத்துதல்; வாய் முதலியன திறத்தல்; புதிர்முதலியனவிடுத்தல்
வெடி – துப்பாக்கி அல்லது குண்டு வெடி;வேட்டு, ஓசை, இடி, கேடு, அச்சம், நிமிர்ந்தெழுகை, தாவுகை, நறும்புகை, பட்டாசு, கள்
கருத்து – திருஒற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடை நாயகியின் பெருமைகளை கூற அவளே அருள் புரிய வேண்டும் என்று கூறும் பாடல்.
பதவுரை
திருஒற்றியூரில் விளக்கும் தூயவரான சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் மயிலே,வடிவுடை மாணிக்கமே, பக்தர்கள் உள்ளத்தில் என்னும் போற்றுதலுக்கு உரித்தானதான அழகானக் கோயிலில் வாழ்கின்ற மேலான பரதேவதையே, தூயதானதும், மெய்ஞானமானதும் ஆன அறிவொளிப் பிழம்பே, மெய்ஞான அறிவினால் பெறப்படுவதான சுகவாழ்வின் ஆனந்தமே! தினமும் உன் பெருமை மிக்க புகழைச் சொல்ல எனக்கு அருள் புரிய வேண்டும்.
கருத்து – வினை பற்றி நின்று, அடிமையாகிய யான் பிழை செய்தால் அதனைப் பொறாது ஒழிதலும், முறையோ என்று அழைத்தால் கேளா தொழிதலும் தலைவனாகிய உனக்குப் பொருந்துவனவோ என்று கூறும் பாடல்.
பதவுரை
உடையவனே, உமை அம்மையின் தலைவனே, என்னை என்றும் ஆள்பவனே, பிறை சேர்ந்த அணிந்த சடையை உடையவனே, தலைவனே! பழையதும், கொடியதும் ஆன வினையாகிய நோய் என்னை வருத்தும்போது காப்பதற்கு உரித்தானவன்; அவ்வாறான கொடுமையான வினையை உடையேன் ஆகிய நான் முயற்சி செய்து அந்த வினைகளை விலக்கி அதன் பொருட்டு நன்மை பெற இயலுமோ? நான் வினைகளுக்கு உட்பட்டு பிழை செய்தால் அதனை மன்னித்துக் காக்க வேண்டாமோ? நீ இவ்வாறு செய்வது முறையோ என்று உன்னை ஓலமிட்டு அழைத்தால் உன் அடியானாகிய எனக்கு, நீ அருள் செய்யாது போவது தகுதியோ?
விளக்கஉரை
குழைத்தல் – குழையச் செய்தல், ஒன்றாய்க் கலத்தல், தழையச் செய்தல், திரட்டுதல், இளகுவித்தல், வளைத்தல், அசைத்தல்
குழைத்தால் – உன் உள்ளம் குழையுமாறு இரந்து வேண்டுதல்
காவாய் – வந்து சாராதபடி தடுத்தருள்
உறுதி உண்டோ – உனக்காயினும், எனக்காயினும் யாதேனும் நன்மை உண்டோ
கருத்து – ஊழ்வினை அறுத்தலேயன்றி, சிவஞானத்தை மிகுவிக்கும் நல்வினைகள் விளையா என்பதையும் அதனை அளிப்பர் திருப்பேரெயில் தலத்து இறைவர் என்பதையும் விளக்கும் பாடல்.
பதவுரை
திருப்பேரெயில் தலத்து இறைவர் மேருமலையை வில்லாக்கி முப்புரங்களை அழியச் செய்வார்; பல தீர்த்தங்களை உண்டாக்கி அளித்தும், அதில் தன் அன்பர்களை நீராடுமாறும் செய்பவர்; பல பத்தர்களின் ஊழ்வினைகளை அறுப்பது மட்டுமின்றி அவர்கள் நல்வினை பெறும்படியும் செய்பவர் ஆவார்.
விளக்கஉரை
சோழநாடு காவிரித் தென்கரையில் அமைந்திருக்கும் திருப்பேரெயில் எனும் திருத்தலம் பற்றி எழுதப்பட்டது. (தற்போதைய பெயர் – ஓகைப்பேரையூர், வங்காரப் பேரையூர்)
செறுத்தல் – அடக்குதல், தடுத்தல், நெருக்குதல், உள்ளடங்கச் செய்தல், நீர் முதலியன அடைத்தல், தூர்த்தல், சினத்தல், வெறுத்தல், வெல்லுதல், கொல்லுதல்
வண்டுகள் ஆலாபனஞ் செய்யக்கூடியதும், அரும்புகள் மொட்டவிழ்ந்து தேன் மழை போன்று பொழியக்கூடியதும், மடல் விரிந்து பெரியதாக இருப்பதும், பொன் நிறம் கொண்டதும், மணம் வீசுவதுமான கொன்றைப் பூவினை சடையில் உடையவனே, பழைய போர் கருவி ஆனதும் தண்டம் எனப்படுவதும் ஆன தண்டாயுதம், கயிறு, சூலம், கோபத்தினால் புகை உமிழ்வதைப் போன்ற நெருப்பினை உமிழும் கண்கள், வெளியே தெரியுமாறு இருக்கும் வளைந்த தந்தம் எனப்படுவதான பல், சிவந்ததான திருவடி, பாறை ஒத்த கரிய நிறம் ஆகிய வடிவங்களோடு இருப்பவனே, காண்பவர் உளமும், கண்ணும் கவரும் படியாகவும், மிகுந்த செல்வங்களை கொண்ட பெண்கள் நெருங்கும் படியாக இருப்பதும், மிகுந்த அலைகள் உடையதும் ஆன கடவை எனும் அந்த பதியாய் இருப்பவனே, காலனை வருந்தச் செய்தவனும் ஆனவனே, இறப்பு காலத்தில் வரக்கூடிய காலனாகிய எமனைக் கண்டு உள்ளம் மயங்கி, தான் கற்றறிந்த அறிவு அழிந்து, இரு விழிகளும் பார்க்க இயலாமல் பஞ்சு அடைத்தது போன்ற நிலை கண்டு, நீர் இல்லாம வாய் உலர்ந்து, அதனால் தளர்ந்து மனமானது குற்றம் கொண்டு திடுக்கிடும் போது உடனாகிய அம்பிகையுடன் வருவாய்.
தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம் நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – திரிபுரை ஒன்றொடு ஒன்று ஒவ்வாத நிலைகள் பலவற்றையும் உடையவள் எனக் கூறும் பாடல்.
பதவுரை
என்னை வழி நடத்துபவள் என்று முன்னால் அழைக்கப்பட்ட தலைவியான திரிபுரை பால் சுரந்து விம்ம நிற்றலால் கூடிய அருள் பெருக்கு, இளமையாக இருத்தல் ஆகிய காரணங்களால் கொங்கைகள் விம்ம பேரழகுடன் நிற்பவள்; கலைகள் அனைத்தையும் தனதாக்கிக் தன்னுள் தானே அடக்கி நிற்பவள்; பற்றற்று இருப்பவள். இவ்வாறான அவள் என் மனம் நிலைத்தன்மை பெறுவதற்காக என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.
