அமுதமொழி – விளம்பி – மாசி – 23 (2019)

பாடல்

ஆச்சப்பா உருவாகித் திருவு மாகி
     அண்டசரா சரங்கள் எல்லாம் நிறைந்து நின்றேன்
பூச்சப்பா மனமாகி ஒன்ற தாகிப்
     புவிதனிலே மதிதேய்ந்து ரவியிற் கூடி
வாச்சப்பா வாசியென்ற மயிலி னாலே
     வஸ்தான வஸ்தாகி மேலே நின்றேன்
மூச்சப்பா மூச்சற்ற இடமும் கண்டேன்
     முருகன் என்றும் எந்தனுக்குப் பேருமாச்சே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துமுருகன் தன் பெயர் காரணத்தை கூறி உருவம் உடையவராகவும், அண்டசராசங்களாகவும் நிறைந்து நின்றதை கூறிய பாடல்.

பதவுரை

சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படுவதும், பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதானதும், தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் ஆனதுமான உருவ வடிவம் கொண்டும், மதிப்பிற்குரியதும், மேன்மை உடையதும், சிறப்புடையதும், தெய்வத்தன்மை உடையதுமான திரு எனும் படியும், பஞ்ச பூதங்களின் வடிவமாகவும், அனைத்தும் ஈசன் வடிவமாகவும் இருக்கும் அண்ட சராசரங்கள் எல்லாமும் நீக்கமற நிறைந்து நின்றேன்; அந்தக்கரணங்களில் முதன்மையான மனம் ஆகி, அதனால் குறிக்கப்பெறும் மெய்பொருளான ஒரு பொருளாகி இந்த புவிதனில் ஆணவ, மாயை, கன்மங்கள் ஆகிய இருள் மறைந்து, பேரொளி கூடியது போல், தயாவடிவாய் மோக மதங்கள், தத்துவங்கள் நஷ்டம் ஆகுமாறு, நாசம் செய்து,  அவற்றின் அக்கிரமம், அதிக்கிரமம் கெட்டு கிரம மாத்திரம் கொண்டு, பூர்வ வாசனாதிகள் பல வண்ணமாய் விரிந்து ஆடும் மயில் மீது ஏறி அசைய ஒட்டாது மத்தியில் வாசியினைப் பற்றி ஏறி, மூச்சற்ற இடம் கண்டதால் எனக்கு  இளமை உடையவன், அழகியோன், கடவுள் தன்மை உடையோன் எனும் முருகன்  என்று பெயரானது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும்குருவருளால் காட்டப் பெற்றாலும் வினையின் காரணமாக உணர்தலில்எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்நிறை எனில் குருவருள்)

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply