அமுதமொழி – விளம்பி – மாசி – 26 (2019)

பாடல்

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவா ரவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துபொய்யாக புகழ்பவருக்கும் அருளும் நீ, உண்மையாக இருக்கும் அடியவர்களை நினைவு கொள்ள வேண்டும் எனும் பொருள் பற்றியப் பாடல்.

பதவுரை

மை பொருந்திய பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே, கங்கையையும், பிறை சந்திரனையும் தனது திருமுடி மேல் வைத்துள்ள ஐயனே, செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே, திருக்கச்சூர் ஆலக் கோயிலில் எழுந்தருளும் பெருமானே! இழி நிலை மனிதர்களுக்கே  உரித்தானவாறு மனதில் அன்பு இன்றி, பலன் கருதி பொய்யாக உனை ஒருவர் புகழ்ந்தால் அதனையும் ஒரு பொருளாய் கொண்டு அவர்களுக்கு உண்மையாக அருள் செய்யும்  எங்கள் பெருமானே உன்னை உண்மையாகவே நினைக்கும் அடியவர்களை நினை.

விளக்க உரை

  • பொய்யே உன்னைப் புகழ்வார் –  அந்த நிலையில் இருந்தாலும் கூட என்பதே இதன் சிறப்பு.
  • சிவன் வேறு சக்தி வேறு என்ற பேதம் அறுபடுகிறது என்பதை கீழ்கண்ட இரு உதாரணங்களால் அறியலாம்.
  1. பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே
  2. செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே – வெண்மை நிறம் சிவனாரைக் குறிப்பதாகும். செம்மை நிறம் சக்தியை குறிப்பதாகும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 25 (2019)

பாடல்

நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்
   நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை
   என்னடி யானென்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன்
   நிரந்தர மாய்நின்ற
ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
   அதிசயங் கண்டாமே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துதுன்பம் மிகும்படியான வாழ்வில் இருந்து மீட்டு பழைய அடியார்களோடு தன்னையும் சேர்த்து அருளிய அதிசயத் திறம் பற்றி  உரைத்தப் பாடல்.

பதவுரை

உலகியலிலுக்கும், மெய் ஒழுக்கங்களுக்கும் பொதுவாய் இருக்கும் நீதிகளை இருப்பவனவற்றை நினையேன்; அவ்வாறு நினைப்பவர்களோடு இணக்கமாய் இருந்து ஒன்று சேரவும் மாட்டேன்; துன்பமே மிகும்படியாக ஆளாகிப் பிறந்து இறந்து நிலை கெடுமாறு சுற்றித் திரிவேன்; இப்படிப்பட்ட என்னையும்  என்றும் உள்ள பொருளாய் நிற்பவனும், அன்னையை தன் பாகத்தில் கொடுத்தவனும், கடவுளும் ஆன முதல்வன், தன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஒழுக்கத்தோடு சிறிதும் இயைபில்லாத என்னையும்,  ஒழுக்கம் மிக்கவர்களும், காலத்தினால் பழமையானவர்கள் ஆன தன் அடியவர் கூட்டத்தில் சேர்த்து ஆண்டு அருளித் தன் அடியாரோடு சேர்த்து வைத்த அதிசயத்தைக் கண்டோம்.

விளக்க உரை

  • உழலுதல் – அசைதல்; அலைதல்; சுழலுதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல்.
  • பரம்பரன் – முழுமுதற்கடவுள், கடவுள்; அப்பாட்டன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 23 (2019)

பாடல்

ஆச்சப்பா உருவாகித் திருவு மாகி
     அண்டசரா சரங்கள் எல்லாம் நிறைந்து நின்றேன்
பூச்சப்பா மனமாகி ஒன்ற தாகிப்
     புவிதனிலே மதிதேய்ந்து ரவியிற் கூடி
வாச்சப்பா வாசியென்ற மயிலி னாலே
     வஸ்தான வஸ்தாகி மேலே நின்றேன்
மூச்சப்பா மூச்சற்ற இடமும் கண்டேன்
     முருகன் என்றும் எந்தனுக்குப் பேருமாச்சே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துமுருகன் தன் பெயர் காரணத்தை கூறி உருவம் உடையவராகவும், அண்டசராசங்களாகவும் நிறைந்து நின்றதை கூறிய பாடல்.

