பாடல்
ஓரா தொன்றைப் பாரா தந்தத்
தோடே வந்திட் …… டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் …… டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் …… குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் …… கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் …… தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் …… பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் …… கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் …… பெருமாளே
திருப்புகழ் – அருணகிரிநாதர்
கருத்து – சரீரம் விடும் நேரத்திலும் முருகனை புகழ்ந்து உரைக்கும் சொற்கள் உதவும் என்பது பற்றியப் பாடல்.
பதவுரை
போரில் தோல்வி என்பதையே அறியாது எப்பொழுதும் வெற்றியைப் பெறும் போர் வீரா, மணம் வீசும்படியான மாலைகள் அணிந்த தோளை உடையவனே, கிரெளஞ்ச மலையை தனது வேலாயுதத்தால் துளைத்தவனே, சூழ்ச்சியினால் எட்டுத் திக்கும் பொருந்தி நின்ற வஞ்சனை பொருந்தியவனான சூரன் மாமரமாக நின்ற போது அவன் அஞ்சுமாறு போரிட்ட வேலனே, சிறப்புகள் உடைய கொன்றை மாலை மார்பில் திகழுமாறு ரிஷபத்தில் ஏறும் தந்தை ஆகிய சிவனுக்கு இனியவனே, தேன் போன்றவனே, அன்பர்களுக்கு என்றும் இனிய சொற்கள் வழங்கும் சேயே, மலைபோன்றதும், செம்மையானதும், அழகியதும் ஆன தோளை உடையவனே, திருச்செந்தூரில் உறையும் செந்தில் பெருமாளே! மெய்யானது எது என்ற ஒன்றை ஆராய்ந்து அறியாமலும், அதில் பொருந்தி இருக்கும் உண்மையைப் பார்க்காமலும், உயிரானது சோர்ந்து போகும்படி ஊடல் செய்து, தங்களுக்கு நல்லது என்று எதும் இல்லாதவர்கள் போல நின்று, அளவற்ற காம மயக்கத்தைத் தந்து திரிகின்ற பெண்களின் கூரியதான பொய்யான அன்பில் சோர்வடைந்து, எலும்போடு கூடியதான இந்த சரீரம் ஓய்ந்து உள்ளம் குலைந்து போன போதும், உன்னைப் பற்றி புகழ்ந்து உரைக்கும் சொற்கள் நின்று உதவும் என்று உலகத்தார் கூறும்வண்ணம் திருவருள் தந்தருள்க.
விளக்க உரை
- ‘ஓர்தல் – ஆராய்தல், எண்ணுதல், உணர்தல், அறிதல், தெளிதல்
- கோடுதல் – வளைதல், நெறிதவறுதல், நடுவுநிலைமை தவறுதல், வெறுப்புறுதல்