காரண னாகித் தானே கருணையால் எவையும் நல்கி ஆருயிர் முழுது மேவி அனைத்தையும் இயற்றி நிற்கும் பூரண முதல்வன் மைந்தன் போதகம் அளித்து மாற்றிச் சூரனை மயக்கஞ் செய்யுஞ் சூழ்ச்சியோ அரிய தன்றே
கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து – சிவனின் எண் குணங்களில் சிலவற்றை எடுத்துக் கூறி அவனின் குமாரரான நீ மயக்கம் செய்தல் ஆகாது என பழிப்பது போல் புகழும் பாடல்.
பதவுரை
இந்த உலகம், உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் காரணமாக இருப்பவனும், பிறர் தூண்டுதல் இன்றி தன்னுடைய கருணையால் அனைத்தையும் கொடுத்து, மிகவும் நேசத்துக்கு உரிய அனைத்து உயிர்கள் இடத்திலும் பொருந்தி நின்று அனைத்தையும் சிருட்டித்தலை செய்பவன் ஆனவனும், முழுமையானதாகிய பூரணத்துவத்துடன் இருப்பவனுமான சிவபெருமானின் குமாரன் ஆகிய முருகப் பெருமான அறிவுரை கூறி அசுர குணங்களை மாற்றி, சூரனை மயக்கம் செய்யும் சூழ்ச்சி மிகவும் அரிதானது.
கருத்து – குரு இல்லாமல் வித்தைகளை கற்க இயலாது என்பதை கூறும் பாடல்.
பதவுரை
நடத்த இயலாதவைகள் என்று கூறத் தக்கதான செல்வம் இல்லாமல் வாழ்வினை நடத்துதல், மதி நுணுக்கங்கள் அறியாமல் வாணிபம் செய்யும் திறமை, செங்கோல் இல்லாமல் நல்ல நாட்டினை வழி நடத்துதல் போன்றவைகளை அவைகள் இல்லாமல் கூட செயல்படுத்த இயலும். ஆனால் குரு இல்லாமல் வித்தைகளை கற்பது, குணமில்லாத பெண்ணோடு வாழ்வது, விருந்து வராத வீட்டில் வாழ்வது ஆகியவைகள் விவசாயத்திற்கு உதவா நிலம் போன்றது ஆகும்.
கருத்து – புவனங்களும், அண்டங்களும், புவனியில் இருக்கும் தீர்த்தங்களும், ஏழுகோடி மகா மந்திரங்களும், ஒன்பது கோடி சித்தர்களும், அனைத்து தேவாலயங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் முருகன் உள்ளே அடக்கம் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
பக்தர்களை பாதுகாக்கவும் அவர்களை ஆதிக்கம் செய்யவும் வள்ளி தெய்வானையுடன் வருபவனே, தாமரை மலர் மீது வீற்றிருக்கும் நான்முகன் ஆகிய பிரம்மாவிற்கு அருளுபவனும், இனிய குணம் கொண்டவனும், உண்மையைப் பேசுபவனுமான கோபாலனின் மருமகனே, சரவண முருகனே! இந்த தரணியில் இருப்பதாக கூறிப்படும் அறுபத்து அறுகோடி தீர்த்தங்களும் சரவணத்துள் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; மெய்யறிவினைத் தரத்தக்கதும், பிறவா நிலையை ஏற்படுத்தும் ஆனதும், எண்ணிக்கையில் கூறும்போது ஏழுகோடி மகா மந்திரங்கள் ஆனவைகள் சடாசர மந்திரத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; மிகுந்த விரத்தினை உடையவர்கள் ஆன ஒன்பது கோடி சித்தர்களும் உன்னுடைய சுபப் பார்வை தனில் பணிவுடன் அடங்கி இருக்கின்றனர்; மேலானவைகள் என்று எந்த எந்த கோயில்கள் குறிப்பிடப்படுகின்றனவோ அவைகள் எல்லாம் உன்னுடைய படை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய வீடுகளில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; ஆதித்தியனை முதலாவதாக கொண்ட படைக்கப்பட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும்* உன்னுடைய இருதய கமலத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றனர்; பூமியை முன்வைத்து மேல் ஏழும், கீழ் ஏழும் இருக்கும் புவனம் முதல் அண்டங்கள் பலவும் உன்னிடத்தில் நிலைபெற்று இருக்கின்றன.
விளக்கஉரை
சித்தர்களுக்கு தலைவனாகவும், ஆதி அந்தம் அற்றவனாகவும் இருப்பதால் உடலினை முன்வைத்து ஆறு ஆதாரங்களும் தலைவன் என்று யோக மரபின் உரைப்பது உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – பலவிதமான துன்பங்களுக்கு எதிர்ப்புக் கட்டு (சத்ருசம்ஹாரம்) வராகி அம்மனே என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
புது மலரில் பெருகிய தேனைப் போல இனிமையான வாராகி தேவியை மனதில் இருத்தி, வாழ்த்தி வழிபாடு செய்யாததால் பலவகையிலும் அழிவு ஏற்பட்டு மரணத்திற்கு நிகரான அளவில் நாசம் அனுபவிப்பவித்தல், நாசத்தின் காரணமாக ஏற்படும் இழப்பு, பயம், துன்பம், கவலை, அவமானம் என்று நடுங்குதல், நமனாகிய எமன் தனது கயிற்றினை வீசும் போது அது பற்றி கவலைப்படுதல், இகழ்ந்து வையப்படுதல், களங்கம் ஏற்பட்டு தாழ்வு கொண்டு அவமானப்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றது.
ஆச்சப்பா உட்கருவி முப்பத்தாறும் அப்பே சிவத்தினுட கூறேயாச்சு நீச்சப்பா புறக்கருவி அறுவதுதான் நிசமான சக்தியுட கூறேயாச்சு பேச்சப்பா உள்வெளியும் நன்றாய்ப் பார்த்து பெருமையுடன் ஆதார நிலையுங் கண்டு காச்சப்பா கருவி கரணாதி என்று காடான தத்துவத்தைக் கண்டு தேரே
சௌமிய சாகரம் – அகத்தியர்
கருத்து – 96 தத்துவங்கள் சிவ சக்தி ரூபமாக இருப்பதை அகத்தியர் புலத்தியருக்குக் கூறும் பாடல்.
பதவுரை
உலகின் தோற்றம், பிரபஞ்சத்தின் அமைப்பு என்பவற்றை விளக்கும் மெய்ஞ்ஞானத்தின் எண்ணக் கருக்களில் சைவநெறியினை முன்னிறுத்தி கூறப்படும் தத்துவங்கள் உணர்த்துவதாகிய 96 தத்துவங்களில் அககருவிகளான 36 தத்துவங்கள் சிவனின் கூறுகள் ஆகும்; செயல்பட்டு அறிவை ஏற்படுத்தும் புறக்கருவிகளான 60 தத்துவங்கள் உண்மையில் செயல்படும் சக்தியின் கூறுகள் ஆகும்; ஆகாயம் என்பதும், பெருவெளி என்பதும் ஆன ஆதார நிலை ஆகிய இந்த சூட்சுமத்தை குருவின் மூலமாக நன்கு அறிந்தும் உணர்ந்தும் கருவிகளையும் கரணங்கள் எனப்படும் மனத்தில் மாறுபாடுகளையும் பக்குவப்படுமாறு செய்ய வேண்டும்; உடல் கருவிகளும் உயிர் கருவிகளும் கொண்டு மேலே கூறப்பட்டவாறு பக்குவப்படுமாறு செய்தால் காடு போல் வழிதவறி உலகில் உழலச் செய்யும் தத்துவங்களை அறிந்து அதில் இருந்து தேறலாம்.
விளக்கஉரை
சாங்கிய யோகத்தில் 24 தத்துவங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆன்றோர் அறிந்து உய்க.
விரித்த பல்கதிர் கொள்சூலம், வெடிபடு தமரு கங்கை தரித்ததோர் கோல கால பைரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒன்டிரு மணிவாய் விள்ள சிறிதருள் செய்தோர் சேரிச் செந்நிறச் செல்வனாரே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – சிவபெருமான் கால பைரவர் வடிவம் தாங்கி வந்ததை குறிப்பிடும் பாடல்.
பதவுரை
திருச்சேறை எனும் திருத்தலத்தில் செம்மை நிறம் கொண்டு அதை இருப்பிடமாக உடையவனாக சிவபெருமான், விரிந்த சூரியனை போன்று பல கதிர்களை கொண்ட ஒளியுடைய சூலம், இடி முழக்கம் போல சப்தம் எழுப்புவதான டமருகம் (உடுக்கை), தலையில் கங்கை ஆகியவை கொண்டு அழகிய கால பைரவர் வடிவம் தரித்து வேழ வடிவில் வந்த அசுரனின் தோலை உரித்தார்; அதை கண்டு அஞ்சிய உமையவளை நோக்கி தனது மணிவாய் மலர்ந்து தோன்றுமாறு அட்டகாசமாய் சிரித்தார்.
விளக்கஉரை
தேவாரத்தில் கால பைரவர் பெயர் வரும் ஓரே பாடல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உய்க.
விள்ளுதல் – மலர்தல்; உடைதல்; வெடித்தல்; பிளத்தல்; பகைத்தல்; மாறுபடுதல்; தெளிவாதல்; நீங்குதல்; சொல்லுதல்; வெளிப்படுத்துதல்; வாய் முதலியன திறத்தல்; புதிர்முதலியனவிடுத்தல்
வெடி – துப்பாக்கி அல்லது குண்டு வெடி;வேட்டு, ஓசை, இடி, கேடு, அச்சம், நிமிர்ந்தெழுகை, தாவுகை, நறும்புகை, பட்டாசு, கள்
கருத்து – சூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமானின் தோற்றப் பொலிவை உரைத்து இது பல காலம் செய்த தவப்பயன் என்று கூறும் பாடல்.
பதவுரை
நான், எனது எனும் அகங்காரம் கொண்டிருந்த எனது அகந்தை போனது; அதன் காரணமாக என்னுள் பேரறிவாகிய ஞானம் புகுந்தது; வலப்பக்கத்தில் இருக்கக்கூடிய தூய்மையான தோளும், வலது கண்ணும் துடித்தன; புவனம் முழுமைக்கும் சஞ்சரிக்கும் பொருள்களின் மாயைத் தன்மை நீங்கி தேவர்களுக்கு எல்லாம் நாயகன் ஆன நாயகன் வடிவம் கண்டேன்; இது பலகாலம் நல்ல தவம் செய்து அதனால் பெறுவதற்குரிய நற்தவத்தின் பயன் அல்லவா இது? என்று சூரபத்மன் உரைத்தான்
விளக்கஉரை
யுத்த காண்டம் , சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
எம்பெருமான் தன்னுடைய பேரெழில் கொண்ட திருக்கோலத்தினைக் காட்டிக்கொண்டு முன்வந்து நிற்கும் பாக்கியம் அவனுடைய பகைவனாகிய, மாபாவியாகிய எனக்கும் கிடைத்ததே” என்று இறைவனுடைய கருணையை எண்ணி ஆச்சரியம் கொள்கிறான்.
போதம் – ஞானம், அறிவு
மேய்தல் – விலங்கு முதலியன உணவுகொள்ளுதல், பருகுதல், கெடுத்தல், அபகரித்தனுபவித்தல், மேற்போதல், சஞ்சரித்தல், விடனாய்த் திரிதல்
கருத்து – திருஒற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடை நாயகியின் பெருமைகளை கூற அவளே அருள் புரிய வேண்டும் என்று கூறும் பாடல்.
பதவுரை
திருஒற்றியூரில் விளக்கும் தூயவரான சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் மயிலே,வடிவுடை மாணிக்கமே, பக்தர்கள் உள்ளத்தில் என்னும் போற்றுதலுக்கு உரித்தானதான அழகானக் கோயிலில் வாழ்கின்ற மேலான பரதேவதையே, தூயதானதும், மெய்ஞானமானதும் ஆன அறிவொளிப் பிழம்பே, மெய்ஞான அறிவினால் பெறப்படுவதான சுகவாழ்வின் ஆனந்தமே! தினமும் உன் பெருமை மிக்க புகழைச் சொல்ல எனக்கு அருள் புரிய வேண்டும்.
கருத்து – வினை பற்றி நின்று, அடிமையாகிய யான் பிழை செய்தால் அதனைப் பொறாது ஒழிதலும், முறையோ என்று அழைத்தால் கேளா தொழிதலும் தலைவனாகிய உனக்குப் பொருந்துவனவோ என்று கூறும் பாடல்.
பதவுரை
உடையவனே, உமை அம்மையின் தலைவனே, என்னை என்றும் ஆள்பவனே, பிறை சேர்ந்த அணிந்த சடையை உடையவனே, தலைவனே! பழையதும், கொடியதும் ஆன வினையாகிய நோய் என்னை வருத்தும்போது காப்பதற்கு உரித்தானவன்; அவ்வாறான கொடுமையான வினையை உடையேன் ஆகிய நான் முயற்சி செய்து அந்த வினைகளை விலக்கி அதன் பொருட்டு நன்மை பெற இயலுமோ? நான் வினைகளுக்கு உட்பட்டு பிழை செய்தால் அதனை மன்னித்துக் காக்க வேண்டாமோ? நீ இவ்வாறு செய்வது முறையோ என்று உன்னை ஓலமிட்டு அழைத்தால் உன் அடியானாகிய எனக்கு, நீ அருள் செய்யாது போவது தகுதியோ?
விளக்கஉரை
குழைத்தல் – குழையச் செய்தல், ஒன்றாய்க் கலத்தல், தழையச் செய்தல், திரட்டுதல், இளகுவித்தல், வளைத்தல், அசைத்தல்
குழைத்தால் – உன் உள்ளம் குழையுமாறு இரந்து வேண்டுதல்
காவாய் – வந்து சாராதபடி தடுத்தருள்
உறுதி உண்டோ – உனக்காயினும், எனக்காயினும் யாதேனும் நன்மை உண்டோ
கருத்து – ஊழ்வினை அறுத்தலேயன்றி, சிவஞானத்தை மிகுவிக்கும் நல்வினைகள் விளையா என்பதையும் அதனை அளிப்பர் திருப்பேரெயில் தலத்து இறைவர் என்பதையும் விளக்கும் பாடல்.
பதவுரை
திருப்பேரெயில் தலத்து இறைவர் மேருமலையை வில்லாக்கி முப்புரங்களை அழியச் செய்வார்; பல தீர்த்தங்களை உண்டாக்கி அளித்தும், அதில் தன் அன்பர்களை நீராடுமாறும் செய்பவர்; பல பத்தர்களின் ஊழ்வினைகளை அறுப்பது மட்டுமின்றி அவர்கள் நல்வினை பெறும்படியும் செய்பவர் ஆவார்.
விளக்கஉரை
சோழநாடு காவிரித் தென்கரையில் அமைந்திருக்கும் திருப்பேரெயில் எனும் திருத்தலம் பற்றி எழுதப்பட்டது. (தற்போதைய பெயர் – ஓகைப்பேரையூர், வங்காரப் பேரையூர்)
செறுத்தல் – அடக்குதல், தடுத்தல், நெருக்குதல், உள்ளடங்கச் செய்தல், நீர் முதலியன அடைத்தல், தூர்த்தல், சினத்தல், வெறுத்தல், வெல்லுதல், கொல்லுதல்
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச் சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவிஎங்கள் கருத்திற் பயிலும் வாராகி என் பஞ்சமி கண்சிவந்தாற் பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறிகாணும் பகைத்தவர்கே
வராகி மாலை
கருத்து – அம்மையின் படைத்தலைவிகளும் அம்மையே என்பதையும், அவளிடம் பக்தி கொண்டவர்களை தான் என்றும் விலக்கமாட்டாள் என்பதையும் விளக்கும் பாடல்.
பதவுரை
தேவர்கள் வேண்டிய படி அவர்களின் துன்பம் நீங்குவதன் பொருட்டு அவர்களுக்காக சென்று சிரித்தபடியே மூன்று கோட்டைகளை அழித்தவனின் இடபாகத்தில் அமர்ந்திருக்கும் தேவி ஆனவளும், பஞ்சமி திதிக்கு உரித்தானவளும் ஆன வாராகியின் வல்லமை புரியாமல், அவள் வணங்கும் பக்தர்களை வருத்தி பகைத்து கொண்டால் தன் பக்தனுக்கு தீங்கு இழைத்தவர்களை கண்டு தீப்பற்றி எரியும் நெருப்பானது எத்தனை வேகமா எரியுமோ அத்தனை வேகமாக பகைத்தவர்களை கண்சிவந்து வெட்டி வீழ்த்துவாள்.
கருத்து – தியான அனுபவங்களையும், அதன் சில பலன்களையும் கூறும் பாடல்.