பதவுரை

சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படுவதும், பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதானதும், தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் ஆனதுமான உருவ வடிவம் கொண்டும், மதிப்பிற்குரியதும், மேன்மை உடையதும், சிறப்புடையதும், தெய்வத்தன்மை உடையதுமான திரு எனும் படியும், பஞ்ச பூதங்களின் வடிவமாகவும், அனைத்தும் ஈசன் வடிவமாகவும் இருக்கும் அண்ட சராசரங்கள் எல்லாமும் நீக்கமற நிறைந்து நின்றேன்; அந்தக்கரணங்களில் முதன்மையான மனம் ஆகி, அதனால் குறிக்கப்பெறும் மெய்பொருளான ஒரு பொருளாகி இந்த புவிதனில் ஆணவ, மாயை, கன்மங்கள் ஆகிய இருள் மறைந்து, பேரொளி கூடியது போல், தயாவடிவாய் மோக மதங்கள், தத்துவங்கள் நஷ்டம் ஆகுமாறு, நாசம் செய்து,  அவற்றின் அக்கிரமம், அதிக்கிரமம் கெட்டு கிரம மாத்திரம் கொண்டு, பூர்வ வாசனாதிகள் பல வண்ணமாய் விரிந்து ஆடும் மயில் மீது ஏறி அசைய ஒட்டாது மத்தியில் வாசியினைப் பற்றி ஏறி, மூச்சற்ற இடம் கண்டதால் எனக்கு  இளமை உடையவன், அழகியோன், கடவுள் தன்மை உடையோன் எனும் முருகன்  என்று பெயரானது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும்குருவருளால் காட்டப் பெற்றாலும் வினையின் காரணமாக உணர்தலில்எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்நிறை எனில் குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 22 (2019)

பாடல்

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினாயி ரத்தொருவர் – பூத்தமலர்த்
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்
உண்டாயின் உண்டென் றறு

தனிப்பாடல்கள் – ஔவையார்

கருத்துமுனிவனாகும் வாய்ப்பு பற்றிய பாடல்.

பதவுரை

மின்னுதல் போன்று அறிவை வெளிப்படுத்தும் அவையில், நூறு பேரில் ஒருவர்  பேசக்கூடியவராகவும்,  ஆயிரம் பேரில் ஒருவர் புலவராகவும்,  பத்தாயிரம்  பேரில் ஒருவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவராகவும், நீர் தடாகங்களில் தாமரை மலர்கள் பூத்து தண்டை மறைப்பது போல் மதிப்பு உடையவராகவும், தெய்வத் தன்மை உடையவராகவும் கோடி பேரில் ஒருவர் மட்டுமே தாதா என்றைக்கப்படும் முனிவராகவும் இருப்பது உலகியல்பு என அறுதியிடலாம்.

விளக்க உரை

  • ஆர்த்தல் – மறைத்தல், மின்னுதல்
  • சற்றேறக்குறைய 40 வருடங்களுக்கு முன் புலவர் பட்டம் பெற தோராயமாக 10000 பாடல் அறிந்திருக்க வேண்டும் எனில் ஔவையார் காலம் பற்றி அறிந்திருக்க வேண்டிய பாடல் எண்ணிக்கை அறிக.
  • கூடுவது லகுவல்ல வாய்ப்பேச்சல்ல கோடியிலே ஒருவனடா குறியைக் காண்பான் எனும் சுப்ரமணியர் ஞானப்பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்க.

 


ஆர்த்தசபை நூற்றொருவர் – இது இறுமாப்பு கொண்டதுரியோதன் சபையில் ஒருவர் சகுனி.
ஆயிரத்தொண்றாம்புலவர் – இது விதுரரைக் குறிப்பது
பூத்தமலர்த்தாண்டமறை- இது விஷ்ணு விஸ்வ ரகசியம்
ததாகோடிக்கொருவர்உண்டாயிண்உண்டெண்டெண்றுஅறு – இது சிவம் இது ஒங்காரம்.

என்று இறை அன்பர் தனித் தகவலில் அனுப்பி இருந்தார்.


 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 21 (2019)

பாடல்

திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
   சீருடைக் கழல்கள்என் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
   ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
   வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
   பாசுப தாபரஞ் சுடரே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து – உன் அடியவராக இருக்கும் என் துன்பம் நீக்குவாய் என முறையிட்டப் பாடல்.

பதவுரை

அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்திருக்கூடிய திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே! காரியம், காரணம், சமய நடத்தை, யோகம், துன்ப நீக்கம் என்ற பஞ்ச அர்த்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதும்,  சைவசமயப் பிரிவுகளிள் மிகப்பழமையானதும் ஆன பாசுபதம் எனும் பசுபதி வடிவாகி நின்றவனே! மேலான ஒளியாய் உள்ளவனே! அழகிய வடிவம், அதனால் பெறப்படுவதாகிய பொருள்கள், இம்மையில் பெறப்படுவதான செல்வம் ஆகியவை உனது புகழை உடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து, பிறர் ஒருவரையும் துணையாக கொள்ளாமல்,  அவர்களோடு பொருந்தி தகாத செய்கைகள் செய்யாமல், அவர்கள் என்னைப் பற்ற வருவாராயின் வலிமை கொண்டு அவர்களிடத்தில் இருந்து விலகி,  உன்னிடத்தில்  பற்று உடையவனாக திரிபவன் ஆகி, மனத்தினால் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை, நீ நீக்கி அருளாய்.

விளக்க உரை

  • திரு – மதிப்பிற்குரிய, செல்வம், வளம், மேன்மை, திருமகள, சிறப்பு, அழகு, பொலிவு, நல்வினை, தெய்வத்தன்மை, பாக்கியம், மாங்கலியம், பழங்காலத் தலையணிவகை, சோதிடங் கூறுவோன், மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம்
  • உறாமை – பொருந்தாமை, விருப்பு வெறுப்பின்மை, தகாத செய்கை
  • உறைப்பன் – வலியன் , திண்ணியன்
  • சீருடைக் கழல்கள் – வேண்டுவார் வேண்டுவதை ஈந்து புகழ் பெற்ற கழல்கள்
  • ‘பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்’ –
  1. என் கண்ணைக் கெடுத்தது, அறவோனாகிய உனக்கு ஏற்புடையது எனினும், யான் என் பிழையை உணர்ந்து உன்பால்என்னுடைய குறையை உரைத்ததால், குறைகளைப் பொறுத்து, எனக்கு அக்கண்ணை அருளித்தருளல் வேண்டும்
  2. உன்னையன்றி வேறு பற்றில்லாத அடியவர்படும் துன்பத்தை நீக்காது அதைக் கண்டு கொண்டிருத்தல் அருளுடையவனாகிய உனக்குத் தகுவதோ.
  3. இத்திருப்பதிகம் முழுவதினும் இது காணப்படும்.

அதாவது நீரின் உச்ச பட்ச கொதிநிலை100டிகிரி. ஆனால்அதன்உறை நிலை_ ___ மைனஸ். நீர்மகாரம்; உறைநிலைங்காரம் மகாரம். பூவானால் ரீங்காரம் வண்டாகும் பெண்கொதிநிலை என்றால் ஆண்குளிர்நிலைஆகும். அதனல்தாண் பெண் ருதுவாகிறாள் ஆண்அதை நிறுத்தும் சுக்லமாகிரான். சூட்சுமம் யாதெனில் ஆணுக்குள் அசையும் பெண்தனை ஆண் அறிந்தால் அதுவே அசையா இசையா நிலையான அமர்நாத் பனிலிங்கம் அதுவே பிறப்பறுக்கும் மோட்ஷநிலை

முருகமர் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் –

மலைமேல் முருகனையும், சிவத்தையும் நித்திரைகொள் நாரனையும் உணர்த்துவது; அசைவது முருகு; இது பிரம்மம் யோகம் லிங்கம் சிவம் துயில்வது நாரணம் ஆகமூவரின் தாயான ஶ்ரீஓங்காரத்தை உணர்த்துவது.

இதுதான் பிரமன் அமர்ந்த இடம் பிரமரந்தீயம்; உலக உயிர் ஸிருஷ்டி மலை மீது அமர்ந்து உபதேசி அருளும் இதை முல்லை வாயில் என்றார். இதற்குள் புகுந்து இதுவாவதே மோட்ஷம் எனும் ஓங்காரம்.

என்று இறை அன்பர் தனித் தகவலில் அனுப்பி இருந்தார்.


 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 20 (2019)

பாடல்

மாலும் நான்முகன் தானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுட்
பால தாடிய பண்பன் நல்லனே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்துசிவபெருமான் இருபத்து ஐந்து திருமேனிகளில் ஒன்றான லிங்கோத்பவர் வடிவம் கொண்டு நின்ற பெருமையை கூறியது இப்பாடல்.

பதவுரை

திருமால், நான்முகன் ஆகியோர் முறையே நீண்டதானதும், வெற்றி பெற்றவர்கள் அணியக் கூடியதுமான கழல் கொண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேடி நின்ற போது, அளவிட இயலாத அளவு நீண்டு எரிவது போன்றதான திருமேனியனாய் நீண்டவனும், பாலால் அபிடேகம் செய்யப்பெற்றவனும், அழகிய புகலி என்றும் திருப்புகலி அழைக்கப் பெறும் திருத்தலத்தில் ஆடி உறைபவனும் ஆகிய நல்ல பண்பினை உடையவன் நமக்கு நன்மைகள் செய்பவன்.

விளக்க உரை

  • கழல்சீலம் – திருவடிப்பான்மை
  • எரிபோலும் மேனியன் – தீ வண்ணன்.
  • புகலி உட்பாலது ஆடிய என்பதற்குத் திருப்புகலியின் உட்பக்கத்திலுள்ள திருக்கோயிலில் திருக்கூத்து நிகழ்த்தியவன்
  • வார்கழல் – நீண்ட கழல்கள்; திருவடி

இன்று மகாசிவராத்திரி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 19 (2019)

பாடல்

வைத்த பொருணமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்
அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் பேதைநெஞ்சே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துசிவாய நம என்று ஓதாமல் அவன் அருள் பெறல் இயலாது எனக் கூறும் பாடல்.

பதவுரை

மெய்யுணர்வு  இல்லாத அறியாமையை உடைய மனமே! நமக்கு என்று எக்காலத்திலும் காவலாகவும், அரணாகவும், புதையல் போன்ற பொருளாகவும் இருப்பவன் சிவபெருமானே என்று உணர்ந்து, அவனை மனத்தில் தியானித்து, மனத்தை ஒருவழிப்படுத்தி ‘சிவாய நம’ என்று திரு ஐந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தல் அல்லாது, செறிந்த கிரணங்களையுடைய சந்திரனைப்போன்று பல கலைகளில்வல்ல சான்றோர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள தலைவனும், குருவாகவும், முனிவனாகவும், உயர்ந்தவனாகவும் இருக்கும்  அவனுடைய  அருளைப் பெறுதல் இயலுமோ?

