கருத்து – பல வகைத் தானங்களும், அவற்றின் பலன்களும் பற்றியப் பாடல்.
பதவுரை
பிறர் கேட்கமால் அவர் நிலை அறிந்து தானம் கொடுப்பது பெருமை உடையது; அவர்களின் நிலையைக் கேட்டு அறிந்து அவர்களுக்கு தானம் கொடுப்பது குறைந்த பெருமை உடையது; பலமுறைக் கேட்டு பின் தானம் கொடுப்பது தர்மத்தின் கால்பகுதி, கேட்டும் கொடுக்காதவர், கழிவு இல்லாத பழைய வினை போன்றவர் என்று அவர் உறவை அறுத்து விடுக.
விளக்கஉரை
ஈதல் – தானம் கொடுத்தல்.
எச்சம் – மீதம், எஞ்சி இருப்பது, வாரிசு, பறவைகளின் கழிவு
கருத்து – முருகன் என பெயர் பெற்றதை தன்நிலை விளக்கமாக அருளும் பாடல்.
பதவுரை
அப்பொழுது யானும் சிலம்பொலியினைக் கேட்டேன்; அதன் காரணத்தால் காது இரண்டும் அடைத்துப் போனது; ரோசம், வெட்கம் ஆகியவை விட்டகன்றது; இரக்கம் தருவதான மயில் மீது ஏறி பறந்து சென்றேன்; வாசி வழி பற்றி நின்றதால் மனம் மயங்கி நின்றது. வைரம் போன்ற தன்மை உடைய மெய்ப்பொருளின் வகையினைக் கண்டேன்; மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் தன்னிலையை உணர்ந்திடுவார் என்பதாலும். தன்னை முழுமையாக அறிந்து மெய்ஞான வடிவாக நிறைந்து, மூம்மூலம் உரைத்து அதை உணர்வதால் பொய்மை விலகி உண்மை நிலை விளங்கிக் கொண்டவர் என்பதாலும், கொள்ளத்தக்க தேவை என்பது ஏதும் இல்லை என்பதாலும் எனக்கு முருகன் என்று பெயர் ஆனது.
விளக்கஉரை
பல விளக்கங்கள் குரு மூலமாக அறியக்கூடியவை. உ.ம் சிலம்பொலி. ‘சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை‘ எனும் பாடல் வரிகொண்டும், வள்ளலார் பாடல்கள் மூலமும், தச தீட்சை மூலமாகவும் பல விளக்கங்கள் அளிக்க இயலும். குருவருள் பெற்று குரு மூலமாக பொருள் அறிக.
சொக்குதல்-மயங்குதல், மனம் பிறர்வசமாதல், பிறரை மயங்குமாறு ஒழுகுதல்
ஆச்சப்பா உருவாகித் திருவு மாகி அண்டசரா சரங்கள் எல்லாம் நிறைந்து நின்றேன் பூச்சப்பா மனமாகி ஒன்ற தாகிப் புவிதனிலே மதிதேய்ந்து ரவியிற் கூடி வாச்சப்பா வாசியென்ற மயிலி னாலே வஸ்தான வஸ்தாகி மேலே நின்றேன் மூச்சப்பா மூச்சற்ற இடமும் கண்டேன் முருகன் என்றும் எந்தனுக்குப் பேருமாச்சே
சுப்ரமணியர் ஞானம்
கருத்து – முருகன் தன் பெயர் காரணத்தை கூறி உருவம் உடையவராகவும், அண்டசராசங்களாகவும் நிறைந்து நின்றதை கூறிய பாடல்.
பதவுரை
சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படுவதும், பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதானதும், தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் ஆனதுமான உருவ வடிவம் கொண்டும், மதிப்பிற்குரியதும், மேன்மை உடையதும், சிறப்புடையதும், தெய்வத்தன்மை உடையதுமான திரு எனும் படியும், பஞ்ச பூதங்களின் வடிவமாகவும், அனைத்தும் ஈசன் வடிவமாகவும் இருக்கும் அண்ட சராசரங்கள் எல்லாமும் நீக்கமற நிறைந்து நின்றேன்; அந்தக்கரணங்களில் முதன்மையான மனம் ஆகி, அதனால் குறிக்கப்பெறும் மெய்பொருளான ஒரு பொருளாகி இந்த புவிதனில் ஆணவ, மாயை, கன்மங்கள் ஆகிய இருள் மறைந்து, பேரொளி கூடியது போல், தயாவடிவாய் மோக மதங்கள், தத்துவங்கள் நஷ்டம் ஆகுமாறு, நாசம் செய்து, அவற்றின் அக்கிரமம், அதிக்கிரமம் கெட்டு கிரம மாத்திரம் கொண்டு, பூர்வ வாசனாதிகள் பல வண்ணமாய் விரிந்து ஆடும் மயில் மீது ஏறி அசைய ஒட்டாது மத்தியில் வாசியினைப் பற்றி ஏறி, மூச்சற்ற இடம் கண்டதால் எனக்கு இளமை உடையவன், அழகியோன், கடவுள் தன்மை உடையோன் எனும் முருகன் என்று பெயரானது.
மின்னுதல் போன்று அறிவை வெளிப்படுத்தும் அவையில், நூறு பேரில் ஒருவர் பேசக்கூடியவராகவும், ஆயிரம் பேரில் ஒருவர் புலவராகவும், பத்தாயிரம் பேரில் ஒருவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவராகவும், நீர் தடாகங்களில் தாமரை மலர்கள் பூத்து தண்டை மறைப்பது போல் மதிப்பு உடையவராகவும், தெய்வத் தன்மை உடையவராகவும் கோடி பேரில் ஒருவர் மட்டுமே தாதா என்றைக்கப்படும் முனிவராகவும் இருப்பது உலகியல்பு என அறுதியிடலாம்.
விளக்கஉரை
ஆர்த்தல் – மறைத்தல், மின்னுதல்
சற்றேறக்குறைய 40 வருடங்களுக்கு முன் புலவர் பட்டம் பெற தோராயமாக 10000 பாடல் அறிந்திருக்க வேண்டும் எனில் ஔவையார் காலம் பற்றி அறிந்திருக்க வேண்டிய பாடல் எண்ணிக்கை அறிக.
கூடுவது லகுவல்ல வாய்ப்பேச்சல்ல கோடியிலே ஒருவனடா குறியைக் காண்பான் எனும் சுப்ரமணியர் ஞானப்பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்க.
ஆர்த்தசபை நூற்றொருவர் – இது இறுமாப்பு கொண்டதுரியோதன் சபையில் ஒருவர் சகுனி. ஆயிரத்தொண்றாம்புலவர் – இது விதுரரைக் குறிப்பது பூத்தமலர்த்தாண்டமறை- இது விஷ்ணு விஸ்வ ரகசியம் ததாகோடிக்கொருவர்உண்டாயிண்உண்டெண்டெண்றுஅறு – இது சிவம் இது ஒங்காரம்.
வழுத்துகிறேன் என்மகனே மாணா கேளு வல்லவர்க்குப் பிள்ளை என்றவகையும் சொல்வேன் அழுத்துகிற ஆத்தாளை அவர்க்கே ஈந்தேன் அதனாலே அரனுக்குப் பிள்ளை என்றார் தொழுத்துகிற அவரையுந்தா நின்று யானும் துய்யவெளி உபதேசம் துரந்து சொல்லி வழுத்துகிறேன் அதனாலே ஆசானென்று அல்லோரும் எனைத் தானும் அருளினாரே
சுப்ரமணியர் ஞானம்
கருத்து – சிவன் தனக்கு தந்தையாகவும், மகனாகவும் ஆன ரகசியத்தை முருகப் பெருமான் அகத்தியர் கேட்டதற்கு இணங்க அவருக்கு கூறியது.
பதவுரை
என் மகனாகவும், என் மாணவன் ஆனவனாகவும் ஆன உன்னை வாழ்த்துதல் செய்கின்றேன். வலிமை உள்ளவனும் சமர்த்தவனும் ஆகியவருக்கு எவ்வாறு மகன் ஆனேன் என்று உரைக்கிறேன். தனது ஆத்தாள் ஆகிய பார்வதி தேவியை அவள் விரும்பியவாறு ஈசனாருக்கு கொடுத்தேன். அதனாலே ஈசனார் ஆகிய அவரை விட இளமை உடைய இளைஞன் ஆனேன். தனக்கு ஞான உபதேசம் செய்யும் படி விரும்பி நின்ற அவரை, தூயவெளி என்பதும், வெட்டவெளி என்பதும் ஆகாசம் என்பதும் ஆன இடம் காட்டி உபதேசம் காட்டி அருளியதால் அவருக்கு ஆசான் ஆனதால் அவருக்கு மெய்ஞானத் தந்தை ஆனேன் என்று அல்லாதவர்களும் கூறியது குறித்து தன்னைப்பற்றி அருளினார்.
கருத்து – போகர், முருகப் பெருமான் வயதினை கணித்து கூற இயலாமை குறித்தப் பாடல்.
பதவுரை
இவ்வாறான மெய்யறிவுப் பொருளாகியனும், அவன் பற்றிய மார்க்கத்தினையும் சொன்னேன்; சிறப்பான இன்னொரு வேதம் போன்றதான மற்றொரு வசனத்தினைச் சொல்கிறேன்; தூமணி போன்றவரான வடிவேலர் முருகப் பெருமானே ஆவார்; அப்படிப்பட்டவரான முருகனுக்கான வயது எதுவென்றால், சர்வ நிச்சயமாக வயதினைக் கணித்துக் கூற இயலாது. அவனைப் பற்றிய நூல்களிலும் அதுபற்றி உரைக்கப்படவில்லை. முக்தி அருளக் கூடியவனும், பேரறிவாக இருந்து, அந்த அறிவுடைப் பொருளாகவும் ஆகி, பரமான்மாவாகவும் ஆகி, அட்டமாசித்தி பெற அருள்வோனுமாய், ஞான வழி அருள்பவனுமாய் இருப்பது சிறப்பான சுப்ரமணியர் என்று (மட்டும்) கூறலாம்.
கருத்து – உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்தி ஆகியவை இரு பொருள்கள் ஆகாமல் ஒன்றாய் இருக்கும் சொரூப நிலை பற்றி உரைத்தப் பாடல்
பதவுரை
சிவத்தை விட்டுத் தனியாய் இல்லாமலும், சிவம் விடுத்து தனியே இயங்காமலும் இருக்கும் சத்தியானது, உலகம் செயற்படுதன் பொருட்டு, சிவத்தினில் தோன்றி வேறு நிற்பது போல இருக்கிறது என சொல்லப்பட்டாலும், சத்தியானது எஞ்ஞான்றும் தனித்து நிற்காமல், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு எப்பொழுது ஒன்றி நிற்கும்; எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல் என்பது, அறிவு, செயல் என்னும் வேறுபாடு கொண்டு கொள்ளப்படும் தொழில் என்பன பற்றியதே; இவ்வாறான தன்மை உடையதும், தன்னில் இருந்து வேறு ஆகாததுமான சத்தியை ‘அதுதானே எல்லாம் செய்யவல்லதாக நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளாகிய முதல்வனை, `இப்படிப்படவன், இந்த நிறமுடையவன்’ என்று சொல்லால் சொல்லி விளக்க முற்பட்டால் , அஃது ஒருவனாலும் செய்ய இயலாது. ஏனெனில், விளக்கப்படும் சொற்களுக்கும், அந்தப் பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.
விளக்கஉரை
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் – கண்ணில் ஒளி போல் இருக்கும் என்று பொருள் உரைப்பாரும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – அகத்திலும், புறத்திலும் நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு அதன்படி நடக்கும் முறையைப் பற்றியதை விளக்கும் பாடல்
பதவுரை
மும்மலங்களில் ஒன்றான ‘தான்’ எனும் ஆணவம் கொண்டு இந்த உலகில் சஞ்சாரம் செய்யும் மனிதர்களுடன் திரியாமல் தனித்து நிற்பாயாக; ஆன்ம அனுபவத்தை தருவதாகிய ‘ஓம்’ எனும் மந்திரத்தை குரு உபதேசித்தபடி, குரு உபதேசித்த அளவில் கொள்வாயாக; நியாயம் சார்ந்து இருப்பவனுக்கு எதிர் அணியில் இருந்து எதுவும் உரைத்திடாதே; நெற்றி உச்சியை குறிப்பதானதும், ‘ஔம்’ * என்றும் வழங்கப்படுவதுமான அட்சரத்தை மறந்துவிடாதே; களைப்பு, அலுப்பு, சோர்வு கொண்டு உலகில் இலக்கு இல்லாமல் திரிந்திடாதே; பேய் போன்ற காமம் கொண்டவர்களோடு இணைந்திடாதே; மண்ணைப் பானையாக மாற்ற குயவன் என்ற நிமித்த காரணமும், மண் எனும் உபாதான காரணம் இருப்பதை அறிந்து கொண்டு விதிக்கப்பட்ட காலம் வரையில் இந்த உலகினில் இயங்கிக் கொண்டு இருப்பாயாக.
விளக்கஉரை
ஊண் – உண்கை; உண்ணுதல், உணவு, ஆன்மாவின் சுகதுக்கானுபவம்
ஆயாசம் – களைப்பு, அலுப்பு, சோர்வு
ஆமென்ற அட்சரம் – ‘ஔம்’ என்று கொள்ளப் பெறும். (பல அட்சரங்கள் மந்திரத் தொடர்பு உடையவை என்பதால் குரு முகமாக பெறுக)
முதலில் கூறியதான `ஸௌம்` என்பதோடு, `ஔம், ஆம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீரீம்` என்பவையும் சேர்த்துப்பின் `க்லீம்` என்பதை மந்திரத்தின் முடிவு எழுத்தாக வைத்து, ஒவ்வொரு முறையும், `சிவாய நம` என்று என்று சொன்னால் நவாக்கரி சக்கர வழிபாடு கைவரும்.
சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.
மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் கோட்டையாக இருக்கின்றன என சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளன. புத்தியும், சித்தமும் நல்லவற்றை சிந்திக்கும் திறனுனையது ஆனதாலும், அகங்காரம் நல் விஷயங்களை அகங்காரம் உறுதிப்படுத்துவதாலும், பகை என்று அடுத்து வரும் வரிகளால் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் அந்தர்க்கரணங்கள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.
முன்னர் கூறப்பட்டவாறு எந்திரங்களில் வாசனை திரவியங்களைப் பூசி, செவ்வரளி பூக்களை வாங்கி அதன் மேல் சாற்றி, வடை, தேன், பால், வாசி வழி மனம் அடங்க அன்னம், மாங்கனி, வறுகடலை மற்றும் பயிறு தானியங்கள் இவைகளை நைவேத்தியமாக வைத்து மனதில் உறுதிகொண்டு முழுமை அடந்தவளே, மிகவும் அழகு நிரம்பப் பெற்றவளே, சிங்கம் போன்றவளே, தாயானவளே என்று தினம் தோறும் மந்திரத்தை செபித்து, பேசித் திரியாமல் மௌனமாக பூசிக்க வேண்டும்.
விளக்கஉரை
தேசி – பெரிய குதிரை,ஓர் இராகம், கூத்துவகை, அழகு, ஒளிரும் அழகுள்ளவள்
வாமம்வைத்துப் பேரான மாமிசமும் –
மாமிசம் – மா-ம்-இ- சம்
மா – பெருமை மிக்க
ம்-இம் எனும் ஊமை மூலம்
இ-அருட்பிரணவம்
சம்- சுகம்
இடது பக்கமாக வாசி செல்லும்படி செய்து பெருமை மிக்கதும் சுகம் தருவதும் ஆன ‘இம்’ எனும் ஊமை மூலம் கொண்டு பூசிக்கவேண்டும். அம்மை ஈசனின் இடப்பாகத்தவள் என்பதை ‘வாமபாகம் வவ்வியதே’ எனும் வரிகள் மூலம் நினைவு கூறலாம். அன்னை மகார வடிவமாக இருப்பதை ‘மகாரப் பிரியை’ எனும் திருநாமம் கொண்டு அறியலாம். மேலும் ‘ம்’ என்பது ஜீவாத்மாவை குறிப்பதாகும்; ஆறாம் அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும். இவ்வாறு பூசிக்க வேண்டும் எனவும் கொள்ளலாம்.
மா சக்தி நிறைந்தவளான அன்னை பூசை பற்றியதாலும், முருகனே அகத்தியருக்கு உபதேசிப்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.
வீடென்ற வீடகத்தி னுண்மை காண விளம்பிடுவேன் வெட்டவெளி யாகத்தானே ஆடென்ற அரனவருஞ் சடா பாரத்தில் அம்பிகையைச் சுமந்த வகை யறிந்து கொள்வீர் நாடென்ற பிரமாவும் நாவிற் பெண்ணை நயந்து வைத்தும் நானிலத்தில் நயமுற்றெய்தார் சேடனெற்ற விட்ணுவுந் தன் னெஞ்சிற் றானே சித்தமுடன் ஓர் மாதை வைத்திட்டாரே
சுப்ரமணியர் ஞானம்
பதவுரை
வீடு என்கின்ற உடம்பில் இருந்து முத்தியுலகத்தில் புகுவதாகிய அக வீட்டில் உண்மையாய் காணும் வழியையும், அகத்தினுள் புகுந்திடும் சூட்சமத்தை வெளிப்படையாக கூறுகிறேன். நடனத்தை பிரதானமாக உடைய சிவபெருமான் தன் தலை முடியில் கங்கையும், தன் உடம்பில் பாதி அம்பிகையையும் சுமந்து கொண்டு இருக்கிறார்; வினைகளை ஆராய்ந்து அதன் வழி உயிர்களைப் படைக்கும் பிரம்மாவும் தன் நாவில் சரஸ்வதியை விருப்பமுடன் வைத்தே இந்த நானிலத்தை படைக்கிறார்; இளமை உடையவனானவனும், பெரியவனானவனும், கடவுளானவனும் ஆன விஷ்ணு தன் மார்பில் மகாலெட்சுமி ஆகிய வைத்திருக்கிறார்; இவர்கள் பெண் சக்தி துணை இல்லாமல் எதனையும் அடைய முடியாது என்று மூவரும் உணர்த்துகிறார்கள்; இதை உணர்ந்து இல்லற தர்மத்தில் இருந்துகொண்டே இறைநிலையை அடைய உண்மையில் தியானம் செய்வீர்.
சித்தர் பாடல் என்பதால், பல சூட்சங்கள் அடங்கியது என்பதாலும், ஆதார சக்கரங்கள் முன்வைத்து உரைக்கப்படுவதாலும், பாடலின் கருத்துக்கள் மறை பொருளாக உரைக்கப்பட்டுள்ளன. மேலும் அறிய விருப்பம் உள்ளவர்கள் குரு முகமாக பெறுக.
மஞ்சள் நிறமானதும், பத்து இதழ் கொண்டதும் ஆன தாமரை வடிவ மணிபூரக சக்கரத்தில், பிரகாசிக்கும் பூரண சந்திரனைப் போன்ற மகாலட்சுமியையும் விஷ்ணுவையும் மனக் கண்ணால் நோக்கி, நுட்பமாக பூரணமாக நின்றால் மூக்கு நுனியின் முடிவில் வாசி நிற்கும்; இந்த நிலையில் உடல் வருத்தம் தரா அளவில் தொடர, மனம் வாக்கு காயம் ஒன்றுபட்டு, தீப தரிசனம் காட்டி நிற்கும்; ஜீவனை அறியாமை என்ற இருளில் மூழ்கடித்து விடுவதாகிய தூக்கத்தைக் தொலைத்துவிட்டு இந்தப் பயிற்சியின்போது ஏற்படும் ஆனந்தத்தை தருவதான இடம் அறிந்து ஆனந்த நிலையில் இருக்க முனைய வேண்டும்.
உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம் வைத்த விளக்கும் எரியுதடி அச்சுள்ள விளக்கு வாலையடி அவி யாம லெரியுது வாலைப்பெண்ணே!
கொங்கணர்
பதவுரை
வாலைப்பெண்ணே! உச்சி ஆகிய துரியத்திற்கு நேராக உகாரம் ஆனதும், மனோன்மணித் தாயார் வாசம் செய்யும் அண்ணாக்குக்கு மேலே இருப்பதுமான உண்ணாக்கு மேலே சதாசிவமும், சதாசிவனும் மனோன்மணியும் இருக்கப்பட்ட இடமானதும், சப்தம் பிறந்த இடமானதுமான இடத்தில் தினமும் வைத்த விளக்கானது சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும். அந்த வலிமை வாய்ந்த விளக்கானது அணைந்து விடாமல் எப்பொழுதும் சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும்.
விளக்கஉரை
இவரின் பெரும்பாலான பாடல்கள் சாக்தம் சார்ந்த வாலைப் பெண்ணை முன்வைத்து எழுதப்பட்டவை என்பதால் பாடல்களில் வாலைப்பெண்ணே என்பது இடம்பெறும்.
அச்சு – அடையாளம்; உயிரெழுத்து; வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு; வலிமை; அச்சம்; துன்பம்; நெசவாளர் நூல்களை அழுத்தப் பயன்படுத்தும் கருவி.
வைதோரைக் கூடவை யாதே: – இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே
கடுவெளிச் சித்தர்
பதவுரை
உனக்கு தீங்கு செய்வதன் பொருட்டு இகழ்ந்து பேசியவருக்கும் கூட தீங்கு எண்ணாதே; இந்த வையகம் முழூவதும் வஞ்சனைகளால் சுழ்ந்து கெடுதலால் நிரம்பினாலும் அகத்துள் ஒரு பொய்யையும் நுழையவிடாதே; (இம்மைக்கும் மறுமைக்கும் ) உயர்வு தராத வினைகளை செய்யாதே; பறக்கும் பறவைகள் மேல் கல் எறிந்து அதை காயப்படுத்தாதே.
விளக்கஉரை
கடுவெளிச் சித்தர் பாடல்கள் ஆனந்தக்களிப்பு வகையைச் சார்ந்தவை. இதனை
பிறவிகள் தோறும் தொடர்வதும், தீமை செய்யத் தூண்டுவதும், இறையை காணச் செய்யாமல் செய்வதும், நரகத்தில் கொண்டு சேர்ப்பதும், மும்மலம் னப்படுவதுமான ஆணவம், கன்மம், மாயை இவைகளை நீக்கி, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று பொறிகளாகிய முப்பொறிக்கு எட்டாததும் காரணப்பாழ், காரியப்பாழ், அறிவுப்பாழ் என்றும் மாயப்பாழ், சீவப்பாழ், அருள் வெளிப்பாழ் என்றும் கூறப்படும் முப்பாழும் கடந்து, உருவம் அற்ற இடத்தில் இருக்கும் முப்பாழும் கடந்ததை புறச் செயல்கள் செய்யும் காலத்திலும் அக சிந்தையில் வைப்பீர் கோனாரே!
விளக்கஉரை
செம்மறி யோட்டிய வேலை – புறச் செயல் செய்கையில் அக வழிபாட்டு முறை பற்றியது இப்பாடல்
கோனாரே – குலத்தினை குறிப்பிடாமல் பசுக் கூட்டத்தை மேய்ப்பவன் எனும் பொருள் பற்றியது.
பார்த்தல், கேட்டல், சுவைத்தல் , நுகா்தல் மற்றும் தொடுதல் ஆகிய ஐம்புலன்களும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் ஐம்பூதங்களும் நமசிவய எனும் ஐந்தெழுத்தான சதாசிவமேயன்றி வேறல்ல. ஐம்பூதங்களுடன் ஐம்புலன்கள் இணைந்த கலவையான உயிர்பிறப்புகளும் அனைவற்றுக்கும் எல்லையான ஐந்தெழுத்தான ஆதிமூலமேயன்றி வேறல்ல. எவ்வாறு வளர்ச்சியுறும் கனியை பிஞ்சென்று உரைப்பார்களோ அது போன்ற அளவிலா நிறைந்தவோர் அருட்பெரும் சோதியினின்று பிரிந்து வந்த (பிய்ந்து வந்த) ஒரு துகளே வளரும் நிலைகொண்ட கனலாகும். இக்கனலே அகத்துள் உறைந்து ஐம்பூத மற்றும் ஐம்புலக் கலவையான உயிரினங்களை இயக்குகிறது. இதனை உணராதவர்கள் அவரவர் வாய்ப் போக்கில் உரை செய்வார்கள்; ஈஸ்வர வடிவமான இந்த ஐந்தெழுத்தை உள்ளத்தில் நிலை நிறுத்தி வைக்கக் கூடிய வல்லமை பெற்றோர், எண்ணிக்கையால் குறிப்பிடப்படும் நிலைகளைக் கடந்து (அதாவது ஐம்புலன்கள் மற்றும் ஆறுநிலைகளான மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்ஞா) மேலும் கடக்க எந்த நிலையுமல்லாத மிக உன்னதமான இறுதி எனும் பரமானந்த நிலை எய்துவர்.
தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே சோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால் எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு இல்லையென்று எண்ணுவீர் கோனாரே
இடைக்காடர்
பதவுரை
உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறவி எடுத்ததால் அப்பிறவியுடன் இணைந்து வரும் மாயையாகிய மயக்கத்தில் (செயலிழக்கச் செயும் சோம்பலில்) மனத்தை இழக்காது மனமொருமைப் படுத்தி வந்த பொருள் அறியும் முயற்சியாகிய தவத்தில் ஈடுபடா விட்டால், இப்பிறவியின் முடிவில் (எல்லையில்) கடவுளாகிய மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து அதனுடன் இணையும் திறன் நமக்கு கிடைக்காது என்ற உண்மையை உணர வேண்டும்.
விளக்கஉரை
தொந்தம் – இரட்டை, புணர்ச்சி, தொடர்பு, பகை, மரபுவழிநோய், ஆயுதவகை, பழமை, நெருங்கிய பழக்கம்
ஐந்தறிவு மட்டுமே பெற்றதாயினும் மாடு தன் கவனத்தை தன்னை செலுத்துபவன் மீதே கொண்டு அதே போக்கில் கவனச் சிதறல் இல்லாது பயணிக்கும்.; ஆனால் ஆறறிவு பெற்றிருந்தும் மனிதர்கள் அவ்வாறு அறிய இயலாதவர்கள்; முற்பிறவியில் செய்த நல்ல மற்றும் தீய செயல்களின் விளைவே இப்பிறவி சார்ந்த கர்மங்கள் என்பதை மறந்து நரகம் என்றும், சொர்கம் என்றும் வீண் பேச்சுப் பேசி வாழ்வைக் கழித்திடுவார்கள். கண்களைக் கவறும் நாட்டியம் போலான நடை உடை பாவனைகளைக் கொண்ட பெண்களைத் தங்கள் சகோதரிகள் (தந்தை இனம்) என எண்ணவே தோணாது வாழ்வார். வெளியில் அழகாகவும் பொருள் விடமாகவும் பேசும் நங்கையர்களின் மேலேயே கவனம் செலுத்தி, சிற்றின்பங்களின் பால் கொண்ட விருப்பம் துறந்து உடலின் மேல்தளமான சகஸ்ராரத்தில் அணையா விளக்காய் கனன்று கொண்டிருக்கும் கனலில் சேர்வதற்குத் தயங்குகிறார்கள்.
விளக்கஉரை
மனிதகுலத்தின் மேலான தாக்கத்தை வெளிப்படுத்தும் அகத்தியப் பெருமானின் பாடல்.
தந்தை இனம் மட்டுமே சகோதரத்துவதை ஏற்படுத்தும்; உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகவே எண்ணுதல் தம்மை மேம்பட்ட நிலைக்கு அழைத்துச் செல்லும் முக்கிய இறை வழிகளில் ஒன்று. ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ எனும் வரிகளுடன் ‘அரிய தந்தை’ எனும் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
தன்னில் இருந்து மனித குலம் மீது எவ்வகையிலும் கடும் சொல் விழக் கூடாது என்பதற்காக ‘ஆடுகின்ற தேவதைகள்’ எனும் பதத்தை பயன்படுத்தி இருக்கிறார்.
மதனா அண்ணா அவர்களுக்கு நன்றி.
சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.