பதவுரை
உரைத்த தீட்சை விதிகளின் படி மனோன்மணியான அன்னை மீது மனத்தைச் செலுத்தி சுவாசம் உள்ளடக்கி மனத்துள் அகபூசை செய்பவர்களுக்குக் கிட்டும் பல்வேறு அனுபவங்களை போக நாதர் இப்பாடல் மூலம் அறிவிக்கிறார். அவ்வித தியானம் கை கூடுகிறது என்பதற்கு அடையாளங்களாக சங்க நாதம் ஓங்காரமாக காதில் ஒலிக்கும். நம்முள் அன்னை மனோன்மணியானவள் நடமிடுவதால் உருவாகும் சிலம்பொலி ஓசை கேட்க இயலும். அம்பரம், சிதம்பரம், ஆகாயம், அண்டவுச்சி, புருவ மத்தி, சிற்றம்பலம் எனப் பல்வேறு குறிப்பிடூகளால் உணர்த்தப் படும் மெய்ப்பொருளின் இருப்பிடத்தையும், அவ்விடத்தே அம்மெய்ப்பரம் பொருள் நிகழ்த்தும் திரு நடனத்தை உணரும் ஆற்றலும் கிட்டச்செய்யும். உண்மை, அறிவு, ஆனந்தம் எனப்படும் சச்சித்தானந்தம் என்ற பேரின்ப நிலை இடையறாது கிடைக்கப்பெறும். இவ்வாறு அனுதினமும் தியானம் தொடருபவர்களுக்கு அம்மையப்பர் அருளால் தச வாயுக்களில் பத்தாவதான உயர்ந்த தனஞ்செயன் எனும் உயிர் நிலைதனை தன் மனத்தால் அடக்கும் பேராற்றல் அதாவது சாகா நிலை கிட்டும் என போக நாதர் அருளுகிறார். இவ்வாறான பயிற்சி விதிகளுக்கு உட்பட்டு ஒரு தகுந்த குரு மூலம் மட்டுமே அறியப் பட வேண்டியதாகும்.
விளக்கஉரை
பத்ததி – வரிசை, ஒழுங்கு, ஆகமக் கிரியைகளுக்கு நெறி காட்டும் நூல். அகோரசிவாசாரியர் பத்ததி, வழி, சொற்பொருள்
பதவுரை எழுதித் தந்த மதனா அண்ணா அவர்களுக்கு நன்றிகள்.
வண்டுகள் ஆலாபனஞ் செய்யக்கூடியதும், அரும்புகள் மொட்டவிழ்ந்து தேன் மழை போன்று பொழியக்கூடியதும், மடல் விரிந்து பெரியதாக இருப்பதும், பொன் நிறம் கொண்டதும், மணம் வீசுவதுமான கொன்றைப் பூவினை சடையில் உடையவனே, பழைய போர் கருவி ஆனதும் தண்டம் எனப்படுவதும் ஆன தண்டாயுதம், கயிறு, சூலம், கோபத்தினால் புகை உமிழ்வதைப் போன்ற நெருப்பினை உமிழும் கண்கள், வெளியே தெரியுமாறு இருக்கும் வளைந்த தந்தம் எனப்படுவதான பல், சிவந்ததான திருவடி, பாறை ஒத்த கரிய நிறம் ஆகிய வடிவங்களோடு இருப்பவனே, காண்பவர் உளமும், கண்ணும் கவரும் படியாகவும், மிகுந்த செல்வங்களை கொண்ட பெண்கள் நெருங்கும் படியாக இருப்பதும், மிகுந்த அலைகள் உடையதும் ஆன கடவை எனும் அந்த பதியாய் இருப்பவனே, காலனை வருந்தச் செய்தவனும் ஆனவனே, இறப்பு காலத்தில் வரக்கூடிய காலனாகிய எமனைக் கண்டு உள்ளம் மயங்கி, தான் கற்றறிந்த அறிவு அழிந்து, இரு விழிகளும் பார்க்க இயலாமல் பஞ்சு அடைத்தது போன்ற நிலை கண்டு, நீர் இல்லாம வாய் உலர்ந்து, அதனால் தளர்ந்து மனமானது குற்றம் கொண்டு திடுக்கிடும் போது உடனாகிய அம்பிகையுடன் வருவாய்.
தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம் நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – திரிபுரை ஒன்றொடு ஒன்று ஒவ்வாத நிலைகள் பலவற்றையும் உடையவள் எனக் கூறும் பாடல்.
பதவுரை
என்னை வழி நடத்துபவள் என்று முன்னால் அழைக்கப்பட்ட தலைவியான திரிபுரை பால் சுரந்து விம்ம நிற்றலால் கூடிய அருள் பெருக்கு, இளமையாக இருத்தல் ஆகிய காரணங்களால் கொங்கைகள் விம்ம பேரழகுடன் நிற்பவள்; கலைகள் அனைத்தையும் தனதாக்கிக் தன்னுள் தானே அடக்கி நிற்பவள்; பற்றற்று இருப்பவள். இவ்வாறான அவள் என் மனம் நிலைத்தன்மை பெறுவதற்காக என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.
விளக்கஉரை
கலை – நூல்களை அடக்கி நிற்றல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரனை முன்வைத்து 16 கலைகளை உடையவள் என்று சாக்தத்தில் சில இடங்களில் கூறுப்படுவதாலும், அனைத்து கலை வடிவங்களுக்கும் முன்மாதிரியாக இருப்பதாலும் ‘நூல்களை அடக்கி நிற்றல்’ எனும் பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
ஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும் பெருகுதவம் சித்தியெல்லாம் பெற்றும் – குருவருளால் வைத்த படியிருக்க மாட்டாத மாந்தர்க்குச் சித்த சல னம்மாந் தினம்
சிவபோகசாரம் – ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்
கருத்து – குருவழி நடக்க இயலா மாந்தர்கள் கரை ஏறுதல் கடினம் என்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
இந்து சமயத்தின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதும், சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்ற ஒருகோடி ஆகமங்களால் உணர்த்தப்பட்ட எல்லாவற்றையும் உணர்ந்தும், பெருகக் கூடியதான தவம் செய்து சித்தி எல்லாம் பெற்றும் குருவருள் வாய்க்கபெற்றும் அவர் கூறியபடி நடக்க இயலாத மாந்தர்களுக்கு அவர்களுடைய சித்தம் தினம் தினம் சலனம் கொள்ளும்.
வைத்தநெறி நூலும் வகுத்துரைத்துப் – பத்தர் குருலிங்க முண்மையெனக் கூறிநீ டின்பம் தருமன்பை யென்சொல்வேன் தான் பொன்னாடர் இந்திரனும் பூமகனும் மாதவனும் எந்நாடும் எந்நாளு மேநாடித் – துன்னாத வேத முடிவின் விளங்கும் ஒளிஉயிரின் போத முடிவில் பொருந்துமொளி முதலாக நின்று முகிழ்த்த உலகின் விதமான எல்லாம் விரித்தும் – திரமாக ஊர்பேர் உருவமிவை ஒன்றுமிலன் என்றாலும்
பஞ்சாக்கரப் பஃறொடை – பேரூர் வேலப்ப தேசிகர்
கருத்து – சிவனின் பெருமைகளை கூறி அவன் அருளும் பேரின்பத்தையும் அதற்கு காரணமான அன்பையும் உரைக்க இயலாது என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
பொன்போன்ற நாட்டினை ஆளும் இந்திரனும், மலர்மேல் வீற்றிருக்கும் ப்ரம்மாவும், மாதவனும் உன்னை அறிவதற்காக நாள், இடம் என்று தேடியும் உன்னை அறிய இயலவில்லை; செறுதலை உடைய வேதத்தின் முடிவாக விளங்கக்கூடியதும் உயிரின் ஒளி போன்றதும், ஞானத்தின் முடிவாக நிற்கும் ஒளிவடிவாகவும் மொட்டு போன்றதும் ஆன இந்த உலகில் விதம் விதமாக விரிந்து எங்கும் நின்றும் நிலையான ஊர் பேர் இல்லாமலும், உருவம் இல்லாமலும் எதுவும் நீ இல்லை எனும் படியாக இருந்தாலும் முடிவானது என்பதைக் கூறும் சைவ சித்தாந்த நெறி நூலும், அதன் பொருளை உரைத்து இவன் பக்தன் என்று குருலிங்க உண்மையை கூறி நிலைத்த இன்பத்தை தரும் உன் அன்பை என்ன என்று சொல்வேன் யான்?
கருத்து – உயிர்களின் உடலுக்கும் மெய்ஞானத் தன்மைக்கும் இருக்கும் தொடர்பை விளக்கும் பாடல்.