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 18 (2019)

பாடல்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்கள் எப்பொழுதும் மல கன்ம மாயையாகிய பாசங்கள் நீங்கியவர்களாக இருப்பார்கள் என்பது பற்றிய பாடல்.

பதவுரை

உயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல், உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள் (முன்னர்ப் பிணிப்பவிழ்ந்து நீங்கினவை) மீளவும் தொடர்ந்தும் பற்றமாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக  மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.

விளக்க உரை

  • காட்டுவது – ஞானம்.
  • காண்பது – காணப்படுவது.
  • ஞாதுரு = காண்பவன் –  ஆன்மா / சீவன்
  • ஞானம் = பெறும் அறிவு – சிவ ஞானம்
  • ஞேயம் = காணப்படும் பொருள் –  சிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 17 (2019)

பாடல்

காமக் கிரிபீடத்தழகி
      கனக சபையில் நடனமிடும்
   காத்யா யனியே கவுமாரி
      காமேஸ் வரியே ஈஸ்வரியே

பூமிதேவி நான்முகவன்
      புனித மனைவி இந்த்ராணி
   புகழ்நா ரணியும் தினம்பணியும்
      பூர்ண கலையே கதிமுதலே

சோமன் உதய மணிநுதலே
      சுருதி ஞான முடிமுதலே
   துவாத சாந்த நிலையாளே
      சுகமே ஞான மணிவிளக்கே

வாம நயனி அதிரூபி
      வனசா கினியே மாமணியே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

 

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துஅன்னையின் புகழ்பெற்ற வடிவங்களாகவும், சப்த மாந்தர்களின் வடிவமாகவும், ஞானம் வழங்குபவளாகவும் இருப்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! நீ காமகிரிப் பீடம் ஆகியதும், பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் உள்ள காமாக்கியா கோவிலில் காம ரூபிணியாக வீற்றிருக்கும் காமக்கிரி பீடத்து அழகியாகவும், கனகசபை ஆகிய சிதம்பரத்தில் உள்ள ஈசனும் நடனமிடும் காத்யானி, கௌமாரி, காமேஸ்வரி, ஈஸ்வரி, பூமாதேவி, நான் முகன் ஆன பிரம்மாவின் புனித மனைவி ஆன இந்திராணி, புகழ் பெற்ற நாரயணி இவர்கள் தினமும் பணியும் முழுமையான கலை டையவளாகவும், கொடுக்கும் தன்மை உடைய சோமனை நெற்றிசுட்டியாக  அணிந்திருப்பவளாகவும், மறைகளின் ஞானமுடிவாக விளங்குபவளாகவும்,, உச்சிக்குமேல் பன்னிரண்டு அங்குலத்தில் உள்ள யோகத்தானம் ஆகிய  துவாத சாந்தத்தில் நிலைபெற்றவளாகவும், எல்லை இல்லாத பேரின்ப நிலையைத் தரும் ஞான விளக்கு போன்றவளாகவும், ஒளிரும் கண்களை உடையவளாகவும்,, மிகுந்த அழகிய வடிவம் கொண்டவளாகவும், வனத்தில் வாழும் தூய்மையின் வடிவமாகி  இருக்கும் சாகினியாகவும், மாணிக்கம் போன்றவளாகவும் இருக்கிறாய். (ஆதலால் உன்னைப் பணிகிறேன்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 16 (2019)

பாடல்

வழுத்துகிறேன் என்மகனே மாணா கேளு
   வல்லவர்க்குப் பிள்ளை என்றவகையும் சொல்வேன்
அழுத்துகிற ஆத்தாளை அவர்க்கே ஈந்தேன்
   அதனாலே அரனுக்குப் பிள்ளை என்றார்
தொழுத்துகிற அவரையுந்தா நின்று யானும்
   துய்யவெளி உபதேசம் துரந்து சொல்லி
வழுத்துகிறேன் அதனாலே ஆசானென்று
   அல்லோரும் எனைத் தானும் அருளினாரே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துசிவன் தனக்கு தந்தையாகவும், மகனாகவும் ஆன ரகசியத்தை முருகப் பெருமான் அகத்தியர் கேட்டதற்கு இணங்க அவருக்கு கூறியது.

பதவுரை

என் மகனாகவும், என் மாணவன் ஆனவனாகவும் ஆன உன்னை வாழ்த்துதல் செய்கின்றேன். வலிமை உள்ளவனும் சமர்த்தவனும் ஆகியவருக்கு எவ்வாறு மகன் ஆனேன் என்று உரைக்கிறேன். தனது ஆத்தாள் ஆகிய பார்வதி தேவியை அவள் விரும்பியவாறு ஈசனாருக்கு கொடுத்தேன். அதனாலே  ஈசனார் ஆகிய அவரை விட இளமை உடைய இளைஞன் ஆனேன். தனக்கு ஞான உபதேசம் செய்யும் படி விரும்பி நின்ற அவரை, தூயவெளி என்பதும், வெட்டவெளி என்பதும் ஆகாசம் என்பதும் ஆன இடம் காட்டி உபதேசம் காட்டி அருளியதால் அவருக்கு ஆசான் ஆனதால் அவருக்கு மெய்ஞானத் தந்தை ஆனேன் என்று அல்லாதவர்களும் கூறியது குறித்து தன்னைப்பற்றி அருளினார்.

விளக்க உரை

  • வழுத்துதல் – வாழ்த்துதல், துதித்தல், அபிமந்திரித்தல்
  • அழுத்துதல் – அழுந்தச்செய்தல், பதித்தல், உறுதியாக்குதல், வற்புறுத்துதல், அமிழ்த்துதல், எய்தல்.

சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 15 (2019)

பாடல்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவானந்தத்தில் நிலை பெற்று இருந்தால் அறிவுத் திறனை ஆணவம் மறைக்காது; அப்படி மறைக்க முயன்றாலும் குருவின் அருளால் அகங்காரம் நீங்கும் என்பது பற்றியப் பாடல்.

பதவுரை

உயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல் உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள்  மீளவும் தொடர்ந்தும் பற்ற மாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக  மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 14 (2019)

பாடல்

பேருகாரணியத்தில் யான் சென்ற போதும் பெரும் பொருளால்
வருகாதல் கொண்டிரவில் துயில் போதும் இம்மண்டலத்தில்
துருவாதியர்கள் சபையில் செல்போதும் துணையெனக்கு
வருவாயுனைநம்பினேன் காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துஎந்த நிலையில் நின்ற போதும் நீ எனை காப்பாய்  என்று நம்பினேன் என்று உறுதி பற்றி கூறியப் பாடல்.

பதவுரை

தோற்றத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கின்ற பெரியதான காடுகளில் யான் சென்ற போதும், பொருள் வருதல் கண்டு, அதன் பொருட்டு மகிழ்வு கொண்டும், யாகத்தை விரும்புதல், ரிஷிகள், தேவர்கள், தேவதை, துருவாதி கிரகங்கள், பிதுர்க்கள், ஆகிய இவ்விதமாக பிறத்தலை சத்துவ குணத்தில் மத்யமகதியில் பிறந்தாலும்  நீ எனக்கு துணையாக வருவாக என உனை நம்பினேன்.

விளக்க உரை

  • உலகவாழ்வினை அடர்கானகத்திற்கு உவமையாக கூறுதல் இயல்பு. முதல் உவமை இகலோக வாழ்வில் துயறுற்று நின்ற போதும் என்பது பற்றியது. இரண்டாவது உவமையில் சற்று மேன்மை உற்று சத்துவ குணத்தில் நின்ற போதும் என்பதை பற்றியது. எந்த நிலையில் நின்ற போதும் நீ எனை காப்பாய்  என்று நம்பினேன்
  • பொருளால் வருகாதல் கொண்டிரவில் துயில் போதும் – பொருள் மீது பற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறந்து இறத்தல் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 13 (2019)

பாடல்

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துஈசன் தாயாகவும், தந்தையாகவும், உறவுகளாகவும், அவன் வீற்றிருக்கும் திருப்பாதிரிப்புலியூர் திருத்தலப் பெருமைகளையும் கூறும் பாடல்.

பதவுரை

திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு, உயிரைப்பற்றிய அறிவு இல்லாத காரணத்தால் எங்களின் ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான், அடியேனுக்குத் தாயாகவும்,  தந்தையாகவும், உடன்பிறந்த  சகோதர சகோதரியாராகவும் அமைந்து, பூமி, பாதாளம், சுவர்க்கம் ஆகிய  மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாகவும், அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாகவும் தேவர்களுக்கும் அன்பனாகியவன் சிவபெருமான் ஆவான்.

விளக்க உரை

  • உடன்தோன்றினர் – திலகவதி அம்மையார்
  • தோன்றாத்துணை  – திருப்பாதிரிப்புலியூர்ப் பிரானுக்குப் பெயர்
  • தோன்றாமை – உணர்விலும் உளத்திலும் தோன்றிப்புறத்தே விழிக்குத் தோன்றாமை
  • சிவன் மூன்று உலகங்களுக்கும் தந்தையாக இருப்பதை முன்வைத்து அவரை’ திரிலோகநாதர்’  என்று அழைப்பது கொண்டு ஒப்பு நோக்கி உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 12 (2019)

பாடல்

மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி ஒல்கிட
வனமிகு மால்வரை யால்அடர்த் தானிட மன்னிய
இனமிகு தொல்புகழ் பாடல்ஆ டல்எழின் மல்கிய
புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன வாயிலே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்துஈசனின் பெருமைகளையும், அவன் வீற்றிருக்கும் திருப்புனவாயில் திருத்தல பெருமைகளையும் கூறும் பாடல்.

பதவுரை

ஊக்கம் மிகுந்தவனும் செருக்குடைய மனம் உடையவனும், வேல் வாள் போன்ற படைக்கலன்களை உடையவனுமான அரக்கனான இராவணனின் வலிமை அழியுமாறு செய்தவனும், அழகும், பெருமையும் ஊடைய கயிலை மலையால் வீற்றிருந்து அருளும் சிவபெருமான் வீற்றிருந்து அருளும் இடமாவதும், பழமையான அவனுடைய புகழைப் பல்வேறு வகைகளில் போற்றுகின்ற பாடல்களும், ஆடல்களும் நிறைந்து அழகு பெறுமாறு விளங்குகின்றதும், கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றல்காற்று வீசுகின்றதுமானதுமான திருத்தலம் திருப்புனவாயில் ஆகும்.

விளக்க உரை

  • புனம் – காடு
  • வேலன் – இராவணனுக்குச் சிவபிரான் தந்த வாளைத் தவிரப் பிற ஆயுதங்களும் உண்டு  எனவே வேலன்
  • மனம்மிகு – ஊக்கம் மிகுந்த
  • வலிஒல்கிட – வலிமை குறையும்படி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 11 (2019)

பாடல்

புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
   புகுந்தெனைக் கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த
   கருத்தனே நின்றனை அல்லால்
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
   மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
   நம்பினேன் கைவிடேல் எனையே

ஆறாம் திருமுறை – திருஅருட்டா – வள்ளலார்

கருத்துகைவிடாது இருக்க வேண்டி விண்ணப்பம்.

பதவுரை

எனது கண்ணிலும், கருத்திலும் கலந்து நின்ற கடவுளே! மண்ணில்  தோன்றியும், மிகுந்தும் இருப்பவர்களையும், வானில் இருப்பவர்களையும் மதிக்கவில்லை; அவ்வாறு மதிப்பவர்கள் தம்மிடத்தில் பொருந்தி இருக்கவில்லை; உடலில்  காயம் ஏற்படுத்திய புண்ணிலே அம்பு தைத்தது போன்று துயரம் ஏற்படுத்தி என்னை கலங்கச் செய்தது போதும்;  உன்னை மட்டும் நம்பியதால் வேறு எதைப்பற்றியும் எண்ணவில்லை ஆகவே என்னை கைவிடாது இருப்பாயாக.

விளக்க உரை

  • கருத்தன் – செய்வோன், தலைவன், கடவுள்
  • வயங்குதல் – ஒளிசெய்தல், விளங்குதல், தெளிதல், தோன்றுதல், மிகுதல், நடத்தல்
  • நண்ணுதல் – கிட்டுதல், பொருந்துதல், செய்தல், இருத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 10 (2019)

பாடல்

எந்தன் நினைப்பும் இனிக்கடந்தே
      ஏக வெளியின் நிலை தொடர்ந்தே
   இரவும் பகலும் அற்றஇடம்
      இனிதா கியபே ரொளிவிளக்கே

சந்திக் கரையின் முடிவேற்றித்
      னையுந் தலைவன் அடிசேர்த்துச்
   சாட்சாத் கார் பூரணமாய்ச்
      சர்வா னந்தமாயிருக்க

உந்தன் இருதாள் மலர்க்கருணை
      ஒளிசேர் கனகக் கிரிமுடிமேல்
   உதித்தாய் எனது வினையறவும்
      உமையே இமையோர்க் கரசான

மந்திரக் கலைச்சிநவகோணம்
      வாழும் யோக நாயகியே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்து – திருவடியில் ஆனந்தமாக நிலைபெறச் செய்யவேண்டி விண்ணப்பம்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, உமையானவளே, இமையாதவர்கள் எனும் தேவர்களால் துதிக்கப்படுபவளும், மந்திரக் கலையை பூரணமாகப் பெற்று,  அதன் வடிவமாக இருப்பவளும், நவ கோணத்தில் வாழும் யோக நாயகியே, இரவும் பகலும் அற்ற இடம் தந்து இனிமை தந்து என்றும் இருள் அடையாமல் இருக்கும் பேரொளி விளக்கே! கருணையுடன் கூடியதான உந்தன் இரு மலர்போன்ற தாள் சேர்த்து, தங்கம் போன்றதும், ஒளியுடன் கூடியதுமான இமய மலைமேல் தோன்றியவளே! எந்தன் நினைப்பு எனும் நிலையினைக் கடந்து, ஏக வெளி எனப்படுவதும், ஆகாசம் எனப்படுவதும் ஆன இடத்தில் நிலைபெற்று இருக்கும் நிலையைத் தந்து, எனது அனைத்து வினைகளும் அறும்படி செய்து, உன்னை நேரில் கண்டு சந்திக்கும் படி செய்து,  என்னை இறைவனும் தலைவனும் ஆகியவனின் திருவடியில் வெளிப்படையாக சேர்த்து, சர்வ ஆனந்த மயமாக இருக்கச் செய்வாயாக.

