அமுதமொழி – விகாரி – ஆடி – 2 (2019)


பாடல்

தியானித்து உள்ளடக்கி பூசைசெய்வார்
     செயகண்டி சங்கோசை காதில் கேட்கும்
தியானிப்பார் சிலம்பொலியின் ஒசைகேட்கும்
     சிதம்பரமாம் நடனத்தின் செய்துங்காணும்
தியானிப்பார் சச்சிதானந்த வெள்ளம்
     திகட்டாமதுண்டிப்பார் தேவிமீவாள்
தியானிப்பார் அனுதினமும் சிவன்தேவி
     பத்ததில் திடமாகமனவிலங்கு மாட்டுவாரே

போகர் சப்த காண்டம் -7000 – போகர்

கருத்து – தியான அனுபவங்களையும், அதன் சில பலன்களையும் கூறும் பாடல்.

பதவுரை

உரைத்த தீட்சை விதிகளின் படி மனோன்மணியான அன்னை மீது மனத்தைச் செலுத்தி  சுவாசம் உள்ளடக்கி  மனத்துள் அகபூசை செய்பவர்களுக்குக் கிட்டும் பல்வேறு அனுபவங்களை போக நாதர் இப்பாடல் மூலம் அறிவிக்கிறார். அவ்வித தியானம் கை கூடுகிறது என்பதற்கு அடையாளங்களாக  சங்க நாதம் ஓங்காரமாக காதில் ஒலிக்கும்.  நம்முள் அன்னை மனோன்மணியானவள் நடமிடுவதால் உருவாகும் சிலம்பொலி ஓசை கேட்க இயலும்.  அம்பரம், சிதம்பரம், ஆகாயம், அண்டவுச்சி, புருவ மத்தி,  சிற்றம்பலம் எனப் பல்வேறு குறிப்பிடூகளால்  உணர்த்தப் படும் மெய்ப்பொருளின் இருப்பிடத்தையும், அவ்விடத்தே அம்மெய்ப்பரம் பொருள் நிகழ்த்தும் திரு நடனத்தை உணரும் ஆற்றலும் கிட்டச்செய்யும். உண்மை, அறிவு, ஆனந்தம் எனப்படும் சச்சித்தானந்தம் என்ற பேரின்ப நிலை  இடையறாது கிடைக்கப்பெறும். இவ்வாறு அனுதினமும் தியானம் தொடருபவர்களுக்கு  அம்மையப்பர் அருளால் தச வாயுக்களில் பத்தாவதான உயர்ந்த தனஞ்செயன் எனும் உயிர் நிலைதனை தன் மனத்தால் அடக்கும் பேராற்றல் அதாவது சாகா நிலை கிட்டும் என போக நாதர் அருளுகிறார். இவ்வாறான பயிற்சி விதிகளுக்கு உட்பட்டு ஒரு தகுந்த  குரு மூலம் மட்டுமே அறியப் பட வேண்டியதாகும்.

விளக்க உரை

  • பத்ததி – வரிசை, ஒழுங்கு, ஆகமக் கிரியைகளுக்கு நெறி காட்டும் நூல். அகோரசிவாசாரியர் பத்ததி, வழி, சொற்பொருள்

 

பதவுரை எழுதித் தந்த மதனா அண்ணா அவர்களுக்கு நன்றிகள்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *