பாடல்
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவா ரவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து – பொய்யாக புகழ்பவருக்கும் அருளும் நீ, உண்மையாக இருக்கும் அடியவர்களை நினைவு கொள்ள வேண்டும் எனும் பொருள் பற்றியப் பாடல்.
பதவுரை
மை பொருந்திய பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே, கங்கையையும், பிறை சந்திரனையும் தனது திருமுடி மேல் வைத்துள்ள ஐயனே, செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே, திருக்கச்சூர் ஆலக் கோயிலில் எழுந்தருளும் பெருமானே! இழி நிலை மனிதர்களுக்கே உரித்தானவாறு மனதில் அன்பு இன்றி, பலன் கருதி பொய்யாக உனை ஒருவர் புகழ்ந்தால் அதனையும் ஒரு பொருளாய் கொண்டு அவர்களுக்கு உண்மையாக அருள் செய்யும் எங்கள் பெருமானே உன்னை உண்மையாகவே நினைக்கும் அடியவர்களை நினை.
விளக்க உரை
- பொய்யே உன்னைப் புகழ்வார் – அந்த நிலையில் இருந்தாலும் கூட என்பதே இதன் சிறப்பு.
- சிவன் வேறு சக்தி வேறு என்ற பேதம் அறுபடுகிறது என்பதை கீழ்கண்ட இரு உதாரணங்களால் அறியலாம்.
- பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே
- செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே – வெண்மை நிறம் சிவனாரைக் குறிப்பதாகும். செம்மை நிறம் சக்தியை குறிப்பதாகும்