விளக்க உரை

  • ‘வீடான நவகோணம் இட்டுக்கொண்டு’ எனும் சித்தர்கள் பூஜா விதிப்பாடலும், ‘ஒளி நின்ற கோளங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே எனும் அபிராமி பட்டரின் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. எண்திசையுடன் கூடி, ஆகாயமும் சேர்ந்து ஒன்பது என்று உரைப்பவர்களும் உளார். அன்பர்கள் பொருள் ஆய்ந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 9 (2019)

பாடல்

சித்தான சித்தனிட மார்க்கஞ்சொன்னேன்
     சிறப்பான இன்னமொரு வயனங்கேளிர்
முத்தான வடிவேலர் முருகரப்பா
     முயற்சியுடன் வயததுவும் ஏதென்றாக்கால்
சத்தியமாய் வயததுவுங் கணக்கோயில்லை
     சார்பான நூல்தனிலுஞ் சொல்லவில்லை
சித்திபெற ஞானவழி கொண்டசித்து
     சிறப்பான சுப்ரமணியர் என்னலாமே

போகர் சப்த காண்டம் – போகர்

கருத்து – போகர், முருகப் பெருமான் வயதினை கணித்து கூற இயலாமை குறித்தப் பாடல்.

பதவுரை

இவ்வாறான மெய்யறிவுப் பொருளாகியனும், அவன் பற்றிய மார்க்கத்தினையும் சொன்னேன்; சிறப்பான இன்னொரு வேதம் போன்றதான மற்றொரு வசனத்தினைச் சொல்கிறேன்; தூமணி போன்றவரான வடிவேலர் முருகப் பெருமானே ஆவார்; அப்படிப்பட்டவரான முருகனுக்கான வயது எதுவென்றால், சர்வ நிச்சயமாக வயதினைக் கணித்துக் கூற இயலாது. அவனைப் பற்றிய நூல்களிலும் அதுபற்றி உரைக்கப்படவில்லை. முக்தி அருளக் கூடியவனும், பேரறிவாக இருந்து, அந்த அறிவுடைப் பொருளாகவும் ஆகி, பரமான்மாவாகவும் ஆகி, அட்டமாசித்தி பெற அருள்வோனுமாய்,  ஞான வழி  அருள்பவனுமாய் இருப்பது சிறப்பான சுப்ரமணியர் என்று (மட்டும்) கூறலாம்.

விளக்க உரை

  • சித்து – அறிவு, அறிவுப்பொருள், ஆன்மா, அட்டமாசித்தி, கலம்பக உறுப்பு, வேள்வி, வெற்றி, ஒரு வரிக்கூத்து வகை, எழுத்தடிப்பு, கொத்தனுக்கு உதவிசெய்யும் சிற்றாள்
  • வயனம் – வசனம், வேதம், பழிமொழி
  • ‘பெம்மான் முருகன், பிறவான், இறவான்’ எனும் அருணகிரிநாதரரின் கந்தர் அனுபூதி பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 8 (2019)

பாடல்

மூலம்

அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே

பதப்பிரிப்பு

அல்லல் என் செயும் அருவினை என் செயும்
தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனுக்கு அடிமை பூண்ட தனக்கு எந்த வினைகளும் ஒரு துன்பமும் செய்யாது என அறுதியிட்டுக் கூறிய பாடல்.

பதவுரை

உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், வல்வினையாகிய துவந்தங்களும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளும், பிராப்தம் ஆகியதும் தீர்ப்பதற்கு அரியதும் ஆன நுகர்வினை ஆகிய  நிகழ்கால வினைகளும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகள் ஆகிய எதிர்வினைகளும்  எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன? தில்லைமாநகரிலே திருக்கூத்து நிகழ்தி அருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாத அடிமைபூண்ட எனக்கு அந்த வினைகள் ஒரு துன்பமும் செய்யாது.

விளக்க உரை

  • அல்லல் – ஆகாமிய வினை, பழைய வினைகளை அனுபவிக்கும் போது நாம் செய்யும் செயல்களால் நாம் பெருக்கிக்கொள்ளும் வினைகள்;
  • அருவினை – அனுபவித்தால் அல்லது தீராத வினை; வேறு எவராலும் தீர்க்கமுடியாது எனபதால் அருவினை
  • தொல்லை வல்வினை – பழமையான சஞ்சித வினை; நம்மை மாயத் தோற்றத்தில் ஆழ்த்தும் வலிமை கொண்டமையால் வல்வினை
  • தொந்தம் (வடமொழியில் துவந்துவம்) – துவந்துவம் – இரட்டை . நல்வினை தீவினை , அறம் மறம் , இன்பம் துன்பம் என்னும் இரட்டைகள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 7 (2019)

பாடல்

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

காட்டில் மிகுந்தும், பொருந்தி உள்ளதும், நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தை தருவதுமான கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தும், ஆகாயம் அளவு குவிக்கப்பட்டதும், பெருமை மிக்க மலர்களையும் கொண்டு சிவனை வழிபட்டாலும், உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, அதனால் உடல் மேல் உள்ள பற்றை விடுத்து, சிவனையே பற்றாக உணர்பவர்க்கள் அல்லாது  ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.

விளக்க உரை

  • ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதும், ‘சிவபூசைக்கு முன்னே குருபூசை செய்தல் இன்றியமையாதது’ என்பதும், ‘சிவபூசையும் குருவருள் பெற்றே செய்யப்பட வேண்டும்’ என்பதும், `சிவனை அவ்வாறு உணரும் உணர்வை குருவருளால் அன்றி அடைய இயலாது` என்பதும் குறிப்பு.
  • உறுதல் – உண்டாதல், மிகுதல், சேர்தல், இருத்தல், பொருந்தல், கூடல், நேர்தல், பயனுறல், கிடைத்தல், வருந்தல், தங்கல், அடைதல், நன்மையாதல், உறுதியாதல், நிகழ்தல்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவெஞ்சமாக்கூடல்

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருவெஞ்சமாக்கூடல்

  • மூலவர் சந்நிதி வாயிற்கதவுகளில் கொங்கு நாட்டிலுள்ள ஏழு தேவாரத் தலங்களின் மூல வடிவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ள தலம்.
  • வெஞ்சமன் என்ற வேடர்குல மன்னன் அரசாண்ட தலம்
  • இந்திரன் அகலிகை சாபநிவர்த்திக்காக வழிபட்டு அருள்பெற்ற தலம்
  • குடகனாற்று வெள்ளப்பெருக்கால் பழைய கோயில் சிதிலமானதால் தற்போதைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது புதிய கோயில்
  • சுந்தரரின் தேவாரப் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் கிழவராகவந்து, தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் ( பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கியத் தலம். ( குறிப்பு – கொங்கு மண்டலச்சதகச் செய்யுள் )
  • முருகப்பெருமான், ஆறு திருமுகங்களுடன் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீது கால் வைத்தது அமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி
  • அருகில் கருவூர் ஆனிலை தேவாரத்தலம்.

 

தலம் திருவெஞ்சமாக்கூடல்
பிற பெயர்கள் வெஞ்சமாங்கூடலூர்
இறைவன் கல்யாண விகிர்தீஸ்வரர், விகிர்த நாதேஸ்வரர்
இறைவி பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷிணி, விகிர்த நாயகி)
தல விருட்சம் வில்வமரம்
தீர்த்தம் குடகனாறு, விகிர்த தீர்த்தம்
விழாக்கள் மாசிமகத்தில் 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை , ஐப்பசி அன்னாபிஷேகம் , திருக்கார்த்திகை , மகா சிவராத்திரி
மாவட்டம் கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை ௦7:௦௦ முதல் 12:0௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦7:3௦ வரைஅருள்மிகு விகிர்த நாதேஸ்வரர் திருக்கோவில்
வெஞ்சமாங்கூடலூர் அஞ்சல்
வழி மூலப்பாடி, அரவக்குறிச்சி வட்டம்
கரூர் மாவட்டம். PIN – 639109
04320-238442, 04324-238442, 99435-27792, 9443362321, 9894791878
வழிபட்டவர்கள் இந்திரன்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் கரூர் – அரவக்குறிச்சி சாலையில் 13 கிமீ தொலைவில் உள்ள சீத்தப்பட்டி சாலையில் சுமார் 8 கிமீ தூரம். மற்றைய வழிகள் – கரூர் – ஆற்றுமேடு சாலை வழி , கரூர் – திண்டுக்கல் சாலை வழி

கரூரில் இருந்து சுமார் 16 கிமீ தொலைவு

இதர குறிப்புகள் கொங்குநாட்டுத்தலங்களில் 7 வதுதலம்.

 

பண்ணேர் மொழியம்மை உடனாகிய கல்யாண விகிர்தீஸ்வரர்

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்           42
திருமுறை எண்  4

 

பாடல்

பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார்அகி லுந்நல சாமரையும்
அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப
மடவார்நட மாடு மணியரங்கில்
விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே

பொருள்

இசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அகிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும்,  குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்           42
திருமுறை எண்  7

 

பாடல்

கரிகாடிட மாஅனல் வீசிநின்று
நடமாடவல் லாய்நரை யேறுகந்தாய்
நல்லாய்நறுங் கொன்றை நயந்தவனே
படமாயிர மாம்பருத் துத்திப்பைங்கண்
பகுவாய்எயிற் றோடழ லேயுமிழும்
விடவார்அர வாவெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே

 

பொருள்

உடல்கள் எரிக்கப்படுவதால் கருமை நிறம் படிந்த  சுடுகாட்டை இடமாக கொண்டு நெருப்பை வீசி நின்று நடனமாட வல்லவனே, ரிஷபத்தின் மீது விரும்பி ஏறி வருபவனே, இயல்பாய் பிற உயிர்களுக்கு நன்மை செய்பவனே, மணம் உடைய கொன்றை மலரை மகிழ்ந்து அணிந்தவனே, ஆயிரம் புள்ளிகளை உடைய படங்கள் பொருந்தியதும், பருத்ததும், நெருப்பு போன்ற கண்களை உடைய, பிளந்த வாயில் பற்களோடு நெருப்பை உமிழ்கின்றதும் ஆன நஞ்சினையுடைய அரிய பாம்பை அணிந்தவனே,  திருவெஞ்சமாக் கூடலில் எழுந்து அருளியிருக்கின்ற இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!