அமுதமொழி – விகாரி – ஆனி – 26 (2019)


பாடல்

கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்
   குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
   மைந்தனே இவளை நீபூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
   திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
   அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே

சட்டைமுனி ஞானம் – சட்டைமுனி

கருத்து – வாலை, திரிபுரை, புவனேஸ்வரி ஆகியவர்களின் மூல மந்திர எழுத்துக்களின் எண்ணிக்கையும், உபதேச முறைகளையும் கூறும் பாடல்.

பதவுரை

யாம் முன்னுரைத்த வாலையின் மூன்றெழுத்து மந்திரத்தை உரைத்த குறிப்பறிந்து அதில் கூறப்பட்டவாறு பூசை நிகழ்த்து. அதன் பின் திரிபுரையின் எட்டெழுத்து மந்திரம் அறிந்து அவளை பூசை செய்வாயாக. இப்பூசனைகளை நீ சரியான முறையில் நிகழ்த்துவதால் புவனேஸ்வரியின் மூலமது கிட்டும். அவளை முறைப்படி பூசை செய்து அதன் தொடர்பாக ஆற்றுப்படுத்தலை தரும் பார்வதி என்றும் காளி என்றும் அழைக்கப்படும் ஆறு எழுத்துக்கு உரித்தானவள் ஆகிய யாமளையயின் திருவடிகளைப் போற்றி பூசை செய்வாயாக.

விளக்க உரை

  • வாலையின் மூன்றெழுத்து அகார , உகார , மகாரத்தின் குறி எது என்றுணர்ந்து பூசை செய்வாய் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. எல்லா தெய்வங்களுக்கும் தனித்தனி பீஜங்களும்  அவை சார்ந்த எழுத்துக்களும் இருப்பதால் இக்கருத்து விலக்கப்படுகிறது.

வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை
வாய் கொண்டு சொல்பவர் யார் காணும்
மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திமமுங்கூட்டி
விரைந்து பாரடி ஞானப் பெண்ணே!

வாலைக் கும்மி –   எனும் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது

  • திரிபுரையின் எட்டெழுத்தை (தமிழில் எட்டுக்கு அ என்பதே குறி) என்றும், எட்டும் இரண்டுமாகிய ( இரண்டுக்கு தமிழில் உ என்பதே குறி ) இதை உணர்ந்தால் வாலைத்தாயின் இருப்பிடம் தெரியும் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டவாறே திரிபுரைக்கும் தனியே பீஜங்கள் இருப்பதாலும் குரு முகமாக பெறவேண்டி இருப்பதாலும் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • யாமளை – பார்வதி, காளி

பதவுரை எழுத உதவி செய்த மதனா அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *