அமுதமொழி – சார்வரி – மார்கழி- 23 (2021)


பாடல்

பாரப்பா மவுனமுடன் நின்று வாழ
பரைஞான கேசரியாள் பாதம் போற்றி
சாரப்பா அவள்பதமே கெதியென்றெண்ணி
சங்கையுடன் மவுனரசந்தானே கொண்டால்
பேரப்பா பெற்றதொரு தவப்பேராலே
பேரண்டஞ் சுற்றிவர கெதியுண்டாகும்
ஆரப்பா அறிவார்கள் மவுனப் போக்கை
அறிந்துகொண்டு பூரணத்தை அடுத்து வாழே

அகத்தியர் சௌமிய சாகரம்

கருத்து – அமிர்த ரசத்தை தவத்தின் மூலம் பருகினால் ஒரு யோகி ஆழமான மவுன நிலையை அடைவார் என்பதைக் குறிக்கும் அகத்தியரின் பாடல்.

பதவுரை

மௌனத்துடன் மனம் ஒன்றி அது பற்றி வாழ மெய்யறிவாக இருக்கும் கேசரியாள் பாதம் போற்றி! அவள் பதத்தினை வாழ்விற்கான கதி என்று எண்ணி, சங்கு எனப்படும் தொண்டைக்குழிப் பகுதியின் வழியாக வரும் நாதம் என்று அழைக்கப்படும் பேச்சினை நிறுத்தி, மௌனம் கொண்டால் அதன் விளைவாக தவ ஆற்றல் கிட்டும்; அந்த தவ ஆற்றலின் காரணமாக பேரண்டம் எனக் கூறப்படும் 1008 அண்டங்களையும் கெவுன சித்தி எனப்படும் வானத்தில் சூட்சும நிலையில் பயணிக்கக்கூடியத் தகுதி பெற்று அண்டங்களைச் சுற்றி வரும் வாய்ப்பு உண்டாகும். மற்றவர்களால் அறிய இயலா இந்த மவுனத்தின் போக்கை அறிந்து கொண்டு மெய்யறிவு எனப்படும் பூரணத்தினைக் கண்டு வாழ்வாயாக. 

விளக்கஉரை

  • மௌன நிலையின் சிறப்புகள்
  • பேரண்டம் – 1008 அண்டங்கள்
  • பரஞானம் – இறையறிவு

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.