அமுதமொழி – விகாரி – பங்குனி – 1 (2020)


பாடல்

நிணம்படு முடலை நிலைமையென் றோரேன்
   நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்
கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலும்
   கருத்தினாற் கைதொழு தெழுவேன்
பணம்படும் அரவம் பற்றிய கையர்
   பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணம்படு காட்டில் ஆடுவ தாகில்
   இவரலா தில்லையோ பிரானார்

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துதிருப்பாச்சிலாச் சிராம இறைவரின் திருமேனி அழகைக் கூறி அவரி அன்றி அடியேனைப் காப்பவர் வேறொருவர் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடக் கூடியதான பாம்பைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளி இருக்கின்ற எம்முடைய கடவுளாராகிய இவரது தன்மை என்னவெனில் பிணம் பொருந்திய காட்டில் ஆடுவதே ஆகும்; இரவும் பகலும் அவரது அடியவர்கள் கூட்டத்தில் சென்று அவர்களின் கருத்தினை ஒத்து அன்போடு துதித்துக் கைகூப்பித் தொழுவேன்கொழுப்பு பொருந்தியதாகிய இவ்வுடம்பை (அழியும் தன்மை உடையது) நிலைத்த தன்மை உடையதென்று நினைக்காமல், நெஞ்சம் இறைவருக்கு உரியது என்று தஞ்சம் அடையத் துணிந்தேன்அடியேனைப் காப்பவர் இவரன்றி வேறொருவர் இல்லை.

விளக்க உரை

  • நிணம் – கொழுப்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 28 (2020)


பாடல்

வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர் தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை யாரூ ரமர்ந்தா னடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே

நான்காம் திருமுறை –  தேவாரம்  – திருநாவுக்கரசர்

கருத்துதுன்பம் கொண்டு பேசியும், ஊனை பாதுகாத்தும், வினைகளைப் பெருக்குதலும் சுற்றம் துணை என்று இருத்தலும் நீங்கி திருவாரூர் தலைவனின் திருவடித்துணை ஓங்க இருத்தல் பற்றிய பாடல்.

பதவுரை

வேம்பு போன்றதும், துன்பம் தரத் தக்கதுமான கசப்பான சொற்களையே எப்பொழுதும் பேசியும், தசையும், மாமிசமும் நிறைந்ததான இந்த உடலை பாதுகாத்தும், தீவினை செய்வதால் வினைகளை மிகுதியாகத் தேடிக்கொண்டு வயிற்றை உணவால் நிரப்பிச் சுற்றத்தவர்களே நமக்கு நிலையான துணைவர்கள் என்றிருக்கும் தொண்டர்களே! ஆம்பல் பூக்களால் நிறையப் பெற்ற பொய்கைகளை உடைய திருவாருர் எனும்  ஆரூரை உகந்து அருளியிருக்கும் பெருமானுடைய திருவடிகளின் கீழே இருக்கப் பெற்றதான சாம்பலைப் பூசி வஞ்சனையின்றித் தொண்டுகளைச் செய்து கடைத்தேறுங்கள்.

விளக்க உரை

  • நூல் இயற்றியவர் – தருமபுர ஆதின ஸ்தாபகர்
  • தலம் – திருவாரூர்
  • விடக்கு – ஊன்
  • ஓம்புதல் – ஊண்புதல் என்பதன் மரூஉ. ஊணால் ஊனைப் பெருக்கல் ஊண்புதல்.
  • வினை – தொல்வினை, பழவினை (சஞ்சித கர்மம்)  உள் வினை, நிகழ்வினை (பிராரப்த கர்மம்)  மேல்வினை, வருவினை (ஆகாமிய கர்மம்) என்பவற்றுள், நிகழ்வினை நுகர்ச்சியினால்  எய்திப் பெருகும் வருவினையைக் குறித்தது.

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள்  – ஆம்பல்

புகைப்படம் / தகவல் – இணையம்
  • வேறு பெயர் – அல்லி
  • நீரில் வளரும் கொடியில் பூக்கும் மலர்
  • இரவில் மலர்ந்து காலையில் குவியும் அல்லி மலர் இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன
  • நீர்அளவே ஆகுமாம் நீராம்பல் எனும் ஔவையாரின் பாடல் வரிகளைக் கொண்டு இதன் பழமையை அறியலாம்.
  • மருத்துவ குணங்கள் – நீரிழிவை நீக்கும்;புண்களை ஆற்றும்; வெப்பத்தினால் ஏற்படும் கண் நோய்களைத் தீர்க்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 21 (2020)


பாடல்

காயம் பலகை கவறைந்து கண் மூன்றா
யாயம் பொருவ தோரைம்பத் தோரக்கரம்
மேய பெருமா னிருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப் பறியேனே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவன் தனது மறைத்தல் சத்தியைக் (திரோதான சத்தியை) கொண்டு உயிர்களின் ஆணவ மலத்தை அவையறியாமல் நின்று பக்குவப்படுத்தி வருதல் உள்ளுறையாக உணர்த்தும் பாடல்.

பதவுரை

காயம் எனப்படுவதாகிய உடம்புடன் கூடிய ஆருயிர்களின் வாழ்க்கையில் சூது ஆட்டம் போன்றதான ஆட்டத்தில் உடம்பு பலகையாகவும், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் சூதாட்ட கருவியாகவும், வலம் இடம் புருவ மத்தி ஆகிய மூன்றும் இடமாகவும், ஐம்பத்தோரு எழுத்துக்களும் சூதாடும் காய்கள் நிரப்பும் அறையாகவும் கொண்டு என்றும் ஆன்மாவுடன் பிரிவு இல்லாமல் நின்று பொருந்தி அருள் செய்யும் சிவபெருமான் ஆருயிர்களைக் கையாளாக வைத்து சூதாட நிற்கின்ற மாயக் கவற்றின்வழிச் செய்யும் அவனின் மறைப்பாற்றலின் பண்பை அறியேன்.

விளக்க உரை

  • கவறு – சூதுபொருவது – பொருது
  • வியப்பைத் தரும் சூது – மாயக்கவறு
  • கண் மூன்றாய் என்பதற்கு நெஞ்சம் கண்டம் புருவமத்தி என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது, சூரிய நாடி சந்திர நாடி சுழுமுனை ஆகியவற்றையும் கண் மூன்றாய் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • உயிர்களை நன்னெறியில் செல்ல ஏவிய சிவபெருமான், அதன் பொருட்டு அவைகட்கு வேண்டும் துணைப்பொருள்களை நிரம்பக் கொடுத்திருந்த போதிலும் அவைகள் அவற்றை மாற்று வழியில் செலுத்துதலால், அச்செயலை அவன் மறைந்து நின்று சூதாடி போல் மாற்றுகின்றான்; இவ்வாறு பலகை, களம், உருள் கட்டம் ஆகியவற்றை எல்லாவற்றையும் அறிகின்ற உயிர்கள் அவற்றின் வழித் தம்மை வஞ்சிக்கின்ற சிவன் ஒருவனை அவன் தம்முடன் கூடவேயிருந்தும் அறியவில்லை.
  • மறைப்பு – மறைத்தல் தொழில். அறிதல், அதன் இயல்பினை முற்றும் உணர்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 9 (2020)


பாடல்

மைப்பொலியும் கண்ணிகேள் மால்அயனோடு இந்திரனும்
எப்பிறவியும் தேட என்னையும்தன் இன் அருளால்
இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவாமே காத்து
மெய்ப்பொருட்கள் தோற்றம்ஆய் மெய்யே நிலைபேறுஆய்
எப்பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் விடுஆகும்
அப்பொருள்.ஆம் நம்சிவனைப்பாடுதும்காண் அம்மானாய்

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துஎத்தனை பெரியவனாக இருப்பினும் உயிர்கள் இடத்தில் கொண்ட கருணையினால் நம்மிடம் வந்து நம்மை ஆள்பவன், அவன் உயர்வு கண்டு அஞ்ச வேண்டாம், அவன் நம்முடையவன் என்பதையும், சிவபெருமானை அன்றிப் பரம்பொருளாவார் பிறரில்லை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

மையினை கண்களின் அழகு பொலியும்படி அணிந்துள்ளவளும், தலையில் சூடப்பட்ட மாலைகளையும் அணிந்தவளே கேட்பாயாக; திருமால், அயன், இந்திரன் முதலியோர் பல பிறவிக் காலம் தேடி நிற்க, என்னையும் தனது இனிய அருளால் இந்தப் பிறப்பில் ஆட்கொண்டு இனிமேலும் பிறவாமல் காத்தவனாய், எக்காலத்திலும் சத்தியதின் வடிவமாகவும் இருந்து அதில் எப்பொழுதும் நிலை பெறுபவனாகவும், எல்லா உயிர்களுக்கும் தானே ஒருமுதல் பொருளாகவும், எல்லா உயிர்களுக்கும் வீடுபேற்றுக்கு ஏதுவாய் இருக்கிறவன் ஆகிய நம்முடைய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

விளக்க உரை

  • எப்பிறவியும் தேட – எல்லாப் பிறவிகளிலும் தேட
  • மெய்ப்பொருட்கள் தோற்றம்ஆய் – ஆன்மாவின் விளக்கமாக
  • எப்பொருட்கும் தானே ஆய் – எல்லாப் பொருள்களுக்கும் பற்றுக் கோடானவன்
  • மெய் – மெய்ம்மை,நிலைபேறு; வடமொழியில், `சத்து`
  • மைப்பொலியும் கண்ணிகேள் – மையினை கண்களின் அழகு பொலியும்படி அணிந்துள்ளவன் என்பது நேரடி பொருள்; குற்றம் எனும் பொருளும் உண்டு என்பது பற்றி குற்றம் கொண்டமையால் மெய்ப் பொருளை காணாது இருப்பவள் எனும் பொருளும் விளங்கப் பெறும்.
  • வீடு – பந்தத்தினின்றும் நீங்கிய உயிர்க்குப் புகலிடம் இறைவன் திருவடியன்றி வேறில்லை எனும் பொருள் பற்றியது
  • தோற்றமாய், தானேயாய் –  காரணப் பொருளாய் நின்று, பின்னர் வந்த, ‘நிலைபேறாய்’  வீடாகும் என்றவற்றோடு முறையே முடிந்தன; பொய்யறிவின்கண் தோன்றாது, மெய்யறிவின்கண் தோன்றுதலால், மெய்ம்மையையே தனக்கு இயல்பாக உடையதாயும், எப்பொருட்கும் முதல்முழு பொருளாகி, யாவைக்கும் வீடாயும் நிற்கும் என்ற பொருள் பற்றியது. மெய்ப்பொருளால் விளங்கி மெய்ப்பொருளையே அறிவது மெய்யறிவு எனும் பதிஞானம் விளங்கப் பெறும்
  • எப்பிறவியும் தேட – திருமால், அயன், இந்திரன் – பல பிறப்பெடுத்தும் தேடுதல் குறித்தது; தேடுதல் – தொழில் / செயல், தேடுபவன் – கர்த்தா, தேடப்படும் பொருள் ஆகிய முதன்மைப் பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 2 (2020)


பாடல்

உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சத்தியைச் சிவனோடன்றித் தனித்து நிற்பவளாக எண்ணுதல் கூடாமை என்பது பற்றிக் கூறப்பட்டப் பாடல்.

பதவுரை

மெய்யை வழி பற்றி, அதன் தன்மையை உணர்ந்து, அவ்வாறு உணர்ந்த வழியிலே விளங்கி நிற்கக் கூடியவராகிய சிவன் எண்ணுபவர்களுக்கு உள் ஒளியாகி நிற்பவளும்,  மணம் வீசக்கூடியதும் மிக நீண்டதுமான கூந்தலை உடைய மங்கை ஆகிய  சத்தியுடன் எல்லா இடத்தும், தானுமாய், பேதம் இல்லாமல் இயைந்தே நிற்பான்.  அவ்வாறு நிற்கும் பொழுதில் தம்மை தொழுது எண்ணுகின்றவர்களுக்கே திரிபுரை நற்கதி அளித்து வழங்குவாள்.

விளக்க உரை

  • உணர்ந்து – `உணர்ந்தவழி` என்பதன் திரிபு
  • நிற்றல் – விளங்கி நிற்றல்
  • உடனே – உடனாகியே எனும் பொருளில்
  • கணித்து –  மெலிந்து என்பது பற்றி தொழுது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 29 (2020)


பாடல்

சேவுயருந் திண்கொடியான் றிருவடியே சரணென்று சிறந்தவன்பால்
நாவியலு மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள்கோயில்
வாவிதொறும் வண்கமல முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டுங் கழுமலமே 

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – திருக்கழுமலம் எனும் திருத்தலத்தின் இயற்கை வருணனைகளையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

தடாகம் எனும் நீர்நிலைகளில் இருக்கும் தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும், செம்மை நிறமுடைய குமுத மலர்கள் வாய்களையும், காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் திருத்தலமான திருக்கழுமலம் எனும் திருத்தலமானது விடை எனும் காளை வடிவம் பொறிக்கப்பட்டதானதும் உயர்ந்த வலிமையானதும் ஆன கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று  செங்காந்தல் மலர் போன்ற மங்கை ஆகிய கலைமகளோடு  நான்முகனாகிய பிரம்மன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில் ஆகும்.

விளக்க உரை

  • நாவியம் – காந்தள்மலர்
  • வாவி – தடாகம்; நீர்நிலை, நடைக்கிணறு, ஆற்றிலோடை
  • சே – இடபம்
  • நா இயலும் மங்கை – சரஸ்வதி

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அல்லி

புகைப்படம் / செய்திகள் - விக்கிபீடியா
  • ஆழமற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் வளரும்
  • பூக்காம்பின் நடுவில் இருக்கும் ஐந்து பெருந்துளைகள் காற்றை நிரப்பி வைத்துக்கொண்டு இலையையும் பூவையும் நீர்ப்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து மிதக்கத் துணை செய்கின்றன.
  • தமிழ் நாட்டில் வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீலநிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக்காம்பலும் (செவ்வல்லி) காணக் கிடைக்கின்றன
  • அல்லிக் கிழங்கு குளிர்ச்சி தரும். பூ குருதிக்கசிவைத் தடுக்கும். புண்களை ஆற்றும்; சிறுநீர் சம்மந்தப்பட்ட வியாதிகளை நீக்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 27 (2020)


பாடல்

பண்ணாரும் காமம், பயிலும் வசனமும்,
விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும்,
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – காமம் முதலிய சிறிய இன்பம் காரணமாக உடம்பை விரும்புதல் சிறப்புடையதாகாது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

நன்கு அமையப் பெற்ற உடலால் எழுகின்ற காமமும், அதன் காரணமாக பொருந்தி ஒலிக்கக் கூடியதான பேச்சுக்களும், மேலே செல்லும் போது ஆகாயம் வரை நீட்டிக்கச் செய்வதான மூச்சும், மூச்சினை தொடர்ந்து எழுகின்றன ஓசையும், புலால் வடிவாகிய உடம்பின் உள்ளே இருப்பதாகிய மனமும் இவை எல்லாம் எங்கு சென்றன என்று எண்ணும்படியாக உடல் முதலில் நிலையழிந்து, பின்னர் உருவும் அழிந்து ஒழியும்.

விளக்கஉரை

  • பயிலுதல் – தேர்ச்சியடைதல், சொல்லுதல், பழகுதல், சேவித்தல், நடமாடுதல், தங்குதல், கற்றல், நிகழ்தல், நெருங்குதல், பொருந்துதல், ஒழுகுதல், ஒலித்தல், அழைத்தல்
  • விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும் – பிராணன் என்பதை முன்வைத்து அதன் முழுமையை உணர்த்துவதான தச தீட்சையினால் கிடைக்கப்பெறும் தச நாதங்கள் வாய்க்கப் பெறும் என்றும் பொருள் கொள்ளலாம்.
  • முதல் தந்திரத்தில் `யாக்கை நிலையாமை` பற்றி கூறப்பட்டாலும், அதனை வலியுறுத்தி இங்கு ‘உடல் விடல்‘ எனும் தலைப்பில் வருவதாலும் காமம் முன்வைத்து எழுதப்பெற்று இருப்பதாலும் காமத்தின் இயல்புகளை எடுத்துரைத்து அதன் நிலையாமையை கூறி உடல் நிலையாமை கூறப்படுகிறது எனவும் கொள்ளலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 22 (2020)

பாடல்

மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தானெடு நகரே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலத்தினையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

பாம்பு, வெள்ளிக்கம்பி போன்று மின்னக்கூடியதான இளம்பிறை, மணம் பரப்பக்கூடியதான கொன்றை மலர் ஆகியவற்றை சமமாக தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகரம் எதுவெனில் கடம்பு, குருக்கத்தி, பிரிந்தும் நீண்டும் இருக்கக் கூடியதுமான மரமல்லிகை ஆகியவற்றின் அரும்புகளும், குரவமலர்களும் மணம் பொருந்தி வானம் வரை நீண்டு இருக்கக் கூடியதானதும், குளிர்ச்சியும் அருளும் நிரம்பியதுமானதும், சோலைகள் சூழ்ந்ததுமானது  திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலம் ஆகும்.

விளக்க உரை

  • விண்டுதல் = பிளத்தல், பிரித்தல்
  • மரவம் – கடம்பு. மாதவி – குருக்கத்தி.
  • நிரவ – நிரம்ப

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு

புகைப்படம் : இணையம்
செய்தி : விக்கிப்பீடியா
  • தற்போதைய பெயர் மவ்வல், மரமல்லி, மரமல்லிகை, பன்னீர்ப் பூ
  • குறிஞ்சி நில மகளிர் பயன்படுத்தியது.
  • இரவில் பூக்கும் இதன் மலர்கள் மிகுந்த வாசனையைக் கொண்டவை.
  • வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலையின் வேறு பெயர் ‘மனைநொச்சி’

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 8 (2020)


பாடல்

தொடைத்தலை மலைத்திதழி துன்னிய வெருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து –  திருக்கோகரணம் எனும் திருத்தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளைக் கூறும் பாடல்.

பதவுரை

அலைகளை உடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்கத் தக்கவரான சிவபெருமான் அழிக்கப்பட்டதான தலைமாலை அணிந்தவர்; திருச்சடையில் கொன்றை, எருக்கு, அலரி, வன்னிப்பத்திரங்கள் ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவர்; அவர் வீற்றிருந்து அருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி இருக்கக் கூடியதும், பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் தலமான திருக்கோகரணம் எனும் திருத் தலமாகும்.

விளக்க உரை

  • தொடை – துடைத்தல் – தடவிப்போக்குதல், பெருக்கித் தள்ளுதல், அழித்தல், துவட்டுதல், கொல்லுதல், தீற்றுதல், காலியாக்குதல், நீக்குதல், கைவிடுதல், ஒப்பமிடுதல்
  • தொடைத்தலை மலைத்து – தலைமாலையை அணிந்து
  • இதழி – கொன்றைமலர்
  • வன்னி – வன்னிப் பத்திரங்கள்
  • மிலைச்சிய – அணிந்த
  • படைத்தலைபிடித்து – ஆயுதங்களின் அடிப்பாகங்களைப் பற்றி
  • மறம் – வெற்றி பொருந்திய
  • அலைநதி – அலைகளையுடைய நதியில்
  • பாடிய – முழுகி வணங்க

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள்அலரி

புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு.ஐயப்ப மாதவன்
செய்தி : இணையம்
  • வகைகள் – ஒற்றை அலரி, அடுக்கு அலரி
  • வண்ணங்கள் தற்காலப் பெயர் – அரளி
  • வகைகள் – மஞ்சள், வெள்ளை, சிவப்பு, குங்கும வண்ணம்
  • மருத்துவ குணங்கள் – ஆறாத புண்களை ஆற்றும், அக்கியை போக்கும், ரத்தத்தை சுத்தப்படுத்தும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 1 (2020)


பாடல்

முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
   முழுநீறு பூசிய மூர்த்தீ போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
   ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
   சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பலம் மேயாய் போற்றி
   திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி

ஆறாம் திருமுறை –  தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துஈசனின் குணங்களை சொல்லி அவரை வணங்குதலைப் பற்றி உரைக்கும் பாடல்.

பதவுரை

திருமுடியில் முல்லை மாலையை சூடியவனே, திருமேனி முழுவதும் திருநீறு பூசியவனே, எல்லை அற்றதான எண்குணங்களை உடையவனே, செங்கோட்டு யாழ் மற்றும் சீறி யாழ்போன்ற ஏழு நரம்புகள் உடைய யாழ் வகையில் ஏழுவகை ஓசையைப் படைத்தவனே, மயிர் நீக்கப்பட்ட உருண்டை வடிவினதாகிய கபாலம் எனும் மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே, உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை முழுவதும் நீக்குபவனே, ஓதுதலை உடைய தில்லைச் சிற்றம்பலத்தை விரும்பி அடைந்து இருப்பவனே, அதிகை வீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனே! உன்னை வணங்குகிறேன்.

விளக்க உரை

  • படைத்தல் – உடையனாதல்
  • சில்லை – வட்டம்
  • சிரை – மழிப்பு
  • செல்வன் – இன்பத்திற்கு ஏதுவாய் உள்ள பொருளாய் உள்ளவன்
  • எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி – சிவனுக்கு உரித்தானதும், சைவ ஆகமத்தில் கூறப்பட்ட முறைப்படியும் எண்வகைப்பட்ட குணங்கள் தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பதால் எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ள கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – முல்லை



புகைப்படம் மற்றும் செய்தி – விக்கிப்பீடியா
  • முல்லை என்னும் சொல் காட்டில் மலரும் வனமுல்லையை குறிக்கும்
  • பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான்
  • மருத்துவ குணங்கள் – மனோ ‌வியா‌திக‌ள் ‌நீ‌ங்‌கி மன‌த்தெ‌ளிவு பெறுதல், தலைவ‌லி நீக்குதல், கண் பார்வை கோளாறு நீக்குதல் போன்றவற்றை செய்யும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 28 (2020)


பாடல்

பிட்டு நேர்பட மண்சு மந்த
     பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
     சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
     நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து
     காட்டி னாய்கழுக் குன்றிலே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – சிவன் கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடையன் ஆயினும் தனக்கு அருளிய பெருங்கருணையை வியந்து உரைத்தது.

பதவுரை

முழுவதும் கற்று அறிந்தவனே, சிவலோகத்தினை தன் உலகமாக உடையவனே, பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறையில் உறையும் பெருமானே! உன் உரைக்கப்படுகின்ற கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடைய நான் உன்னை சார்ந்து அடைந்திலேன்;  அத்தகைய குற்றம் உடையவன் ஆகியவனும் சிறுமை உடைய நாயினும் கடைப்பட்ட என்னையும் ஆட்கொள்ளுதல் பொருட்டுத் திருக்கழுக்குன்றில் எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணையை எவ்வாறு வியந்து உரைப்பது?

விளக்க உரை

  • சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 63வது படலம் மண் சுமந்த படலம்
  • பிட்டு நேர்பட – உண்ட பிட்டுக்கு அளவுக்கு ஒப்ப
  • சழக்கன் – பொய்யன்
  • சிட்டன் – உயர்ந்தோன், பெரியோர், கல்வி நிரம்பிய சான்றோர்
  • வெங் கட்டன் – கொடிய துன்பத்தை உடையவன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 23 (2020)


பாடல்

அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமும்
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சிவன் சூடியுள்ள மலர்களை குறிப்பிட்டு அவர் அனைத்து உயிர்களுக்கு துணையாக இருப்பதை குறிப்பிடும் பாடல்.

பதவுரை

விரும்பத்தக்கதான காட்டுப்பள்ளி எனும் தலத்தில் உறைபவரும், அடும்பு மலர்கள், கொன்றை மலர்கள், வன்னி மலர்கள், ஊமத்த மலர்கள் ஆகியவற்றால் புனையப்பட்ட மாலையை சடையில் சூடி இருப்பவரும், ஒளிவீசும் முத்து போன்ற சோதி வடிவாக இருப்பவனும், கடம்ப மலர் மாலையினை அணிந்த முருகனின் தந்தையும் ஆகிய பெருமானே இந்த உடலோடு கூடி வாழும் உயிர்களுக்கு உற்ற துணைவர் ஆவார்.

விளக்க உரை

  • அடும்பு – அடம்பமலர்
  • துடும்பல் – நிறைந்திருத்தல்
  • தூமணிச்சோதி – தூயமணியினது ஒளியை உடையவன்
  • கடம்பன் – கடம்பமலர்மாலை சூடிய முருகன்
  • தாதை – தந்தை

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு

புகைப்படம் மற்றும் செய்தி - விக்கிப்பீடியா

• வேறு பெயர் அடம்பு
• படரும் கொடி வகை சார்ந்தது
• கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும் தன்மை உடையது
• குணங்கள் – மருத்துவ மூலிகை, வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 21 (2020)


பாடல்

வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால் – மாலைப்
பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட்(கு) இது

பதினொன்றாம் திருமுறை – சிவபெருமான் திருமும்மணிக்கோவை – இளம்பெருமான் அடிகள்

கருத்து – சிவனின் வடிவ அழகை குறிப்பிட்டு ஊழிக்காலத்தில் தண்நீர் அனைத்தையும் எங்கு வைத்திருந்தாய் எனும் வியப்புடன் கேள்வி எழுப்பும் பாடல்.

பதவுரை

சாயுங்காலத்தில் தோன்றும் சந்திரனின் பிறைக்கீற்றையும், நெற்றிக் கண்ணையும், இடப்பாகத்தில் உமா தேவியையும் கொண்டுள்ளவரே! கடலின் உச்சியையும் ஆகாயத்தின் நடு இடத்தையும் இரண்டும் ஒன்றி நிற்கும் படியான ஊழிக்காலத்தில் நீரை எங்கே உள்ளடக்கி வைத்தாய்? இதனை அறியாது திகைக்கின்றோம். ஆகவே இதன் பொருட்டு எங்களுக்குப் பதில் சொல்வீராக.

விளக்க உரை

  • வேலை – பணி, தொழில், உத்தியோகம், காரியம், கடல்
  • கீற்றன் – இடைக் குறைந்து கீறன்
  • வேலை முகடு – கடலின் உச்சி
  • விசும்பு அகடு – வானத்தின் நடுவிடம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 15 (2019)


பாடல்

மூலம்

யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேயெம் பெருமானெம்
மானேயுன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே

பதப்பிரிப்பு

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பதற்கு என் கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்தும் இரேன்
தேனேயும் மலர் கொன்றை சிவனே எம் பெருமானே எம்
மானே உன் அருள் பெறு நாள் என்று என்றே வருந்துவனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துதிருவருளுக்கு உரித்தான நாள் எது என்று வருந்துவதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

தேன் உடைய மலர்களை உடைய கொன்றைப் பூக்களை அணிந்த சிவபெருமானே! ஆகாமியம் சஞ்சிதம் பிராரப்தம் என மூன்று வகைப்பட்டு வரும் கர்மங்களை முன்வைத்து பற்றித் தொடரும் பிறவித் துன்பத்துக்கு யான் அஞ்ச மாட்டேன்; இறப்புக்கு என்ன கட்டுப்பாடு உடையவன்; வானில் ஆளும் தேவர் உலகத்தினையும் அங்கு நிலை பெறுவதினையும் வேண்டமாட்டேன்; மண்ணுலகத்தினை ஆளும் ஆள விரும்பமாட்டேன்; எம் தந்தையைப் போன்றவனும் என் இறையும் ஆனவனே! உன்னுடைய திருவருள் பெற்று உனக்கு உரியவன் ஆகும் காலம் எக்காலம் என்று மட்டுமே வருந்துவேன்; ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும்.

விளக்க உரை

  • எம்மான் – என் மகன், எம் ஆண்டவன், எம் தந்தை
  • என் கடவேன் – கடப்பாடு உடையேன் அல்லேன்;  எனவே, இறப்பைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை
  • வானேயும் – ஏகாரம் தேற்றமும், உம்மை உயர்வு சிறப்புமாய்  இரண்டு இடைச் சொற்கள் ஒன்றாய் வந்தன
  • அருள்பெறுநாள் – இந்த உடம்பினை நீக்கித் தன்னோடு உடனாகச் செய்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 14 (2019)


பாடல்

உடலான ஐயைந்தும் ஒன்றும் ஐந்தும்
மடலான மாமாயை மற்றுள்ளம் நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர் 

கருத்து – ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் முப்பத்தி ஆறு தத்துவங்களை விலக்குதலே அதனை தெரியப்படுத்தும் எனும் கடுஞ் சுத்த சைவ நிலையை விளக்கும் பாடல்.

பதவுரை

ஆன்மவானது ஸ்தூல சூட்சம பர உடம்புகளாய் நிற்கும் முப்பத்தொரு தத்துவங்களும், அவற்றிற்கு மேல் உள்ள ஐந்து தத்துவங்களும் ஆக முப்பத்தாறு தத்துவங்களும் விரிந்த நிலை உடைய பெரிய மாயை ஆகியவற்றால் சூழப்பட்டு இருக்கின்றது. அவ்வாறான  ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் ஆணவ மலத்தினை நீக்கும் பொழுது ஆன்மா தனது இயற்கை நிலையை உறுதிப்பட எய்தும் என்பதே சித்தாந்தச் சைவ நெறியாகும்.

விளக்க உரை

  • ஐம்பூதங்கள்  (நிலம் ,நீர், தீ, காற்று, ஆகாயம்); கன்மேந்திரியங்கள் (பேச்சு,கை, கால்,எருவாய், கருவாய்); ஞானேந்திரியங்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி); தன்மாத்திரைகள் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்); அந்தக்கரணங்கள் 4 (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்); வித்தியாதத்துவம் எனப்படும் அசுத்த மாயா தத்துவங்கள் (காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை-ஒருபகுதி) ; சிவதத்துவம் எனப்படும்  சுத்த மாயா தத்துவங்கள் (நாதம்-சிவம், விந்து-சக்தி, சதாக்கியம்-சதாசிவம், ஈஸ்வரம், சுத்தவித்தை)
  • ஐயைந்தும் ஒன்றும் ஐந்தும் –  ஆன்ம தத்துவம் இருபத்துநான்கு, உடம்பு நுகர்வதற்குரிய வித்தியா தத்துவம் ஏழு –  முப்பத்தொரு தத்துவங்கள்
  • மடல் – விரிவு
  • கேவல பாசம் – ஆன்மாவோடு இயல்பாக ஒட்டி ஒன்றாய் நிற்கும் பாசம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 29 (2019)


பாடல்

அடியார் சிலர்உன் அருள்பெற்றார்
ஆர்வங் கூர யான்அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி
முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியே னுடைய கடுவினையைக்
களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே
ஓவா துருக அருளாயே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – தன் வினைகளை நீக்கி அருள் புரியவேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

உடையவனே! உன் அடியார்களில் சிலர் வினைநீக்கம் பெற்று உன்னிடத்தில் மிக்க அன்பு கொண்டு உன்னுடைய அருளைப் பெற்றார்கள்; உன்னுடைய அடியவனாகிய நானோ வீணாக வினை நீக்கம் கொள்ளாமல் துர்நாற்றமுடைய பிணத்தைப் போன்று தொய்வடைந்து வயதுமுதிர்கின்றேன்; உன்னுடைய அருளை பெற்ற பின்னும் இளகாத மனமுடை அடியேனுடைய கொடுமையான வினைகளை நீக்கி, அடியேனது உள்ளத்தில் உன்னுடைய கருணையாகிய கடல் பொங்கும் வண்ணம் இடைவிடாது உருகும்படி அருள் புரிவாயாக.

விளக்க உரை

  • முடை – துர்நாற்றம், புளித்த மோர் முதலியவற்றின் வீச்சம், நெருக்கடி, தடை, புலால், தவிடு, குடையோலை,
  • ஓலைக் குடை
  • முனி – ஒருவகைப் பேய், முனிவன், தொய்வடை
  • ஓவாமை – நீங்காமை, ஒழியாமை, இடைவிடாமை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 23 (2019)


பாடல்

இலகும் முடிபத் துடையானை
அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனூர் பனையூரே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – இராவணனுக்கு அருளியவனும், பஞ்ச பூதங்களைப் படைத்தவனும் ஆகிய ஈசன் உறையும் இடம் பனையூர் எனும் திருத்தலம் என்பதை கூறும் பாடல்.

பதவுரை

எளிதாக விளங்கக் கூடியதான  முடியினை கொண்ட பத்து தலைகளை உடைய இராவணனுக்கு துன்பம் வருமாறு செய்து, பின் அவன்படும் அல்லல் கண்டு அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின் உள்ள உயிர்கட்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்து அளித்தவனும் ஆகிய சிவபெருமானனின் ஊர் திருப்பனையூர் எனும் திருத்தலமாகும்.

விளக்க உரை

  • ஐம்பூதங்களையும் ஆக்கிய இறைவனின் ஊர் பனையூர் என்கின்ற பொருள் கொண்டும் ‘மற்றும் பல’ என்றமையான் நுண்பூதங்களும், தன்மாத்திரைகளும் ஆகிய அனைத்தையும் படைத்துக் கண்டவன் எனும் பொருளாகவும் விரியும்.  உலகினையும், உலக பொருள்களையும் படைத்தவன் சிவன் எனும் சைவ சித்தாந்த பொருளுடன் ஒப்பு நோக்கி உணர்க.
  • அலல் – துன்பம்; அல்லல் என்பதன் திரிபு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 10 (2019)


பாடல்

ஏசினும் யான்உன்னை ஏத்தினும் என்பிழைக் கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண் டாய்செம் பவளவெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடை யாய்சிற் றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக் கடையவனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துதேவர்களுக்கு அருள் புரிந்த தன்மை உரைத்து தனக்கும் அருள் புரிய வேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

செந்நிறமுடைய பவளமலை போன்ற ஒளியுடைய திருமேனியனே, என்னை நினக்கு அடிமையாக ஆக்கிக் கொண்டவனே! தேவர்கள் ஆகிய சிறு உயிர்களுக்கு மனம் இரங்கி அவர்கள் அமுது உண்ணுதல் பொருட்டு எதிர்படுவோரைக் கொல்லும் வேகத்தோடு எழுந்த அமுதத்தினை உண்டாய்; கடைப்பட்டவனாகிய நான் உன்னை இகழ்ந்து பேசினாலும், புகழ்ந்து வாழ்த்தினாலும் எனது குற்றத்தின் பொருட்டே என்று எண்ணி மனம் வாடி துக்கப்படுவேன்; அவ்வாறு துக்கம் கொள்ளும்  என்னை விட்டுவிடுவாயோ!

விளக்க உரை

  • ஏசினும் – உன்னை ஏசினாலும் உன்னிடம் கொண்டிருந்த அன்பின் அடிப்படையிலும் சொல் அளவிலும் இன்றி மனதளவில் இல்லை என்பது உட்பொருள். ( ‘வெங்கரியின் உரிப்பிச்சன்’ என்பது முந்தைய பாடல்களில் பாடப்பெற்றமை காண்க)
  • வேசறு வேனை – நின் அடியார் கூட்டத்தோடு செல்லாமல் இந்த உடலுடன் தங்கிவிட்ட தவற்றை நினைத்து மனக் குழைந்து வருந்துதல் (வேசறுதல் – வருந்துதல் )
  • அமுதை கடைய முற்பட்ட தேவர்கள் நஞ்சை கண்டு தவித்து நின்னை சரண் அடைந்த பொழுது அவர்களுக்கு மனம் இரங்கி அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டாய், அவ்வாறான கருணைக் கடலான நீ என்னுடைய சிறு பழைய பிழைகளை நினைத்து வருந்துபவனாகிய என்னையும் ஏற்றுக் கொண்டு அருள் புரிதல் உன்னுடைய கடமை அன்றோ
  • கடையவன் – சங்காரத்தில் உலகம் அழியும் போதும் அழியாது இருப்பவன் (தோன்றாப் பெருமையனே என்பது வெளிப்படை)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 9 (2019)


பாடல்

அரக்க னையல றவ்விர லூன்றிய
திருத்த னைத்திரு வண்ணா மலையனை
இரக்க மாயென் உடலுறு நோய்களைத்
துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர் 

கருத்துஇராவணனுக்கு வேண்டி நின்றப் பின் அருளிய திறத்தையும், வேண்டாத பொழுதும் தன்னிடத்தில் இரக்கம் கொண்டு அருளிய திறத்தையும் திருநாவுக்கரசர் உரைத்தப் பாடல்.

பதவுரை

அரக்கன் ஆன இராவணன் வாய் விட்டு அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றியவனும், எஞ்ஞான்றும் மாறுபாடு இல்லாமல் இருப்பவனும், திருவண்ணாமலை வடிவமாக இருப்பவனும், இரக்கம் கொண்டு என் உடல் பெற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலும் கூடுமே?(இல்லை என்பது மறை பொருள்)

விளக்க உரை

  • அரக்கன் – இராவணன்
  • திருத்தன் – மாறுபடாதவன், செய்யன், திருந்தும்படி செய்தவன்
  • இரக்கமாய் – இரங்கி அருளி( செருக்கு நீங்கிப் பண் இசைத்து அருள் பெற்றது)
  • துரக்கன் – துரத்தியவன்
  • உரக்கன் – வலிமையுள்ளோன்
  • உடலுறு நோய் ஒன்னு ஆன போதிலும் அதனால் பெற்ற வருத்தம் பல வகைப் பட்டமையின் காரணமாக நோய்களை என்றார் என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சீதம் பிராப்தம் ஆகாமியம் ஆகிய மூவினைகளையும் அழித்து அதன் மூலம் உடல் நோயினை நீங்குபவன் என்பதான பொருளும் அறியப்படும். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 8 (2019)


பாடல்

முன்னவன் எங்கள்பிரான் முதல்
   காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திரு
   நீல மிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறை
   நான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழ
   மண்ணிப் படிக்கரையே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துஈசனின் எண் குணங்களில் சிலவற்றை சொல்லியும், அவன் சில தன்மைகளையும் கூறி அவன் உறையும் திருத் தலத்தைப் பற்றி உரைக்கும் பாடல்.

பதவுரை

சங்காரம் முடிந்து சிருஷ்டி தொடங்குவதற்கு முன் உள்ளவனும், தனக்கு முன்னால் உலகம் மற்றும் உலகப்  பொருளும் படைக்கப்படவில்லை எனும் தன்மை கொண்டு எங்கள் இறைவன் ஆனவனும், சென்னி எனப்படுவதும் தலை எனப்படுவதும் ஆன உச்சியில் இருக்கும் எங்கள் தலைவன் ஆனவனும், அழகிய நீல கண்டத்தை உடைய எங்கள் இறைவன் ஆனவனும், என்றும் நிலை பெற்ற எங்கள் தலைவனும், நான்கு மறைகளையும் கல்லால மர நிழலில் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்தவனும் ஆன எங்கள் இறைவன் இறைவன் எழுந்தருளியிருப்பது  ‘திருப்பழமண்ணிப்படிக்கரை’ என்னும் திருத்தலமே.

விளக்க உரை

  • பிரான் – தலைவன், தேவன், இறைவன்

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!