விளக்கஉரை
கலை – நூல்களை அடக்கி நிற்றல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரனை முன்வைத்து 16 கலைகளை உடையவள் என்று சாக்தத்தில் சில இடங்களில் கூறுப்படுவதாலும், அனைத்து கலை வடிவங்களுக்கும் முன்மாதிரியாக இருப்பதாலும் ‘நூல்களை அடக்கி நிற்றல்’ எனும் பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
ஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும் பெருகுதவம் சித்தியெல்லாம் பெற்றும் – குருவருளால் வைத்த படியிருக்க மாட்டாத மாந்தர்க்குச் சித்த சல னம்மாந் தினம்
சிவபோகசாரம் – ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்
கருத்து – குருவழி நடக்க இயலா மாந்தர்கள் கரை ஏறுதல் கடினம் என்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
இந்து சமயத்தின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதும், சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்ற ஒருகோடி ஆகமங்களால் உணர்த்தப்பட்ட எல்லாவற்றையும் உணர்ந்தும், பெருகக் கூடியதான தவம் செய்து சித்தி எல்லாம் பெற்றும் குருவருள் வாய்க்கபெற்றும் அவர் கூறியபடி நடக்க இயலாத மாந்தர்களுக்கு அவர்களுடைய சித்தம் தினம் தினம் சலனம் கொள்ளும்.
வைத்தநெறி நூலும் வகுத்துரைத்துப் – பத்தர் குருலிங்க முண்மையெனக் கூறிநீ டின்பம் தருமன்பை யென்சொல்வேன் தான் பொன்னாடர் இந்திரனும் பூமகனும் மாதவனும் எந்நாடும் எந்நாளு மேநாடித் – துன்னாத வேத முடிவின் விளங்கும் ஒளிஉயிரின் போத முடிவில் பொருந்துமொளி முதலாக நின்று முகிழ்த்த உலகின் விதமான எல்லாம் விரித்தும் – திரமாக ஊர்பேர் உருவமிவை ஒன்றுமிலன் என்றாலும்
பஞ்சாக்கரப் பஃறொடை – பேரூர் வேலப்ப தேசிகர்
கருத்து – சிவனின் பெருமைகளை கூறி அவன் அருளும் பேரின்பத்தையும் அதற்கு காரணமான அன்பையும் உரைக்க இயலாது என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
பொன்போன்ற நாட்டினை ஆளும் இந்திரனும், மலர்மேல் வீற்றிருக்கும் ப்ரம்மாவும், மாதவனும் உன்னை அறிவதற்காக நாள், இடம் என்று தேடியும் உன்னை அறிய இயலவில்லை; செறுதலை உடைய வேதத்தின் முடிவாக விளங்கக்கூடியதும் உயிரின் ஒளி போன்றதும், ஞானத்தின் முடிவாக நிற்கும் ஒளிவடிவாகவும் மொட்டு போன்றதும் ஆன இந்த உலகில் விதம் விதமாக விரிந்து எங்கும் நின்றும் நிலையான ஊர் பேர் இல்லாமலும், உருவம் இல்லாமலும் எதுவும் நீ இல்லை எனும் படியாக இருந்தாலும் முடிவானது என்பதைக் கூறும் சைவ சித்தாந்த நெறி நூலும், அதன் பொருளை உரைத்து இவன் பக்தன் என்று குருலிங்க உண்மையை கூறி நிலைத்த இன்பத்தை தரும் உன் அன்பை என்ன என்று சொல்வேன் யான்?
கருத்து – உயிர்களின் உடலுக்கும் மெய்ஞானத் தன்மைக்கும் இருக்கும் தொடர்பை விளக்கும் பாடல்.
பதவுரை
தனு எனப்படுவதான இந்த உடலில் உயிர்கள் மெய்ஞானம் ஆகிய தன்னிறைவை அடைந்தப்பின் நில்லாது; உடலை விட்டு உயிர் துண்டித்தல் என்பதைத் தாண்டி உயிர்களுக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை என்பதைக் காட்டுவதால் ஆவி எனும் உயிர் என்பது நிரந்தரமானது இல்லை என்பதை காணலாம்.
விளக்கஉரை
தனு – உடல், வில், தனுராசி, சிறுமை, நான்கு கரங்கொண்ட நீட்டலளவை, எருத்தின் முக்காரம், மார்கழி மாதம், ஊன்றிப் பேசுகை, தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி