தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள் தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம் தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம் தவிரவைத் தான்பிற வித்துயர் தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சற்குரு அருளால் முடிவாகிய வீடுபேறு மட்டுமின்றி, இடைநிலைப் பயனாகிய இம்மைப் பயன்களும் கிட்டும் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
சற்குருவானவர் தன்னுடைய அடியார்களின் வினை நீங்குமாறு செய்யவும், ஒன்பது கோள்களினால் ஏற்படும் தீமைகள் நீங்கவும், யம தூதர்களது கூட்டம் விலகி ஓடவும், பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்து அருளினான்.
கருத்து – ஈசனின் செயற்கரிய செயல்களை உரைத்து தன்னையும் காக்க வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
கங்கை நதியினை தாங்கிய நீண்ட சடையை உடையவனே, பூத கணங்களுக்குத் தலைவனே, காலன் ஆகிய எமனுக்கு காலனே, காமன் உடலினை நெருப்பாகி அதனை எரித்தவனே, அலை மிகுந்து தோன்றும் பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அதை கண்டத்தில் உடையவனே, உயிர்களுக்கு முதல்வனாக இருப்பவனே, அற வடிவமாக இருப்பவனே, மாசு படாமல் எக்காலத்திலும் தூயோனாக இருப்பவனே, செம்மையான கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை ஊர்தியாக உடையவனே, தெளிந்த தேன் போன்றவனே, இறைவனே, தேவர்களிடத்தில் ஆண் சிங்கமாய் உள்ளவனே, திருவாவடுதுறையில் எழுந்து அருளியிருக்கின்ற கருணையாளனே, அடியேனுக்கு உன்னை அன்றி உறவாக யாவர் உளர்! என்னை ‘அஞ்சேல்’ என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாயாக.
விளக்கஉரை
‘அமரர்கட்குத் தலைவனே’ என அருளாது ‘அமரர்கள் ஏறே’ என , உருவகித்து அருளியது முதன்மையின் சிறப்பு பற்றியது
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில்
நல்வழி – ஔவையார்
கருத்து – மனிதர்கள் வினைபற்றி இருக்கும் போது அது குறித்து துயரப்பட்டு இறத்தலே தொழிலாக இருப்பதைக் குறிக்கும்பாடல்.
பதவுரை
வருத்தப்பட்டு எத்தனை முயன்று அழைத்தாலும் நமக்குச் சேராதவைகள் நம்மிடத்தில் வந்து சேர்வதில்லை. நம்மிடம் வந்து பொருத்தி நிற்பவைகள் நம்மை விட்டுப் போகவேண்டும் என்றால் அது எக்காலத்திலும் போவதும் இல்லை. இவ்வாறு வினைகள் பற்றி மனிதர்களின் வாழ்வு இருக்கும் போது ஒன்றை அடையவேண்டும் என்னும் ஏக்கம் கொண்டு நெஞ்செல்லாம் புண்ணாகும்படி வருந்தி நெடுந்தூரம் திட்டமிட்டுக் கொண்டிருந்து மரணிப்பதே மாந்தரின் தொழிலாகப் போய்விட்டது.
கருத்து – இறைவன் துன்பத்தைப் போக்க வல்லவன் என்பதுவும், இறைவன் குருவாய் வந்து ஆட்கொண்ட போது உடன் செல்லாது இருந்தமையால், இங்கு வினைகளைச் செய்து வேதனைப் படுகிறேன் என்பதையும் கூறும் பாடல்.
பதவுரை
கொடிய நரகத்தில் வீழாது காத்தருள குருமணி எனும் குருவடிவாக இருப்பவனே ! வினை பற்றி நின்று செயல்படுவதால் கெடும் இயல்புடைய யான் கெடும் வழியில் சென்று கெடுகின்றேன்; இதனால் குற்றம் இல்லாதவனாகிய நீ பழியினை அடைந்தாய்; பட்டு அனுபவிற்பதற்கு உரிய துன்பங்களை எல்லாம் நான் அனுபவிப்பதால் நீ காட்டும் பயன் என்னை? நீ நடுவு நிலைமையில் நில்லாது ஒழிந்தால் அது உனக்கு அழகாகுமோ எம் தலைவனே?
விளக்கஉரை
கேடு இலதாய் – கேடில்லாதவனே
கெடுவேன் – கெடும் இயல்புடைய யான்
கெடுமா கெடுகின்றேன் – கெடும் வழியில் சென்று கெடுகின்றேன்;
குருமணியே – மேலான குரவனே
பழி கொண்டாய் – ஆட்கொண்ட பெருமான் முத்திப்பேறு அளிக்காமை பற்றியது
நடுவாய் நில்லாது – தம்மைப் பின் நிறுத்தி ஏனைய அடியார்களை உடன் அழைத்துச் சென்றமையை நினைவு கூர்ந்து அவ்வாறே தம்மையும் அழைத்துக் கொண்டருள வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்து அருளியது
கருத்து – மயிலாடுதுறை தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து அவர்தம் திருவடிகளைக் கொண்டவர்களுக்கு மானிட வாழ்வில் துயரம் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
உயிர்கள் பிறவி நீக்கம் பெறுவதன் பொருட்டு, கரை படிந்தது ஒத்த கண்டத்தை கொண்டதால் திருநீலகண்டன் என்னும் பெயர் பெற்றவனும், எட்டுத் தோள்களினை உடையவனும், வேதத்தின் வடிவமாகவும், அதன் பொருளாக இருக்க வல்லவனுமகிய மயிலாடுதுறை தலத்தில் உறையும் இறைவனின் நீண்ட கழல்களை ஏந்தி இருத்தலால் கொடுமை உடையதான மானுட வாழ்வினில் வருவதான குறைவு இல்லாதவர்களாக ஆவோம்.
விளக்கஉரை
கொடு – தீயது. மீண்டும் பிறவிக்து ஏதுவான வினை .
நீள் கழல் – அழிவில்லாத திருவடிகள்
எண்தோளினன் – எட்டுத் திக்குகளையும் ஆடையாக அணிந்தவன் என்றும், எண் குணங்களை முன்வைத்து எண் தோளினன் என்றும் கூறலாம்.
திருவடிகளை ஏத்தியிருக்கும் பிறவி வாய்க்குமானால் அந்த மானுட வாழ்க்கையில் வினைகள் என்பது இல்லை.
பாரப்பா மவுனமுடன் நின்று வாழ பரைஞான கேசரியாள் பாதம் போற்றி சாரப்பா அவள்பதமே கெதியென்றெண்ணி சங்கையுடன் மவுனரசந்தானே கொண்டால் பேரப்பா பெற்றதொரு தவப்பேராலே பேரண்டஞ் சுற்றிவர கெதியுண்டாகும் ஆரப்பா அறிவார்கள் மவுனப் போக்கை அறிந்துகொண்டு பூரணத்தை அடுத்து வாழே
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்து – அமிர்த ரசத்தை தவத்தின் மூலம் பருகினால் ஒரு யோகி ஆழமான மவுன நிலையை அடைவார் என்பதைக் குறிக்கும் அகத்தியரின் பாடல்.
பதவுரை
மௌனத்துடன் மனம் ஒன்றி அது பற்றி வாழ மெய்யறிவாக இருக்கும் கேசரியாள் பாதம் போற்றி! அவள் பதத்தினை வாழ்விற்கான கதி என்று எண்ணி, சங்கு எனப்படும் தொண்டைக்குழிப் பகுதியின் வழியாக வரும் நாதம் என்று அழைக்கப்படும் பேச்சினை நிறுத்தி, மௌனம் கொண்டால் அதன் விளைவாக தவ ஆற்றல் கிட்டும்; அந்த தவ ஆற்றலின் காரணமாக பேரண்டம் எனக் கூறப்படும் 1008 அண்டங்களையும் கெவுன சித்தி எனப்படும் வானத்தில் சூட்சும நிலையில் பயணிக்கக்கூடியத் தகுதி பெற்று அண்டங்களைச் சுற்றி வரும் வாய்ப்பு உண்டாகும். மற்றவர்களால் அறிய இயலா இந்த மவுனத்தின் போக்கை அறிந்து கொண்டு மெய்யறிவு எனப்படும் பூரணத்தினைக் கண்டு வாழ்வாயாக.
கருத்து – சிவபெருமான் எலும்பு முதலியவற்றை அணிந்த கோலத்தினன் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
பேரொளி ததும்பும் மணிமுடி தாங்கியவன் சிவபெருமான், வானத்தில் உள்ளவர்களுக்கு முதல்வனாகவும், ஆதிமூர்த்தியாகி முதல்வனாகவும், தேவர்களுக்கும், படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாக்களின் ஆயுளுக்கும் பிறகு அவர்களின் எலும்புகளையும், மண்டையோட்டுத் தலைகளை கோர்த்து அதை மாலையாக அணிந்து இருப்பவன். அவ்வாறு அந்த எலும்பினையும் மண்டையோட்டினையும் ஏந்தாது ஒழிந்தால் அவை இற்று மண்ணொடு மண்ணாய்ப் போய் அழியும்.
விளக்கஉரை
சிவபெருமான், இறந்த தேவரது எலும்புகள் பலவற்றையும், பிரமரது தலைகளையும் மாலையாகக் கோத்து அணிந்தும், கங்காளத்தினை (எலும்புக் கூட்டினைத்) தோள்மேல் சுமந்தும் நிற்கின்றான். சிவன் அவ்வாறு ஏந்துவதால் தான் ஒருவனே அழிவில்லாத முழுமுதல் என்பதையும், ஏனை மண்ணவர் விண்ணவர் அனைவரும் பிறந்து இறக்கும் உயிரினங்களே என்பதையும் அதுவே காட்டும். அழியும்படியாக இருக்கும் மாயா காரியப் பொருள்களும் சிவபெருமான் கையேந்தல் பற்றியதால் அழிவினை அடையாது என்பதும் பெறப்படும்.
வலம் – வெற்றிப்பாடு.
சாம்பலை அணிதல், காரணப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்றலை உணர்த்தும்
அன்னப் பார்ப்பால் அழகாம் நிலயூடே அம்பலம் செய்து நின்றாடும் அழகர் துன்னப் பார்த்து என்னுயிர்த்தோழியும் நானும் சூதாடுகின்ற அச்சூழலிலே வந்தே உன்னைப் பார்த்து என்னைப் பாராதே ஊரைப் பார்த்தோடி உழல்கின்ற பெண்ணே என்னைப் பார் எங்கின்றார் என்னடி அம்மா என் கைப்பிடிக்கின்றார் என்னடி அம்மா
திருஅருட்பா – வள்ளலார்
கருத்து – புறப்பொருள்களில் உள்ளத்தைச் செலுத்தாமல் உன் உள்ளத்துள்ளே உயிர்க்கு உயிராய்த் திகழும் என்னைக் கண்டு உய்தி பெறுவாயாக என ஈசன் அறிவுறுத்திய திறத்தைக் கூறும்பாடல்.
பதவுரை
கண்களில் ஆடும் ஜீவ ஒளியைக் கொண்டு, உலகமுக நோக்கம் கொண்ட பார்வை இல்லாமல் அகமுகமாக அம்பலத்தில் நின்றாடும் அழகன் ஆகிய கூத்தன் நடனத்தை ஆன்மா மாயா மலவிடயங்களில் சிக்கி இருந்து நானும் எனது தோழியும் விளையாடும் போது தன்னுடைய தூய அருளினால் உலகினைப் பார்க்காமல் என்னைப் பார்ப்பாயாக என்று கூறி என்னை அழைத்துச் செல்லுதல் பற்றி என்னுடைய கரத்தினையும் பிடிப்பார். அம்மா(வியத்தல் குறிப்பு)
விளக்கஉரை
அவ்வாறு அகமுகமாக காணும் போது காயம் கல்பம் ஆகி, ஆயுள் பெருக்கம் உண்டாகும். இதனால காயசித்தி அடையலாம்.
கருத்து – சிவனது தனிச் சிறப்பான இயல்புகளையே விரித்துரைத்து அவ்வாறு சிறப்புடைய அவன் மோன சமாதியில் எளியனாய் நிற்றலை உணர்த்தும் பாடல்.
பதவுரை
தன் இயல்பிலேயே உருவம் இல்லாதவனாகவும், தன் அடியவர்கள்பால் உருவம் கொளும் இடத்து அந்த உருவில் புலால் கொள்ளாதவனாகவும், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீக்கம் பெற்றதால் பாசத்தின் காரணமாக ஏற்படும் ஊனம் ஒன்றும் இல்லாதவனாகவும், அருள் உடைய தேவியை தன்னுடைய இல்லாளாக உடையவனும், ஏற்பதும், பெறுவதும் இல்லாமையினால் உலகில் வரும் நன்மை தீமை ஆகியவற்றிக்கு ஆட்படாதவனாகவும், தேவர்களுக்கு தேவனாகவும், ஒப்பில்லாதவனும், அனாதியே ஆகி அத்துவிதமாக கலந்து நிற்பவனாகிய சிவபிரான் வந்து என்னுடைய மனம் எனும் அறிவில் புகுந்தான்.
சிந்தை நிலைகெடுமாறு உருகி இன்னிசை பாடி, சிலம்புகள் ஒலிக்குமாறு கூத்துக்கள் நிகழ்த்தி, செழுமையான கங்கையினை சடையின்மேல் மறைத்து வைத்து வெண்ணீற்றினை திருமேனி முழுவதும் பூசி, கந்தை ஆடையினை கோவணமாகஅணிந்து, தோலினால் ஆன சிறுபையினையும், கபாலத்தினையும் யாசகத்திற்காக ஏந்தி திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடைய உயர்ந்தவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! பிறப்பிற்கு காரணமான தந்தையையும், நிரந்தரம் என்று மாயைக்கு உட்பட்டு கருதக்கூடிய மனையையும், இடுப்பில் சுமந்தவளாகிய தாயையும், மழலை மொழி பேசும் குழந்தையும், வினைபற்றி வரும் செல்வத்தையும், இளமையையும், அழகிய வடிவம் கொண்ட பெண்ணையும் அந்தியிலும், பகலிலும் விருப்பமுடன் உடல் வருந்துமாறு சோம்பல் வரும் அளவில் சிந்தையில் கொண்டு ஆழ்கடலில் அலையும் துரும்பு போலாகி அலைக்கழிக்கபடுபவன் ஆகிய என்னை மெய்யறிவு விளங்குமாறு திருத்தி ஆட்கொள்ள நினைக்கவில்லையோ?
நகை அணிந்த காதுகளை உடைய பெண்ணே! பிறரை ஏமாற்றுவதான வஞ்சித்தலை விலக்கி தான் யார் எனக் கண்டவர்களுக்கு துன்பம் தரத்தக்கதான குழப்பங்கள் எப்படி வரும்? வினைகளை அறுத்து பிறவி அறுத்தலை செய்யக்கூடியதற்கு ஆதாரமாக இருக்கும் தலை முதல் திருவடிவரை கண்டவர்களுக்கு மற்றவர்களிடம் தர்க்கம் செய்தல் எதற்காக?
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக் கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே விண்ணுறுவார்க் கில்லை விதி
நல்வழி – ஔவையார்
கருத்து – வினைகளின் பயன்களை அனுபவியாமல் விலக்குவதற்கு வேதம் முதலாகிய அனைத்து நூல்களிலும் வழி முறைகள் சொல்லப்படவில்லை என்பதைக் கூறும்பாடல்.
பதவுரை
நெஞ்சே! தொந்த வினைகளின் பயன்களை அனுபவியாமல் விலக்குவதற்கு வேதம் முதலாகிய அனைத்து நூல்களிலும் வழி முறைகள் சொல்லப்படவில்லை. நீ வினை வலிமையை மனதினால் ஆராய்ந்து அதை வெல்ல நினைத்து அதுபற்றி கணித்துக் கவலைப்படலாம் அன்றி நற்செயல்கள் புரிந்து அதன் காரணமாக விண்ணுலகம் செல்பவர்களை அவர்களின் தலைவிதி தடுத்து நிறுத்தாது.
கருத்து – போற்றுதல் தாண்டி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
பராபரமே! வினைகளை அறுத்தல் என்பதை முக்தியினை முன்வைத்து பேரின்பத்தினை தருவதாகிய அருள்தல் எனும் நோன்பினை தராவிட்டால் கெடுவேன்; ஆயினும் என்னுடைய தேகம் விழுந்து விடும் எனில் என்ன செய்வேன்; எனது தந்தையைப் போன்றவனே என்னுடைய தளர்ச்சியினை கண்டும் இன்னும் ஆற்றுப்படுத்தவில்லை ஆயினும் போற்றுதலை வாய்விட்டு உரைத்தல் அன்றி வேறு என் செய்வேன்.
கருத்து – ஈசனை உணர்ந்தவர்கள் துன்ப வெள்ளத்தில் இருந்து வெளியேறுதலையும், உணராதவர்கள் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள் என்பதையும் விளக்கும் பாடல்.
அருள் மிகுத்த ஆகமநூல் படித்து அறியார்! கேள்வியையும் அறியார்! முன்னே இருவினையின் பயன் அறியார்! குருக்கள் என்றே உபதேசம் எவர்க்கும் செய்வார்! வரம் மிகுத்த தண்டலைநீள் நெறியாரே! அவர் கிருபா மார்க்கம் எல்லாம் குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி காட்டிவரும் கொள்கை தானே
தண்டலையார் சதகம் – படிக்காசுப் புலவர்
கருத்து – அஞ்ஞானி, இன்னொரு அஞ்ஞானிக்கு உபதேசம் புரிய முடியாததை பழமொழியுடன் இணைத்துக் கூறும் பாடல்.
பதவுரை
கேட்டவற்றியில் மிக்க நன்மை தரக்கூடியதான திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலிலே எழுந்தருளிய சிவபெருமானே! சொல்லக் கேள்வி எனும் வகையில் வரும் அருள் நிறைந்தாக இருக்கும் ஆகம நூல்களைக் கற்று அறிய மாட்டாதவர்களாகவும், ஆத்ம விசாரம் எனும் சுய கேள்விகளை கேட்டு மெய்ப் பொருளை அறிய மாட்டாதவர்களாகவும், உலகியலில் ஏற்படும் இன்ப துன்பத்திற்கு காரணமான இருவினையின் வினைப் பயன்களையும் அறிய மாட்டாதவர்களாகவும், தன்னை குரு உபதேசம் செய்யத் தக்கவர்கள் என்று எண்ணி, அண்டியவர்களின் தேவைகளின் பொருட்டு உபதேசம் செய்யாமல் எதிர்ப்படும் அனைவருக்கும் உபதேசம் செய்வார்கள்; இவர்கள் அருளக்கூடிய மார்கம் எவ்வாறு எனில் குருடர் ஒருவர்க்கு மற்றொரு குருடர் கோல் கொடுத்து வழிகாட்டி வருவது போன்றதே.
விளக்கஉரை
ஞானி மெய் ஞானம் பெறுவதன் பொருட்டு அஞ்ஞானிக்கு அருள் உபதேசம் புரியலாம். ஆனால் அஞ்ஞானி, இன்னொரு அஞ்ஞானிக்கு உபதேசம் புரிந்தால், இருவருமே நரகம் புகுந்து, பிறவிக் குழியிலும் விழுவர்.
குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்தல் எனும் பழமொழியை விளக்கும் பாடல்
கருத்து – உன்னைப் பற்றி எண்ணாமல் கல்மனம் உடையவனாகி துன்பக்கடலில் உழல்வோனாகிய தன்னைக் காப்பாற்ற வேண்டும் என ஈசனிடம் விண்ணபிக்கும் பாடல்.
பதவுரை
இறைவனே! மின்னலின் அழகை ஒத்த உன்னுடைய திருவடியை அடைந்தவர்கள் இந்த அகன்ற உலகைக் கடந்தார்கள்; தேவர்கள் எல்லாம் பொன் போன்ற நிறத்தினை உடைய மலர்களால் போற்றுதலுக்கு உரிய வகையில் அருச்சனை செய்து வணங்கி நின்றார்கள்; கல்லை ஒத்த மனத்தை உடையவனாய்க் உன்னுடைய திருவருள் கூடாமல் உன்னால் கழிக்கப்பட்டுத் துன்பக் கடலில் வீழ்ந்த யான், இனி உன்னை எவ்வாறு அடைய முடியும் எனும் வகையைச் சொல்வாயாக.
விளக்கஉரை
மின் ஏர் அனைய – மின்னலினது அழகை ஒத்த
பொன் ஏர் அனைய மலர் – பொன்னின் அழகையொத்த பூக்கள்; இவை கற்பகத் தரு போன்றவை
அடியார்கள் அடைந்த பெரும்பேற்றினை. `கடையேனாய்` என உயர்திணையாக
உரையாமல் சிறுமை கொண்டிருப்பதை வைத்து ‘கடையாய்’ என அஃறிணையாக உரைத்தார்,
என்நேர் அனையேன் – இழிவினால் எனக்கு ஒப்பார் பிறரின்றி, என்னையே ஒத்த யான்
கருத்து – உடலில் மந்திரத்தால் ஆகுதி செய்தல் பற்றிய பாடல்.
பதவுரை
உடலானது அறுபட்டு போகும் காலத்தில், மெய் என்று கருதிய உடலை விட்டு ஆவி பிரிந்து போய் வேறொரு உடலில் புகும்; ஆகையால் கற்ற அனைத்து கலைகளிலும் இருக்கும் சிறப்புகளை யோசித்து தீர்மானமாக தானியம் கொண்டு ஆகுதியை வளர்ப்பது போல் குருவால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தால் இந்த உடலில் ஆகுதி செய்து மகிழ்ந்து இருக்க வேண்டும்.