
பாடல்
உருவிலி ஊன்இலி ஊனம்ஒன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவனது தனிச் சிறப்பான இயல்புகளையே விரித்துரைத்து அவ்வாறு சிறப்புடைய அவன் மோன சமாதியில் எளியனாய் நிற்றலை உணர்த்தும் பாடல்.
பதவுரை
தன் இயல்பிலேயே உருவம் இல்லாதவனாகவும், தன் அடியவர்கள்பால் உருவம் கொளும் இடத்து அந்த உருவில் புலால் கொள்ளாதவனாகவும், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீக்கம் பெற்றதால் பாசத்தின் காரணமாக ஏற்படும் ஊனம் ஒன்றும் இல்லாதவனாகவும், அருள் உடைய தேவியை தன்னுடைய இல்லாளாக உடையவனும், ஏற்பதும், பெறுவதும் இல்லாமையினால் உலகில் வரும் நன்மை தீமை ஆகியவற்றிக்கு ஆட்படாதவனாகவும், தேவர்களுக்கு தேவனாகவும், ஒப்பில்லாதவனும், அனாதியே ஆகி அத்துவிதமாக கலந்து நிற்பவனாகிய சிவபிரான் வந்து என்னுடைய மனம் எனும் அறிவில் புகுந்தான்.
விளக்கஉரை
- பொருவிலி – ஒப்பிலி, சிவபிரான்