அமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)


பாடல்

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – திரிபுரை ஒன்றொடு ஒன்று ஒவ்வாத நிலைகள் பலவற்றையும் உடையவள் எனக் கூறும் பாடல்.

பதவுரை

என்னை வழி நடத்துபவள் என்று  முன்னால் அழைக்கப்பட்ட தலைவியான  திரிபுரை பால் சுரந்து விம்ம நிற்றலால் கூடிய அருள் பெருக்கு, இளமையாக இருத்தல் ஆகிய காரணங்களால் கொங்கைகள் விம்ம பேரழகுடன் நிற்பவள்; கலைகள் அனைத்தையும் தனதாக்கிக் தன்னுள் தானே அடக்கி நிற்பவள்; பற்றற்று இருப்பவள். இவ்வாறான அவள் என் மனம் நிலைத்தன்மை பெறுவதற்காக என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.

விளக்க உரை

  • கலை – நூல்களை அடக்கி நிற்றல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரனை முன்வைத்து 16 கலைகளை உடையவள் என்று சாக்தத்தில் சில இடங்களில் கூறுப்படுவதாலும், அனைத்து கலை வடிவங்களுக்கும் முன்மாதிரியாக இருப்பதாலும் ‘நூல்களை அடக்கி நிற்றல்’ எனும் பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • கன்னி – குமரி, இளமை, புதுமை, முதன்முதலான நிகழ்ச்சி. கன்னிப்போர், அழிவின்மை, பெண், தவப் பெண், என்றும் இளமையழியாத பெண்-சப்தகன்னியர், துர்க்கை, பார்வதி, குமரியாறு, கன்னியாராசி, புரட்டாசி மாதம், அத்தம் நட்சத்திரம், தசநாடியிலொன்று, கற்றாழை, காக்கணம்
  • தையல் – தைப்பு, தையல் வேலை, அலங்காரத் துணி, புனையப்படுவது, கட்டழகு, மேகம்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *