பாடல்
வீடென்ற வீடகத்தி னுண்மை காண
விளம்பிடுவேன் வெட்டவெளி யாகத்தானே
ஆடென்ற அரனவருஞ் சடா பாரத்தில்
அம்பிகையைச் சுமந்த வகை யறிந்து கொள்வீர்
நாடென்ற பிரமாவும் நாவிற் பெண்ணை
நயந்து வைத்தும் நானிலத்தில் நயமுற்றெய்தார்
சேடனெற்ற விட்ணுவுந் தன் னெஞ்சிற் றானே
சித்தமுடன் ஓர் மாதை வைத்திட்டாரே
சுப்ரமணியர் ஞானம்
பதவுரை
வீடு என்கின்ற உடம்பில் இருந்து முத்தியுலகத்தில் புகுவதாகிய அக வீட்டில் உண்மையாய் காணும் வழியையும், அகத்தினுள் புகுந்திடும் சூட்சமத்தை வெளிப்படையாக கூறுகிறேன். நடனத்தை பிரதானமாக உடைய சிவபெருமான் தன் தலை முடியில் கங்கையும், தன் உடம்பில் பாதி அம்பிகையையும் சுமந்து கொண்டு இருக்கிறார்; வினைகளை ஆராய்ந்து அதன் வழி உயிர்களைப் படைக்கும் பிரம்மாவும் தன் நாவில் சரஸ்வதியை விருப்பமுடன் வைத்தே இந்த நானிலத்தை படைக்கிறார்; இளமை உடையவனானவனும், பெரியவனானவனும், கடவுளானவனும் ஆன விஷ்ணு தன் மார்பில் மகாலெட்சுமி ஆகிய வைத்திருக்கிறார்; இவர்கள் பெண் சக்தி துணை இல்லாமல் எதனையும் அடைய முடியாது என்று மூவரும் உணர்த்துகிறார்கள்; இதை உணர்ந்து இல்லற தர்மத்தில் இருந்துகொண்டே இறைநிலையை அடைய உண்மையில் தியானம் செய்வீர்.
விளக்க உரை
- சிவசக்தி ரூபகத்தை தன்னுள் காண வலியுறுத்துதல்.
- சேடன் – ஆதிசேடன், நாகலோகவாசி,, நெசவுச்சாதியார், அடிமைக்காரன், கட்டிளமையோன், பெரியோன், தோழன், காதலுக்குத் துணைபுரிபவன், கடவுள்
- சித்தர் பாடல் என்பதால், பல சூட்சங்கள் அடங்கியது என்பதாலும், ஆதார சக்கரங்கள் முன்வைத்து உரைக்கப்படுவதாலும், பாடலின் கருத்துக்கள் மறை பொருளாக உரைக்கப்பட்டுள்ளன. மேலும் அறிய விருப்பம் உள்ளவர்கள் குரு முகமாக பெறுக.