பாடல்
நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்
நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை
என்னடி யானென்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன்
நிரந்தர மாய்நின்ற
ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – துன்பம் மிகும்படியான வாழ்வில் இருந்து மீட்டு பழைய அடியார்களோடு தன்னையும் சேர்த்து அருளிய அதிசயத் திறம் பற்றி உரைத்தப் பாடல்.
பதவுரை
உலகியலிலுக்கும், மெய் ஒழுக்கங்களுக்கும் பொதுவாய் இருக்கும் நீதிகளை இருப்பவனவற்றை நினையேன்; அவ்வாறு நினைப்பவர்களோடு இணக்கமாய் இருந்து ஒன்று சேரவும் மாட்டேன்; துன்பமே மிகும்படியாக ஆளாகிப் பிறந்து இறந்து நிலை கெடுமாறு சுற்றித் திரிவேன்; இப்படிப்பட்ட என்னையும் என்றும் உள்ள பொருளாய் நிற்பவனும், அன்னையை தன் பாகத்தில் கொடுத்தவனும், கடவுளும் ஆன முதல்வன், தன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஒழுக்கத்தோடு சிறிதும் இயைபில்லாத என்னையும், ஒழுக்கம் மிக்கவர்களும், காலத்தினால் பழமையானவர்கள் ஆன தன் அடியவர் கூட்டத்தில் சேர்த்து ஆண்டு அருளித் தன் அடியாரோடு சேர்த்து வைத்த அதிசயத்தைக் கண்டோம்.
விளக்க உரை
- உழலுதல் – அசைதல்; அலைதல்; சுழலுதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல்.
- பரம்பரன் – முழுமுதற்கடவுள், கடவுள்; அப்பாட்டன்