பதவுரை
தனு எனப்படுவதான இந்த உடலில் உயிர்கள் மெய்ஞானம் ஆகிய தன்னிறைவை அடைந்தப்பின் நில்லாது; உடலை விட்டு உயிர் துண்டித்தல் என்பதைத் தாண்டி உயிர்களுக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை என்பதைக் காட்டுவதால் ஆவி எனும் உயிர் என்பது நிரந்தரமானது இல்லை என்பதை காணலாம்.
விளக்கஉரை
தனு – உடல், வில், தனுராசி, சிறுமை, நான்கு கரங்கொண்ட நீட்டலளவை, எருத்தின் முக்காரம், மார்கழி மாதம், ஊன்றிப் பேசுகை, தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி
கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய் குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய் மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய் மைந்தனே இவளை நீபூசை பண்ணத் தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய் திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய் அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே
சட்டைமுனி ஞானம் – சட்டைமுனி
கருத்து – வாலை, திரிபுரை, புவனேஸ்வரி ஆகியவர்களின் மூல மந்திர எழுத்துக்களின் எண்ணிக்கையும், உபதேச முறைகளையும் கூறும் பாடல்.
பதவுரை
யாம் முன்னுரைத்த வாலையின் மூன்றெழுத்து மந்திரத்தை உரைத்த குறிப்பறிந்து அதில் கூறப்பட்டவாறு பூசை நிகழ்த்து. அதன் பின் திரிபுரையின் எட்டெழுத்து மந்திரம் அறிந்து அவளை பூசை செய்வாயாக. இப்பூசனைகளை நீ சரியான முறையில் நிகழ்த்துவதால் புவனேஸ்வரியின் மூலமது கிட்டும். அவளை முறைப்படி பூசை செய்து அதன் தொடர்பாக ஆற்றுப்படுத்தலை தரும் பார்வதி என்றும் காளி என்றும் அழைக்கப்படும் ஆறு எழுத்துக்கு உரித்தானவள் ஆகிய யாமளையயின் திருவடிகளைப் போற்றி பூசை செய்வாயாக.
விளக்கஉரை
வாலையின் மூன்றெழுத்து அகார , உகார , மகாரத்தின் குறி எது என்றுணர்ந்து பூசை செய்வாய் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. எல்லா தெய்வங்களுக்கும் தனித்தனி பீஜங்களும் அவை சார்ந்த எழுத்துக்களும் இருப்பதால் இக்கருத்து விலக்கப்படுகிறது.
வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை வாய் கொண்டு சொல்பவர் யார் காணும் மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திமமுங்கூட்டி விரைந்து பாரடி ஞானப் பெண்ணே!
வாலைக் கும்மி – எனும் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது
திரிபுரையின் எட்டெழுத்தை (தமிழில் எட்டுக்கு அ என்பதே குறி) என்றும், எட்டும் இரண்டுமாகிய ( இரண்டுக்கு தமிழில் உ என்பதே குறி ) இதை உணர்ந்தால் வாலைத்தாயின் இருப்பிடம் தெரியும் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டவாறே திரிபுரைக்கும் தனியே பீஜங்கள் இருப்பதாலும் குரு முகமாக பெறவேண்டி இருப்பதாலும் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
யாமளை – பார்வதி, காளி
பதவுரை எழுத உதவி செய்த மதனா அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – கருவூர்த் தேவர்
கருத்து – அன்பர்களின் அக அனுபவங்களையும் பெரும்பற்றப் புலியூரின் பெருமைகளையும் கூறும் பாடல்.
பதவுரை
மேலான அன்பினால் கண்களில் பனித்துளிர்ப்பது போல் கண்ணீர் அரும்ப, கைகள் குவித்து, ‘எனக்குப் பற்றுக் கோடு ஆனவனே! ஓலம்’ என்று கதறி, எல்லா எலும்புகளும் அன்பினால் உருகும் அடியார்களுடைய கூட்டத்தில் அடியேனையும் இணைத்துக் கொள்ளும் எனும்படியான ஈசனுடைய திருக்கோயில் எதுவெனில் தேன் உண்டு தெளிந்த வண்டுகள் பலப்பல பண்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருப்பதானதும் குளிர்ந்த மலர்களைப் பரப்பிய மேலிடத்தில் அரும்பும் சண்பகம் நிறைந்த சோலைகளை உடையதும் ஆன பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருவளர் திருச்சிற்றம்பலமே ஆகும்.